Published:Updated:

`இருதய பாதிப்பால் திடீர் மரணம்!’ -குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் கடந்துவந்த பாதை

காத்தவராயன்
காத்தவராயன்

காமராஜருக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ, என்கிற புகழுக்குச் சொந்தக்காரராக மண்ணில் வாழ்ந்து மறைந்திருக்கிறார், காத்தவராயன்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன், உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். 57 வயதான இவர், திருமணம் செய்துகொள்ளவில்லை. 1980ல் தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக கட்சிப் பணியாற்றத் தொடங்கிய காத்தவராயன், பேரணாம்பட்டு நகர இளைஞரணி அமைப்பாளர், வேலூர் மாவட்ட துணைச் செயலாளர் எனக் கட்சியில் பல்வேறு பொறுப்புகளுக்குப் படிப்படியாக உயர்ந்தவர்.

காத்தவராயன்
காத்தவராயன்

தவிர, 2011-ல் பேரணாம்பட்டு நகராட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற குடியாத்தம் சட்டமன்ற தனித் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட காத்தவராயன், வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார்.

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், இருதய அறுவைசிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சைபெற்றுவந்த அவரை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் இருவரும் அடிக்கடி சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துவந்தனர்.

காத்தவராயன் சிகிச்சை பெறும்போது நலம் விசாரித்த ஸ்டாலின், துரைமுருகன்
காத்தவராயன் சிகிச்சை பெறும்போது நலம் விசாரித்த ஸ்டாலின், துரைமுருகன்

உடல் நலம் மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காத்தவராயன் காலமானார். இவரது உயிரிழப்பு, தி.மு.க வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்து ஒரு நாளே ஆகும் நிலையில், காத்தவராயனின் இழப்பும் தி.மு.க-வினரை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

எம்.எல்.ஏ காத்தவராயனின் இறுதிச்சடங்கு, நாளை காலை 10 மணியளவில், பேரணாம்பட்டு மயானத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற உள்ளதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அதையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கவிருந்த தி.மு.க எம்.பி -க்கள் கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

நலம் விசாரித்த அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார்
நலம் விசாரித்த அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார்

1954-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில், காமராஜரை வெற்றிபெறச் செய்து முதலமைச்சராக்கி அழகுபார்த்த குடியாத்தம் தொகுதி, 2-வது முறையாகக் கடந்த ஆண்டுதான் இடைத்தேர்தலை எதிர்கொண்டது. காமராஜருக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ என்கிற புகழுக்குச் சொந்தக்காரராக மண்ணில் வாழ்ந்து மறைந்திருக்கிறார் காத்தவராயன்.

அடுத்த கட்டுரைக்கு