Published:Updated:

`அவர் தீர்ப்புகளே ஓர் ஆராய்ச்சிப் புத்தகம்தான்' - ஏ.ஆர்.லட்சுமணன் மறைவால் கலங்கும் வழக்கறிஞர்கள்!

ஏ.ஆர்.லட்சுமணன்
ஏ.ஆர்.லட்சுமணன்

ஒவ்வொரு வழக்கிலும் தீர்ப்பளிக்கும்போது நன்கு ஆராய்ச்சி செய்துதான் உத்தரவைப் பிறப்பிப்பார். நீதித்துறையில் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்தெடுத்ததில் அவருடைய பங்கு மிக முக்கியமானது.

நீதித்துறை வட்டாரத்தைக் கலங்கவைத்திருக்கிறது முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணனின் மரணம். இவர் மனைவி மீனாட்சி இறந்த சில நாள்களிலேயே மாரடைப்பு காரணமாக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், தனது பயணத்தை முடித்துக்கொண்டார்.

தேவகோட்டையில் வணிகக் குடும்பத்தில் பிறந்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று நீதிபதி பதவியை அலங்கரித்த பெருமைக்குரியவர் ஏ.ஆர்.லட்சுமணன். ``1989-ம் ஆண்டு தி.மு.க அரசில் அரசு பிளீடராக இருந்தார். தன்முன் எந்த வழக்கு வந்தாலும், அதை நன்கு விசாரித்து தீர்ப்பளிக்கக்கூடியவராக இருந்தார். அவரின் சட்ட அறிவு பொதுமக்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில், அவரை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்தார் கலைஞர் கருணாநிதி. அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். இவருடைய பணிக்காலத்தில் எந்தவோர் இடைக்கால உத்தரவு வழங்கினாலும், அதற்கான காரணத்தைக் கூறி மற்ற நீதிபதிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர்" என விவரித்த வழக்கறிஞர் குமாரதேவன்,

வழக்கறிஞர் குமாரதேவன்
வழக்கறிஞர் குமாரதேவன்

`` ஒவ்வொரு வழக்கிலும் தீர்ப்பளிக்கும்போது நன்கு ஆராய்ச்சி செய்துதான் உத்தரவைப் பிறப்பிப்பார். நீதித்துறையில் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்தெடுத்ததில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. அவருடைய தீர்ப்புகள் பலவும் உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டன. பின்னர், கேரள உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

அங்கு லட்சுமணனும் நாராயண க்ரூப் என்பவரும் இணைந்து வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. `பொது இடங்களில் புகைபிடிப்பது தவறு. அடுத்தவர்களின் உடல்நலனைக் கெடுப்பதற்கு உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை' எனக் கூறி அதற்குத் தடைவிதித்தார். இன்றைக்கு பொதுஇடங்களில் புகைபிடிப்பதற்கு உள்ள தடைக்கு முன்னுதாரணமே லட்சுமணன்தான்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

பிரசாந்த் பூஷணுக்கும் நீதிபதிக்கும் இடையில் சிக்கியிருக்கும் அந்த `மன்னிப்பு'... ஏன், எதற்காக?!

தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட லட்சுமணன், அங்கிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். அவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் காலத்தில் அவரை விமர்சனம் செய்து ஊடகங்கள் எழுதின. `என்னை விமர்சனம் செய்வது எந்த வகையில் நியாயம்?’ என நீதிமன்றத்திலேயே அவர் அழுதது, விவாதப் பொருளானது.

`` நீதியரசர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் உதாரணமாக இருந்தார். நிலக்கரி இறக்குமதி ஊழலை விசாரித்ததற்காக, அவரின் மருமகன்மீது சாராயக் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போதுகூட எதற்கும் அஞ்சாமல் நீதியை நிலைநாட்டியவர். சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்தபோது, பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர விரும்பினார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தொடக்கம் முதலே இடஒதுக்கீட்டுக் கொள்கையில் உறுதியாக இருந்தார். ஏராளமான சட்டப் புத்தகங்களை எழுதினார். அவருடைய கருத்துகள் இன்றைய வழக்கறிஞர்களுக்குப் பாடமாக உள்ளன. முல்லைப்பெரியாறு ஆய்வுக்குழுவில் ஒருவராக இருந்தார். அதேபோல், வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும் லட்சுமணன் காட்டிய அக்கறை, மிக முக்கியமானது" என்கிறார் வழக்கறிஞர் கண்ணதாசன்.

போய் வாருங்கள் ஏ.ஆர்.எல்!

அடுத்த கட்டுரைக்கு