Published:Updated:

ஈரோடு: `திடீர் மாரடைப்பு’ - இறக்கும் தறுவாயிலும் பயணிகளைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர்

ஓட்டுநர் செல்வராஜ்
ஓட்டுநர் செல்வராஜ்

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரியும் தறுவாயிலும், பேருந்தை ஓரமாக நிறுத்தி, பயணிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்வராஜ்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை அடுத்த மணியன்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (52). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கவுந்தப்பாடி கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார். கவுந்தப்பாடியிலிருந்து கே 1 என்ற வழித்தடத்தில் இயங்கும் பேருந்தில் ஓட்டுநராக இருந்த செல்வராஜ், நேற்று காலை வழக்கம்போல பணிக்கு வந்திருக்கிறார். காலை 7:25 மணியளவில் கவுந்தப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெருந்துறை நோக்கிப் பேருந்தை ஓட்டிச் சென்றிருக்கிறார். சுமார் 13 கி.மீ பயணத்துக்குப் பிறகு வெள்ளாங்கோயில் என்னும் ஊரில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு வண்டியை எடுத்த சில நொடிகளிலேயே செல்வராஜுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.

தன்னுடைய உயிர் பிரியும் தறுவாயிலும் பேருந்திலிருந்த 20 பயணிகளைக் காப்பாற்றிவிட்டு, ஓட்டுநர் செல்வராஜ் உயிரிழந்துள்ளார்.

நெஞ்சைக் கையில் பிடித்தபடியே நடத்துனர் கனகசபாபதியை அழைத்து விஷயத்தைச் சொன்ன செல்வராஜ், பயணிகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென பேருந்தை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு மயங்கி விழுந்திருக்கிறார். உடனே நடத்துனர் கனகசபாபதி மற்றும் பயணிகள் சிலர் கார் ஒன்றை வரவழைத்து செல்வராஜை, அருகிலுள்ள சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பால் தன்னுடைய உயிர் பிரியும் தறுவாயிலும் பேருந்திலிருந்த 20 பயணிகளைக் காப்பாற்றிவிட்டு, ஓட்டுநர் செல்வராஜ் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Vikatan

பேருந்திலிருந்த நடத்துனர் கனகசபாபதியிடம் பேசினோம். ``ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி செல்வராஜும் நானும் ஒண்ணா ஒரே வண்டியில வேலை பார்த்திருக்கோம். அதுக்கப்புறம் நான் வேற ரூட்டுக்கு கண்டக்டரா போயிட்டேன். அதுக்குப் பின்னாடி அடிக்கடி சந்திச்சுக்கிட்டாலும், ரெண்டு வருஷத்துக்கு அப்புறமா நேத்துதான் அவர்கூட டூட்டிக்குப் போனேன். அப்படியிருக்க செல்வராஜுக்கு நடந்ததை இன்னும் என்னால நம்ப முடியலை. காலையிலகூட முதல் ட்ரிப் எடுக்குறதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டோம். நல்லாத்தான் இருந்தாரு. எல்லார்கிட்டயும் கலகலப்பா பேசுவாரு. நல்ல மனுஷன். ‘நெஞ்சு ஒரு மாதிரி வலிக்குது மாப்ள’ன்னு அவர் சொன்னது இன்னும் எனக்கு கேட்டுக்கிட்டே இருக்கு” என வருந்தினார். இறப்பிலும் மனிதநேயத்தை விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறீர்கள் செல்வராஜ்!

அடுத்த கட்டுரைக்கு