Published:Updated:

சாதனை, துயரம், சர்ச்சை, அதிரடி... 2016 டைரியில் இடம்பிடித்த பளிச் பெண்கள்!

சாதனை, துயரம், சர்ச்சை, அதிரடி... 2016 டைரியில் இடம்பிடித்த பளிச் பெண்கள்!
சாதனை, துயரம், சர்ச்சை, அதிரடி... 2016 டைரியில் இடம்பிடித்த பளிச் பெண்கள்!

சாதனை, துயரம், சர்ச்சை, அதிரடி... 2016 டைரியில் இடம்பிடித்த பளிச் பெண்கள்!

2016-ம் ஆண்டில், பெரும் பொறுப்புகள், விருதுகள், சாதனைகள், துணிச்சல், துயரம், சர்ச்சை என நம் நினைவில் தங்கிய பெண்கள் இவர்கள்!


ஆங் சன் சூகி


மியான்மரில், அரை நூற்றாண்டுக்கு மேலாக நடந்த ராணுவ ஆட்சிக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று, அந்நாட்டின் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், தேசிய ஜனநாயக முன்னணி தலைவராகப் பதவியேற்றார் ஆங் சன் சூகி. 1990ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 492 இடங்களில் 392 இடங்களில் வெற்றியடைந்து பெரும்பான்மை பெற்றாலும், ராணுவச் சட்டம் காரணமாக ஆங் சன் சூகி கட்சி ஆட்சிக்கு வரமுடியாத சூழல் உருவானது. 15 ஆண்டுகள் வீட்டுக்காவல் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரே பெண் அரசியல் தலைவர் சூகி என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ல், அவர் கைகளுக்குக் கிடைத்தது தாமதிக்கப்பட்ட நீதி!

இரோம் சர்மிளா


மணிப்பூரில் ராணுவத்துக்கு வழங்கப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக்கோரி, 2000 ஆண்டில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கி, தொடர்ந்து 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து, உலகின் மிக நீண்ட நாட்கள் உணவுவிரதப் போராளி என்ற சிறப்புப் பெற்றார், இரோம் ஷர்மிளா. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது உண்ணா போராட்டத்தை கைவிட்டவர், தனது போராட்ட முறையை அரசியல் வழியில் தொடரப் போவதாக அறிவித்தார். பூவின் போராட்டம் தொடர்கிறது!

அன்னை தெரசா


தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை மக்களுக்காகவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அர்ப்பணித்தவர் அன்னை தெரசா. அவரின் சேவையைப் பாராட்டி அன்னைக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் இறந்து 19 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், வாடிகன், புனித பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் அவருக்கு புனிதர் பட்டம் அறிவித்தார். யுகங்கள் கடந்த அன்னை!

மம்தா பானர்ஜி


மேற்கு வங்கத்தின் தற்போதைய முதல்வரான மம்தா பானர்ஜி, தனது அரசியல் வாழ்வை 1970களில் தொடங்கி, காங்கிரஸில் முக்கிய பதவிகள் வகித்து, 1997ல் அக்கட்சியில் இருந்து பிரிந்து, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். 2011 தேர்தலில் வெற்றிபெற்று, மேற்கு வங்கத்தில் அதுவரை 34 ஆண்டுகள் தொடர்ந்து வந்த கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் 211 தொகுதிகளில் வென்று, இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தார். இந்திய அரசியலின் முக்கிய ஆளுமைப் பெண்களுக்கு, இந்த ஆண்டு மகத்தான ஆண்டு!

கிரண் பேடி


கிரண் பேடி, இந்திய காவல் பணியில் 1972ம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரி. 2007ம் விருப்பப் பணிஓய்வு பெற்றவர், 2011ல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இணைந்து சிறப்பான பங்காற்றினார். 2016 மே மாதம் புதுச்சேரி மாநில ஆளுநராகப் பொறுப்பேற்று, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் மேடம்!

அர்ச்சனா ராமசுந்தரம்


பெண் ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம், இந்திய - நேபாள எல்லையைப் பாதுகாக்கும் 'சாஷாஸ்ட்ரா சீமா பால்' என்ற  துணை ராணுவப்படையின் தலைவராக இவ்வாண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார். துணை ராணுவப்படையின் தலைவராக பெண் அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது சிறப்புச் செய்தி!

கிரிஜா வைத்தியநாதன்


தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் வீடு, அலுவலகம், ஆகிய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததால், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 'இவருக்கு பதில் இந்த இடத்துக்கு வரப்போவது யார்?' என்ற பெரிய கேள்விக்குறிக்கு புன்னகை பதிலாக வந்து நின்றார், கிரிஜா வைத்தியநாதன். டெல்லியில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், கிரிஜா வைத்தியநாதன் தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பதவியேற்றுக்கொண்டார்!

பி.சுசீலா


மூத்த பின்னணிப் பாடகி பி.சுசீலா, இவ்வருடம் கின்னஸ் சாதனை படைத்தார். ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவர், திரைத்துறைக்கு வந்து 60 வருடங்கள் ஆகிய நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில், 17,695 பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். பல மனங்களை குளிர்வித்த அந்தக் குரலுக்கு, இது மற்றுமொரு கிரீடம்!

