Published:Updated:

`கிரகப்பிரவேசம் முடிந்த 3 வது நாள்' - லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி

ராணுவ வீரர் பழனி
ராணுவ வீரர் பழனி

லடாக் பகுதியில் பிரச்னை நிலவி வந்ததால் ராணுவ வீரர் பழனிக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இதனால் கிரகப்பிரவேசத்துக்கு பழனி வர இயலவில்லை. இந்நிலையில் பழனியின் மரனச் செய்தி அவர்களது குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவம் - சீன ராணுவம் இடையேயான மோதலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார். இவரது உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் நிலையில் பழனியின் சொந்த ஊரில் சோகம் நிலவுகிறது.

வீர மரணம் அடைந்த இந்திய ராணுவம் ஹவில்தார் பழனி.
வீர மரணம் அடைந்த இந்திய ராணுவம் ஹவில்தார் பழனி.

இந்திய, சீன எல்லைப் பகுதியில் கடந்த மாதம் முதலே தொடர்ச்சியாகப் பதற்றம் நிலவிவந்தது. லடாக் பகுதியில் இந்திய கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, தொடர்ந்து அங்கு படைகளைக் குவித்து வந்தது. முன்னதாக சீனா ராணுவத்தின் ஹெலிகாப்டர்களும் லடாக் பகுதியில் பறந்ததால் கடும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளைக் குவித்தது. தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் இந்திய சீன, ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எல்லையில் குவிக்கப்பட்ட படைகள் சற்று பின்வாங்கின. இதனால் எல்லையில் நிலவிவந்த பதற்றமான சூழல் கடந்த சில நாள்களில் குறைந்துவந்தது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இந்தநிலையில், இன்று காலை கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மிகக் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இந்தத் தாக்குதலில் இந்தியா தரப்பில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு ராணுவ வீரர்களும் மரணம் அடைந்தனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனியும் ஒருவர்.

வீரமரணம் அடைந்த பழனிக்கு வானதிதேவி என்ற மனைவி மற்றும் பிரசன்னா என்ற 10 வயது மகன் மற்றும் திவ்யா என்ற 8 வயது மகளும் உள்ளனர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பழனி கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். பழனியின் சகோதரர் இதயக்கனியும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரத்தை அடுத்துள்ள கழுகூராணி கஜினி நகர் பகுதியில் புதிய வீடு கட்டியுள்ளனர் பழனி குடும்பத்தினர். கடந்த 13-ம் தேதி இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நடந்துள்ளது. லடாக் பகுதியில் பிரச்னை நிலவி வந்ததால் பழனிக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இதனால் கிரகப்பிரவேசத்துக்கு பழனி வர இயலவில்லை. இந்நிலையில், பழனியின் மரணச் செய்தி அவர்களது குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய எல்லை
இந்திய எல்லை

வீர மரணம் அடைந்த பழனியின் உடல் நாளை மதுரைக்கு விமானத்தில் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊரான கடுக்கலூர் கிராமத்துக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ராஜஸ்தானில் பணியாற்றி வரும் பழனியின் சகோதரர் இதயக்கனியும் சொந்த ஊர் வருகிறார். சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் தாய் நாட்டுக்காகத் தன்னுயிரைக் கொடுத்து வீர மரணம் அடைந்த பழனியின் உயிரிழப்பு அவரது சொந்த ஊரான கடுக்கலூர் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு