Published:Updated:

`பரிசோதனையில் நெகட்டிவ்; தனிமை வார்டு மனஉளைச்சல்!' -கேரள கொரோனா வார்டில் விபரீத முடிவெடுத்த 2 பேர்

திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ்
திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ்

இரண்டு முறை நடந்த பரிசோதனைகளில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் காலையில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்திருந்தனர்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து திரும்பும் கேரள மாநிலத்தவர்களால், அங்கு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 65 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து கேரளத்தில் 1,238 பேர் கொரோனா நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 57 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 905 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தநிலையில் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்த இரண்டு பேர் இன்று ஒரேநாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா

கேரளத்தின் ஆநாடு பகுதியைச் சேர்ந்த உண்ணி என்ற இளைஞர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த மே 29-ம் தேதி அவருக்குக் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் அவர் அங்கிருந்து தப்பிச்சென்றார். பேருந்தில் ஏறி ஊருக்குச் சென்ற அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வழங்கப்பட்ட உடையை அணிந்திருந்தார். இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் போலீஸுக்குத் தகவல் கூறினர். இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலையில் மருத்துவமனையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. மேலும் இரண்டு முறை மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் காலையில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்திருந்தனர். வீட்டுக்குச் சென்ற பிறகு சாப்பிட வேண்டிய மாத்திரைகள் குறித்த விவரங்களை அவரிடம் கூறுவதற்காக நர்ஸ் ஒருவர் தனி வார்டுக்குச் சென்றார். அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக மருத்துவப் பணியாளர்கள் அவரை மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அட்மிட் செய்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மதியம் மரணமடைந்தார். அவர் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் எனவும் மது குடிப்பதற்காக அவர் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் அவருக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டும் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

இது ஒருபுறம் இருக்க திருவனந்தபுரம் மெடிக்கல் கல்லூரி கொரோனா தனிமை வார்டில் இருந்த நெடுமங்காட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் நேற்று மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்திலிருந்து ஊர் திரும்பிய முருகேசனை இன்று காலையில் தனி வார்டில் அட்மிட் செய்துள்ளனர். இதற்கிடையில் இன்று மாலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தற்கொலைகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ``முதன் முறையாக துர்பாக்கியமான சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உடனடியாக ரிப்போர்ட் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதில் தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு