Published:Updated:

`7 முறை மக்களவை எம்.பி; டெல்லி முதல்வர்’ - காலமானார் சுஷ்மா ஸ்வராஜ்!

கலிலுல்லா.ச

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுஷ்மா ஸ்வராஜ்
சுஷ்மா ஸ்வராஜ்

1953-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஹரியானாவில் பிறந்தார் சுஷ்மா ஸ்வராஜ். அவரது தந்தை ஹர்தேவ் ஷர்மா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர். சுஷ்மா ஹரியானாவில் உள்ள சனாதன் தர்மா கல்லூரியில் சமஸ்கிருத்தை முதல் பாடமாக்கக்கொண்டு பொலிட்டிகல் சயின்ஸ் படிப்பை முடித்துள்ளார். மேலும் பஞ்சாப் பல்கலைகழகத்தில் சட்டப்படிப்பையும் நிறைவுசெய்துள்ளார்.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா

1973-ம் ஆண்டு காலகட்டதில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியைத்தொடங்கினார். இதையடுத்து அவர் தம் 25-வது வயதில் 1977- 82 வரை ஹரியானா மாநில அமைச்சராக இருந்தார். இளம் வயதிலே அமைச்சரான பெருமை அவருக்கு உண்டு. பா.ஜ.கவின் ஹரியானா மாநிலத்தலைவராக இருந்தார். 1998-ம் ஆண்டு டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக 52 நாள்கள் பணியாற்றினார். 7 முறை மக்களவை எம்.பியாகவும் இருந்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர், இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பா.ஜ.க பதவி ஏற்றபோது, உடல்நிலை பாதிப்பு காரணமாக அமைச்சர் பதவியை மறுத்தார்.

`7 முறை மக்களவை எம்.பி; டெல்லி முதல்வர்’ - காலமானார் சுஷ்மா ஸ்வராஜ்!
ANi

அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

``இந்திய அரசியலில் ஒரு புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. தனது வாழ்க்கையை பொது சேவைக்காகவும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அர்ப்பணித்த ஒரு குறிப்பிடத்தக்க தலைவரின் மறைவுக்கு இந்தியா வருத்தமடைகிறது. சுஷ்மா ஸ்வராஜ் ஜி கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்தவர்"
பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
சுஷ்மா ஸ்வராஜ்
சுஷ்மா ஸ்வராஜ்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சுஷ்மா ஸ்வராஜ் காலமானதைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். பொது வாழ்வில் கண்ணியம், தைரியம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காட்டிய மிகவும் நேசித்த தலைவரை நாடு இழந்துவிட்டது. மற்றவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பதால், அவர் இந்திய மக்களுக்கு செய்த சேவைக்காக எப்போதும் நினைவுகூறப்படுவார்'' எனப் புகழாரம் சூட்டியுள்ளார்