Published:Updated:

புதுச்சேரி: மின்துறை அலட்சியத்தால் பறிபோன உயிர்? - உதவி பொறியாளர்மீது காவல் நிலையத்தில் புகார்

புதுச்சேரி மின்துறை

மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த இரும்புப் பட்டையில் பாய்ந்த மின்சாரத்தால் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி: மின்துறை அலட்சியத்தால் பறிபோன உயிர்? - உதவி பொறியாளர்மீது காவல் நிலையத்தில் புகார்

மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த இரும்புப் பட்டையில் பாய்ந்த மின்சாரத்தால் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
புதுச்சேரி மின்துறை

புதுச்சேரியில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. அதன் காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல புதுச்சேரி – கடலூர் சாலையில் அமைந்திருக்கும் அரியாங்குப்பம் மேம்பாலத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் ஊர்ந்தபடி சென்றுகொண்டிருந்தன. அப்போது திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துரைச் சேர்ந்த மணி, தன் நண்பர் ஜெகதீஷுடன் இருசக்கர வாகனத்தில் அந்தப் பாலத்தில் சென்றுகொண்டிருந்தார்.

தன் கால்களைப் பாலத்தின் தரையில்வைத்து வண்டியை நகர்த்திக்கொண்டு சென்றவர், பாலத்தின் இணைப்புக்காக போடப்பட்டிருந்த இரும்புப் பட்டையின்மீது கால் வைத்தார். அப்போது அதில் சென்றுகொண்டிருந்த மின்சாரம் தாக்கியதில் மணி தூக்கி வீசப்பட்டார். வாகனத்தில் மின்சாரம் பாய்வதை உணர்ந்த ஜெகதீஷ் வண்டியிலிருந்து எகிறிக் குதித்திருக்கிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அங்கு சென்றுகொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே இரும்புப் பட்டையில் மின்சாரம் செல்வதை உணர்ந்துகொண்டு சுதாரித்த அவர்கள், அந்தப் பக்கம் யாரையும் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். அதனால் மேலும் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமானது. அதேபோல பாலத்தின் மின்சார இணைப்பும் உடனடியாக துண்டிக்கப்பட்டது.

மின்சாரம் தாக்கியதால் பலி
மின்சாரம் தாக்கியதால் பலி

தூக்கிவீசப்பட்ட இருவரையும் மீட்ட வாகன ஓட்டிகள், அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், மணி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறி ஜெகதீஷுக்கு சிகிச்சையளித்தனர். இருவரும் புதுச்சேரியில் தங்கியிருந்து சோபா சரி செய்யும் பணி செய்துவந்திருக்கின்றனர். அரியாங்குப்பத்தில் ஒரு வீட்டில் சோபாவை சரிசெய்துவிட்டு திரும்பும்போதுதான் இந்த விபத்தில் சிக்கியிருக்கின்றனர். ஆகஸ்ட் 31-ம் தேதி பெட்ரோல் இல்லாததால் இருசக்கர வாகனத்தை தள்ளிச் சென்ற ஒருவருக்கு இந்தப் பாலத்தில் இதே போன்று மின்சாரம் தாக்கியிருக்கிறது. அப்போது செல்வராஜ் என்பவர் மின்துறை உதவி பொறியாளருக்குத் தகவல் கூறியிருக்கிறார். ஆனால் அவரும், மின்துறை ஊழியர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், மணி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். அரியாங்குப்பம் மேம்பாலத்தில் இருக்கும் மின்கம்பங்கள் சேதமடைந்து, மின்கம்பிகள் வெளியில் தொங்கியிருக்கின்றன, அதனால் ஏற்பட்ட மின்கசிவால்தான் மணி உயிரிழந்திருக்கிறார் என்று கூறும் அந்தப் பகுதி மக்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் அலட்சியமாக இருந்த ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். புகார் அளித்தும் அலட்சியமாக இருந்த மின்துறை உதவிப் பொறியாளர் லூர்துராஜ் என்பவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.