பூங்கோதை


மக்காச்சோள சாகுபடியில் சாதனை படைத்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயி பூங்கோதைக்கு, பிரதமர் நரேந்திர மோடி 'கிர்ஷி கர்மான்' விருதும் 2 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கியதுடன், குனிந்து, அவர் பாதங்கள் நோக்கி கைநீட்டி வணங்கினார். கணவர் இறந்த பிறகு மனம் தளராமல் தான் மேற்கொண்ட முயற்சியில் சாதனை படைத்த பூங்கோதை, தமிழகத்துக்கும் பெரம்பலூர் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த பசுமைப் பெண்!

ஜெயந்தி


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தி வீர, தீர, சாகச செயல்களுக்காக தமிழக அரசு வழங்கும் இந்த வருடத்துக்கான 'கல்பனா சாவ்லா' விருது பெற்ற பெண். இவர் சேந்தமங்கலம் பகுதி மின் மயானப் பூங்காவின் மேலாளர். மயானத்தின் தோட்டப் பராமரிப்பில் இருந்து சடலங்கள் எரிக்கும் பணிவரை செய்துவரும் ஜெயந்தி, பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!

 பிரீத்தி மற்றும் ஜெயஸ்ரீ   


சென்னை, மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு துவங்கப்பட, கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட ரயிலை பிரீத்தியும், ஆலந்தூரில் இருந்து புறப்பட்ட ரயிலை ஜெயஸ்ரீயும் இயக்கினர். 2013ம் ஆண்டு சென்னை, மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த இவர்களுக்கு, 18 மாத பயிற்சிக்குப் பிறகு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. மெட்ரோ ரயில் என்ற வரலாற்று நிகழ்வில், பெண்களின் பங்களிப்பு கண்ணுக்கு அழகு!

சாக்‌ஷி மாலிக்


ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தவர் சாக்ஸி மாலிக். ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கே சொந்தம். ஃப்ரீ ஸ்டைல் 58 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷிக்கு, மத்திய அரசு கேல் ரத்னா விருது வழங்கி கௌரவித்தது!

தீபா கர்மாக்கர்


ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் அடியெடுத்து வைத்த முதல் இந்திய வீராங்கனை, தீபா கர்மாக்கர். இவர் அந்தரத்தில் குட்டி கரணம் அடித்ததை தேசம் வியந்து ரசித்துக்கொண்டிருக்க, இறுதிப் போட்டியில் மயிரிழையில் வாய்ப்பை இழந்தவர், நான்காம் இடம் பிடித்தார். இருந்தாலும், இந்தியர்களின் மனங்களில் வீர மங்கையாக விஸ்வரூபம் எடுத்தார். ஒலிம்பிக்கில் தன் முதல் முயற்சியிலேயே இறுதிப் போட்டிக்குச் சென்ற தீபாவுக்கு, கேல் ரத்னா விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு!

பி.வி.சிந்து


ரியோ ஒலிம்பிக் இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து. இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையுடன் போட்டியில் கலந்துகொண்டவர், இரண்டாம் இடம் பிடித்து, இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். மத்திய அரசின் கேல் ரத்னா விருதுடன், பல பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்தன சிந்துவுக்கு!

தீபா மாலிக்


ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் குண்டு எறிதல் போட்டியில்  இந்திய வீராங்கனை தீபா மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் தீபா மாலிக்!

சுவாதி


சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய, பரபரப்பாகப் பேசப்பட்ட அகோர சம்பவம் இது. பலகட்ட விசாரணைகள், குழப்பங்கள், சந்தேகங்கள் என நான்கு மாதங்கள் மீடியாவில் தலைப்புச் செய்தியாக இருந்தார் சுவாதி. இந்த வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, வழக்கு முடிவுபெற்றது. ஆனால், சுவாதிகள் தொடர்கதை ஆனது இந்தச் சமூகத்தின் அவலம், அவமானம்!

 ஜெயலலிதா   


தமிழக அரசியலில் ஆறாவது முறை முதலமைச்சராக பதவியேற்றார், ஜெயலலிதா. பதவியேற்ற கையோடு, விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி, 100 யூனிட் மின்சாரம் இலவசம், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், டாஸ்மாக் கடை திறப்பு நேரம் குறைப்பு உள்பட 5 கோப்புகளில் முதலில் கையெழுத்திட்டார். செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தும் அது பயனளிக்காமல் போக, டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். தங்கள் முதல்வரை இழந்து தமிழகமே ஸ்தம்பித்தது. இந்த இரும்புப் பெண்மணியின் இழப்பு, தமிழக அரசியலில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் ஈடுசெய்ய முடியாதது!

சசிகலா   


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின், தமிழக அரசியலில் சடசடவென காட்சிகள் மாறின. 'அம்மாவுக்கு பின் யார்?' என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக கட்சியிலும், தமிழக அரசியலிலும் முக்கியப் புள்ளியாக முன்னிறுத்தப்பட்டு வரும் சூழல் இது.  'சின்னம்மா' என்ற வார்த்தை வைரல் ஆக, 2017 இவருக்கு எப்படி இருக்கும் என்பது முக்கியக் கேள்வியாக நிற்கிறது!

சினிமா, எழுத்து, அரசியல் என ஒவ்வொரு துறையிலும் 2016 ஆம் ஆண்டில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது.

- உ. சுதர்சன் காந்தி (மாணவப் பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு