Published:Updated:

`கனகராஜ் மறைவு பேரிழப்பு!' - கலங்கிய எடப்பாடி பழனிசாமி

`கனகராஜ் மறைவு பேரிழப்பு!'  - கலங்கிய எடப்பாடி பழனிசாமி
`கனகராஜ் மறைவு பேரிழப்பு!' - கலங்கிய எடப்பாடி பழனிசாமி

சூலூர் எம்.எல்.ஏ கனகராஜின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க-வின் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தவர் கனகராஜ். ஜெ அணிகள் பிரிந்திருந்தபோது,  ஒரு வெடி விபத்தில், 'உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அணி மாறிவிடுவேன்' என்று கூறி தமிழக அரசுக்கு மிரட்டல் விடுத்தார். " என் தொகுதியில் சாலை விரிவாக்கம் செய்யாவிடில், எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்" என்று தெரிவித்திருந்தார். பி.ஜே.பி-யுடன், அ.தி.மு.க கூட்டணி அமைவதற்கு முன்பே, "தாமரையுடன் இலை இணைய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

முதல்வருக்கு தன்னைப் பார்த்து பயம் என்று கருணாஸ் கூறியிருந்ததற்கு, "தைரியம் இருந்தால் கருணாஸ் என்னை அடித்துப் பார்க்கட்டும்" என்று தில் பேட்டி கொடுத்திருந்தார். கடைசியாக, கூட்டணிகுறித்து தே.மு.தி.க, ம.தி.மு.க கட்சிகள்குறித்து இவர் செய்திருந்த விமர்சனம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இப்படி, பரபரப்பு கருத்துகளால் பெயர்பெற்ற கனகராஜ், இன்று காலை நாளிதழ் படிக்கும் போது திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், கனகராஜின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலிசெலுத்தினர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் கனகராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி ஜெயராமன், கனகராஜின் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலிசெலுத்தினார். “கனகராஜின் மறைவு கட்சிக்கும், சூலூர் தொகுதிக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பு” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கனகராஜின் உடல், அரசு மரியாதையுடன்  இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.