Election bannerElection banner
Published:Updated:

1999 இதே நாள்: வரலாற்றின் கறுப்புப் பக்கம்... மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை!

மாஞ்சோலை படுகொலை
மாஞ்சோலை படுகொலை

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். 1999-ம் ஆண்டு, ஜூன் 8-ம் தேதி கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு போராட்டம் நடத்தினார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் இருக்கும் பல கறுப்பு பக்கங்களுக்கு காவல்துறை காரணமாக இருந்துள்ளது. காவல்துறை தவறுகள் நிகழ்த்தும் போதெல்லாம் அதற்கு துணை போகும் வகையில் அரசுகளும் செயல்பட்டுள்ளன.

2018-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட் சம்பவம் போல அதற்கு 19 வருடங்கள் முன்பு காவல்துறையின் அத்துமீறலால் திருநெல்வேலியில் 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை பற்றிய கோபத்தை பல தளங்களில் தமிழ் மக்களும் படைப்பாளர்களும் பதிவிட்டுள்ளனர். 'பரியேறும் பெருமாள்' படத்தின் ஒரு பாடல் காட்சியில் இச்சம்பத்தை நினைவுகூரும் விதமாக அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சுவரொட்டிகள் ஒட்டுவது போல சில நொடிகள் காட்டப்பட்டிருக்கும். 17 அப்பாவி உயிர்களை பறித்த இச்சம்பவத்தின் பின்னணியை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

தேயிலைத் தோட்டம்
தேயிலைத் தோட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். 1929-ம் ஆண்டு அப்பகுதியில் இருக்கும் 8,374 ஏக்கர் நிலத்தை சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் குத்தகைக்கு எடுத்தது பி.பி.டி.சி (பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்) நிறுவனம். 1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் கீழ் அந்த நிலம் அரசுடைமையாக்கப்பட்டது. ஆளும் காங்கிரஸ் கட்சியிடம் குத்தகையைப் புதுப்பித்துக் கொண்டது பி.பி.டி.சி நிறுவனம். பல தலைமுறைகளாக அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அதை, 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என மக்கள் அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை வைத்தனர். புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரான டாக்டர் கிருஷ்ணசாமி தொழிலாளர்களை ஒன்று திரட்டி,1999-ம் ஆண்டு, ஜூன் 8-ம் தேதி கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு போராட்டம் நடத்தினார்.

போராடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, தங்கள் கணவர்களை விடுவிக்கக் கோரி அடுத்த நாள் போராடிய பெண்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 652 பேரை விடுவிக்க கோரியும் ஊதிய உயர்வு கேட்டும் தொழிலாளர்கள் ஜூலை 23-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி அணிவகுத்தனர். அன்று சுமார் 700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட 5,000 பேர் பங்கெடுத்த அந்த அணிவகுப்பில் புதிய தமிழகம் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக ஐக்கிய ஜமாத் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். எம்.அப்பாவு, ஜே.எம்.ஹாரூண், பி.வேல்துரை, ஆர்.ஈஸ்வரன், கே.கிருஷ்ண சாமி மற்றும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். கலெக்டர் அலுவலகத்துக்கு 50 மீட்டர் முன்னரே அணிவகுப்பு நிறுத்தப்பட்டது. மேலும், ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டன. ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுமதிக்குமாறு அன்றைய கமிஷனர் சைலேஷ் குமார் யாதவிடம் அரசியல் தலைவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

