Published:Updated:

சுஷ்மா... இனி ஓய்வெடுப்பார்!

பிரதமருடன் சுஷ்மா ஸ்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
பிரதமருடன் சுஷ்மா ஸ்வராஜ்

‘மோடி ஜி, நான் வாழும் நாளில் இந்த ஒரு நாளுக்காகக் காத்திருந்தேன்!’

சுஷ்மா... இனி ஓய்வெடுப்பார்!

‘மோடி ஜி, நான் வாழும் நாளில் இந்த ஒரு நாளுக்காகக் காத்திருந்தேன்!’

Published:Updated:
பிரதமருடன் சுஷ்மா ஸ்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
பிரதமருடன் சுஷ்மா ஸ்வராஜ்

‘மோடி ஜி, நான் வாழும் நாளில் இந்த ஒரு நாளுக்காகக் காத்திருந்தேன்!’ - ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியபோது, சுஷ்மா ஸ்வராஜ் கடைசியாக ட்விட்டரில் போட்ட பதிவு இது. அதன் பிறகு நெஞ்சுவலியால் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, 70 நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு நினைவு திரும்பாமலேயே இறந்துபோனார்.

பொட்டு நிறைந்த நெற்றியும், புன்னகை தவழும் முகமும்தான் சுஷ்மாவின் அடையாளங்கள். யாாிடமும் கடிந்து பேசாத பண்பு, அன்பாகப் பழகும் குணம் அவருக்கான தனித்துவம். பி.ஜே.பி-யின் மூத்த தலைவராக இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாதவர். வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, அந்தத் துறைக்கு அடையாளம் கொடுத்தவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனிதநேயத்துடன் நடந்துகொள்ளும் அவரின் அணுகுமுறை, உலகத் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் கூப்பிட்ட குரலுக்கு உதவியவர். ட்விட்டர் வழி கோரிக்கைகளுக்கு பதில் அளித்து, உடனடி நடவடிக்கைகளில் இறங்கியவர். ட்விட்டரில் 1.30 கோடிக்கும் மேலானவர்கள் அவரைப் பின்தொடர்ந்தாலும், அவர் யாரையும் பின்தொடரவில்லை என்பதே அவரின் ஆளுமைக்கு சாட்சி.

‘‘அரசியலில் பெண்கள் எட்ட முடியாத உயரங்களைத் தொட்டாலும், மக்களின் நண்பனாகவே இருந்தார்’’ என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட பிறகு, உடல் உபாதைகளைப் பொருட்படுத்தாமல் அமைச்சராக வலம்வந்தார். தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழில் பேச முயல்வார். ஒரு நிமிடம் தாக்குப்பிடிக்கும்விதத்தில் தமிழில் கொஞ்சிப் பேசுவார். சென்னை வரும்போது வெங்காய தோசையை ஒருகை பார்க்காமல் விட மாட்டார். சாம்பார் சட்னியுடன் ருசித்துச் சாப்பிடும் சுஷ்மா, தமிழ் உணவின்மீதும் கலாசாரத்தின்மீதும் தனி பற்றுகொண்டிருந்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது இலங்கைத் தமிழர் நலனில் அக்கறைகொண்டு, இலங்கையில் ஒருசில முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக, வீடு கட்டிக் கொடுப்பது, தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தின் நடமாட்டத்தைக் குறைக்கக் கோரியது என்று சிலவற்றைச் செய்தும் காண்பித்தார். தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போதும், சிறைப்பிடிக்கப்படும்போதும், அவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கைகளில் இறங்குவார். 2017-ல் ரஷ்யாவிலிருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த எவாஞ்சலின் என்கிற இளைஞர், டெபிட் கார்டு பிரச்னையில் சிக்கி, காஞ்சிபுரம் குமரகோட்டம் கோயில் வாசலில் பிச்சையெடுத்தது செய்தியானபோது, உடனடியாக ட்விட்டரில் ‘என் துறை அலுவலர்கள் உதவுவார்கள்’ என்று ஆறுதல் கூறினார்.

அத்வானி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா போன்ற சீனியர்களையெல்லாம் ஓரங்கட்டிய மோடி, சுஷ்மா ஸ்வராஜை மட்டும் தன் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார். அந்த அளவுக்கு தவிர்க்க முடியாதவராகத் தன்னை நிலைநிறுத்தினார் சுஷ்மா. இவருடைய காலத்தில் மத்திய வெளியுறவுத்துறையின் செயல்பாடுகள் உலக நாடுகளால் வியந்து பார்க்கப்பட்டது. வெளியுறவுத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர்வரை அனைவரையும் அறிந்து வைத்திருந்தார்.

சுஷ்மா... இனி ஓய்வெடுப்பார்!

1999-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், கர்நாடகாவில் உள்ள பெல்லாரி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தியை எதிர்த்து பி.ஜே.பி-யால் களம் இறக்கப்பட்டார் சுஷ்மா. அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அன்று தொடங்கிய சோனியா எதிர்ப்பை, அவர் வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தார். 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சோனியா காந்தி பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் இருந்தன. அப்போது, ‘‘100 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி நடந்தால், தலையை மொட்டையடித்து, வெள்ளைச்சேலை கட்டிக்கொண்டு வாழ்வேன்’’ என்று வெறுப்பை உமிழ்ந்தார் சுஷ்மா. அவரே 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தின்போது சோனியாவை ‘வசீகரமான தலைவர்’ என்று பாராட்டவும் செய்தார்.

சுஷ்மாமீது சில குற்றச்சாட்டுகளும் படிந்திருக்கின்றன. ஊழல் விவகாரத்தில் தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல்-ன் முன்னாள் தலைவர் லலித் மோடி இங்கிலாந்து செல்வதற்காக விசா வழங்கக் கோரி சுஷ்மா ஸ்வராஜ் அனுப்பிய இ-மெயில், சர்ச்சையானது, ‘‘மனிதாபிமான அடிப்படையில் உதவினேன்’’ என்று அவர் சொன்னது, முரணாகயிருந்தது. ‘கர்நாடகாவில் சட்ட விரோத சுரங்கத் தொழிலை நடத்திவருவதாக குற்றம் சாட்டப்படும் ரெட்டி சகோதரர்களுக்கு அரசியல் ரட்சகராக சுஷ்மா இருந்தார். ரெட்டி சகோதரர்களின் இல்ல விழாக்களில் கலந்துகொண்டார். எடியூரப்பாவுக்கு ரெட்டி சகோதரர்கள் நெருக்கடி கொடுத்தபோது, சுஷ்மாவின் ஆதரவில் அவர்கள் இருந்தனர்’ என்றெல்லாம் சுஷ்மா மீது புகார்கள் எழுந்தன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘‘போட்டியிடவில்லை. சற்று ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார். இப்போது, நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார்.