Published:Updated:

`தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட மதுரை இளம் வீரர்’ -அதிர்ச்சியில் உறைந்த வெலிங்டன் அதிகாரிகள்

ராணுவ வீர்கள்
ராணுவ வீர்கள்

குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்த இளம் வீரர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவப் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் என்று அழைக்கப்படும் இந்த ராணுவப் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தகுதிபெற்ற இளைஞர்களுக்கு 46 வார காலம் பயிற்சியளித்து சிறந்த வீரர்களை உருவாக்குகின்றனர்.

ராணுவ வீரர்கள், காவல்துறையினர்
ராணுவ வீரர்கள், காவல்துறையினர்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் இந்தப் பயிற்சி மையத்திலும் பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த முகாமில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயிற்சியில் இணைந்த பயிற்சி வீரர் ஒருவர் நேற்று மாலை திடீரென காணாமல் போயுள்ளார். அவரை முகாம் அலுவலர்கள் தேடிவந்துள்ளனர். இன்று காலையும் தொடர் தேடுதலில் ஈடுபட்டுவந்துள்ளனர். இந்த நிலையில் முகாமைவிட்டு சற்று தொலைவில் உள்ள பிளாக் பிரிட்ஜ் பகுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பத் குமார்
சம்பத் குமார்

மேலும் அங்கிருந்த ஒரு மரத்தின் கிளையில் தூக்கிலிட்டு மண்டியிட்ட நிலையில் சடலமாக இருப்பதைப் பார்த்துள்ளனர். உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் இறந்த பயிற்சி வீரர் மதுரையைச் சேர்ந்த சம்பத்குமார் என்பதும் இவர் கடந்த ஆண்டு இறுதியில் தேர்வில் வெற்றிபெற்று பயிற்சி பெற்றுவந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மதுரையில் வசிக்கும் இவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பத் குமாரின் இறப்பிற்கான காரணம் குறித்து வெலிங்டன் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு