Published:Updated:

`10 மாதங்களாக சம்பளம் இல்லை; நடந்தே வந்தார்!’- BSNL அலுவலகத்திலேயே உயிரை மாய்த்துக்கொண்ட ஊழியர்

10 மாதங்களாகச் சம்பளம் தராத காரணத்தினால், நிலம்பூரில் பி.எஸ்.என். எல் ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட ராமகிருஷ்ணன்
தற்கொலை செய்து கொண்ட ராமகிருஷ்ணன் ( manorama )

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சில வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சம்பளம் போடுவதற்குக்கூட நிதி இல்லாமல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் திணறுவதாகச் சொல்லப்படுகிறது. ஒன்றரை லட்சம் பேர் பணி புரியும் நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையாக, தானாக முன் வந்து ஓய்வு பெறும் திட்டத்தைக் கூடுதல் பண பலன்களோடு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த 10 மாதங்களாக சம்பளம் தராத காரணத்தினால் கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூரில் பி.எஸ்.என்.எல் ஊழியர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பி.என்.என். அலுவலகத்தில் மக்கள் போராட்டம்
பி.என்.என். அலுவலகத்தில் மக்கள் போராட்டம்

மாற்றுத்திறனாளியான ராமகிருஷ்ணன் (வயது 52) என்பவர் நிலம்பூர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் 30 வருடங்களாகப் பகுதி நேர துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றினார். பல மாதங்கள் சம்பளம் அளிக்கப்படாத நிலையில், அலுவலகத்துக்கு பஸ்சில் செல்ல பணம் இல்லாததால், பல கிலோ மீட்டர் தொலைவு நடந்தே சென்று வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போலப் பணிகளைச் செய்த ராமகிருஷ்ணன், அலுவலகத்தில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அதிகாரிகள் அலுவலகத்துக்கு வந்து பார்த்த போதுதான் ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. விஷயம் வெளியே தெரிந்து, நிலம்பூர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். `பி.எஸ்.என்.எல் உயர் அதிகாரிகள் வந்த பின்னரே, ராமகிருஷ்ணனின் உடலை இறக்க அனுமதிப்போம்' என்று போலீஸாரிடத்தில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மலப்புரம் மாவட்ட பி.எஸ்.என்.எல் உயர் அதிகாரிகள் நிலம்பூர் வந்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். `ராமகிருஷ்ணன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் மலப்புரம் மாவட்ட பி.எஸ்.என்.எல் ஊழியர்களிடம் நிதி திரட்டி ராமகிருஷ்ணனின் குடும்பத்துக்கு வழங்கப்படும்' எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல்

பின்னர், ராமகிருஷ்ணன் உடல் அவரின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ராமகிருஷ்ணனுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். ராமகிருஷ்ணன் போல பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணி புரியும் ஆயிரக்கணக்கான பகுதி நேர ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருவதாகச் சொல்லப்படுகிறது.