நினைவுதினம் அனுசரிப்பு
நினைவுதினம் அனுசரிப்பு

அவர் மறுக்கவே, தாமிரபரணி ஆற்றின் கரை வழியே ஆட்சியர் அலுவலகம் செல்வதற்கு போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் முயன்றனர். கூட்டத்தைக் கலைக்க காவலர்கள் லத்திகளையும் கற்களையும் கொண்டு தாக்கினர். வானத்தைப் பார்த்தவாறு இரு முறை துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு அச்சமடைந்த மக்கள் தாமிரபரணி ஆற்றைக் கடந்து தப்பிக்க முயன்றனர். அப்போதும் விடாமல் காவலர்கள் அவர்களைத் தண்ணீருக்குள் மூழ்கடித்துக் கொலை செய்தனர். மூழ்கிக் கொண்டிருந்த மக்களைக் காப்பாற்ற முயன்ற பத்திரிகையாளர்களும் அதைப் படம்பிடித்த பத்திரிகையாளர்களும் காவலர்களால் தாக்கப்பட்டனர். உயிரிழந்த 17 பேரில் இரண்டு பெண்களும் ஒரு 2 வயது குழந்தையும் அடக்கம். 35 நிமிடங்கள் நீடித்த இந்தத் தாக்குதலின் சம்பவ இடத்தில் சைலேஷ் குமார் யாதவ் தவிர வேறு எந்த உயர் அதிகாரியும் இல்லை. சம்பவம் நடந்து முடிந்த பின்பே ஆட்சியர் தனவேல் அந்த இடத்துக்கு வந்தார். 21 காவலர்கள் காயமடைந்ததாகவும், மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது. காவலர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை; லத்திகள் மற்றும் புகைக்குண்டுகளை மட்டுமே பயன்படுத்தினார்கள் என மாவட்ட ஆட்சியர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சாத்தான்குளம்: `பென்னி இறந்தபிறகு சாப்டுறதே இல்லை!’ - வீட்டையே சுற்றிவரும் `டாமி’

இந்தச் சம்பவம் நடைபெற்றபோது மத்தியில் பா.ஜ.க-வும் மாநிலத்தில் தி.மு.க-வும் ஆட்சியில் இருந்தன. அப்போதைய தி.மு.க தலைவரான கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். இந்தச் சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மோகனை நியமித்தார். விசாரணையின் முடிவில் 11 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகவும் மற்றவர்கள் காயங்களால் இறந்ததாகவும் நீதிபதி அறிக்கை சமர்ப்பித்தார். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்கள் ஜூலை 28-ம் தேதி அரசால் விடுவிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் பிணத்தை வாங்க உறவினர்கள் மறுத்தனர். ஐந்து நாள்களில் மிகுந்த பாதுகாப்போடு பிணங்களை அரசு புதைத்தது. பிணக் கூறாய்வில் மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், தொழிலாளர்களின் முழு சம்பளக் கோரிக்கையைத் தவிர்த்து மற்ற பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிட்டன என்றும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு கற்களால் தாக்கியதால் மட்டுமே காவலர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும் முதலமைச்சர் மு.கருணாநிதி அப்போது கூறினார்.

மலரஞ்சலி
மலரஞ்சலி

ஆனால், மற்ற வழிகளை அடைத்துத் திட்டமிட்டே மக்களை தாக்கியதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தை நினைவுகூர நினைவுச் சின்னம் அமைக்குமாறு அரசியல் தலைவர்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், 20 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை. வருடா வருடம் ஜூலை 23-ம் தேதி தாமிரபரணி ஆற்றில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெறும்.

லத்திகளை முறையற்று உடல் வன்முறைக்குப் பயன்படுத்துவதும், துப்பாக்கியை என்கவுன்டர் கொலைகளுக்கும் பயன்படுத்துவதும் காலங்காலமாக காவல்துறையின் போக்காகவே இருந்து வருகிறது. இதனால் வரும் களங்கம் பற்றி அவர்களுக்குக் கவலை இருப்பதில்லை. அவர்களின் அதிகாரத்தை பொதுமக்களே பெருமைக்குரியதாய்க் கட்டமைக்கும்போது அவர்களுக்கு இவற்றைப் பற்றிய பயம் என்ன இருக்கப் போகிறது?
கும்பல் படுகொலைகள்… நடுங்க வைக்கும் அமெரிக்க இனவெறி வரலாறு!

ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை கொண்ட எவரும் இந்த மாதிரியான அத்துமீறல்களுக்கு எதிரான குரல்களை எழுப்பிக்கொண்டே இருப்பர். அன்று நூறாக இருந்த இந்தக் குரல், ஆயிரமாக, லட்சமாக இன்று பெருகியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை சம்பிரதாயமாக நினைவுகூரும் நாளாக மட்டுமல்லாமல் அதிகாரத்துக்கெதிரான குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக்கொள்ளும் ஒரு நாளாகவும் இன்று அமையட்டும். அதுவே அவர்களுக்கான நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு