Published:Updated:

`படித்தவர்களை அரசியலுக்கு வரத் தூண்டியவர்!’ - பி.ஹெச்.பாண்டியனுக்கு அ.தி.மு.க-வினர் கண்ணீர் அஞ்சலி

பி.ஹெச்.பாண்டியன்
பி.ஹெச்.பாண்டியன் ( எல்.ராஜேந்திரன் )

அ.தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவரான பி.ஹெச்.பாண்டியன் மறைவுக்கு அ.தி.மு.க-வினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பி.ஹெச்.பாண்டியன் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் சேரன்மகாதேவி தொகுதியிலிருந்து 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் அ.தி.மு.க சார்பாகத் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1980 முதல் 1985-ம் ஆண்டு வரை தமிழக சட்டமன்றத் துணைத் தலைவராகப் பதவி வகித்தார். 1985-ம் ஆண்டு முதல் 1989 வரை எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

சட்ட நுணுக்கங்கள் அறிந்தவரான அவர் சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் விளங்கினார். 1999-ம் ஆண்டு எம்.பி-யாகவும் பதவி வகித்துள்ளார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா, ஜானகி எம்.ஜி.ஆர் ஆகியோர் தலைமையில் இரு பிரிவுகளாகக் கட்சி உடைந்தபோது, ஜானகி எம்.ஜி.ஆர் தலைமையை வலுப்படுத்தினார். 1989-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அணியில் வெற்றி பெற்ற ஒரே உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்.

பி.ஹெச்.பாண்டியன்
பி.ஹெச்.பாண்டியன்
எல்.ராஜேந்திரன்

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வில் அமைப்புச் செயலாளராக இருந்தார். ஜெயலலிதாவுக்கு பி.ஹெச்.பாண்டியன் மீது நம்பிக்கை அதிகம் இருந்தது. அதனால் பி.ஹெச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியனுக்கு நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக்கினார். நாடாளுமன்றத் தேர்தலின்போது தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் சிந்தியா பாண்டியனுக்கு ஜெயலலிதா வழங்கினார்.

சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற பி.ஹெச்.பாண்டியன், வழக்கறிஞர் பணியில் 50 ஆண்டுகாலம் சிறப்பாகப் பணியாற்றினார். ஜெயலலிதா தன்னோடு இருந்த சசிகலாவை வீட்டைவிட்டு வெளியேற்றியபோது, சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கடுமையாக விமர்சித்தார். பின்னர் சசிகலாவை ஜெயலலிதா மீண்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டபோது, சசிகலாவால் கட்சியிலிருந்து பி.ஹெச்.பாண்டியன் ஓரங்கட்டப்பட்ட அவலமும் நடந்தது. அவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் கட்சியிலேயே நீடித்தார்.

அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழக்கு, கிரிமினல் வழக்கு என்று ஏராளமான வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அன்புக்குரியவராக இருந்த அவர், அ.தி.மு.க-வில் தலைமை நிலையச் செயலாளராகவும், சட்ட ஆலோசகராகவும், அகில உலக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஓ.பி.எஸ் நடத்திய தர்ம யுத்தத்துக்கு பி.ஹெச்.பாண்டியன் உறுதுணையாக இருந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பி.ஹெச்.பாண்டியன், மீண்டும் அ.தி.மு.க ஒருங்கிணைந்த பின்னர் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

பி.ஹெச்.பாண்டியன்
பி.ஹெச்.பாண்டியன்

பி.ஹெச்.பாண்டியன் குறித்து அ.தி.மு.க-வினர் கூறுகையில், "எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியான அவர் கட்சிக்காகவும் கட்சித் தொண்டர்களுக்காகவும் செயல்பட்டவர். தொண்டர்கள் பலருடைய சொந்த வழக்குகளை பணம் கூட வாங்காமல் நடத்தி வெற்றிபெற்றுக் கொடுத்தவர். கட்சியின் உயரிய பொறுப்புகளை வகித்த அவரது மறைவு வருத்தமாக இருக்கிறது" என்றார்கள்.

பி.ஹெச்.பாண்டியனிடம் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவரும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை கூறுகையில், "அரசியலில் கம்பீரத்துக்குச் சொந்தமானவராக விளங்கியவர், பி.ஹெச்.பாண்டியன். சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு அழகு சேர்த்தவர். எனக்கு அவரை கல்லூரிக் காலத்திலிருந்தே தெரியும். எதற்காகவும் தன்னுடைய சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காதவர். என்னைப் போன்ற பலர் சட்டம் படிப்பதற்கு உந்துதலாக இருந்தவர் அவர்தான்.

`படித்தவர்களை அரசியலுக்கு வரத் தூண்டியவர்!’ - பி.ஹெச்.பாண்டியனுக்கு அ.தி.மு.க-வினர் கண்ணீர் அஞ்சலி

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர். எங்களுக்கெல்லாம் தெய்வம்போல இருந்த எம்.ஜி.ஆர், பி.ஹெச்.பாண்டியன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். அரசியலுக்கு வருவதற்கு படித்தவர்கள் தயங்கிய காலகட்டத்திலேயே அரசியலில் அடியெடுத்து வைத்ததன் மூலம் படித்த பலரும் அரசியலுக்கு வருவதற்குக் காரணமாக இருந்தார். அவரது மறைவு அ.தி.மு.க-வுக்கும் தென் மாவட்ட மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு