Published:Updated:

மூச்சுத் திணறலால் இறப்பு ; உடலை மாற்றி அனுப்பிய அரசு மருத்துவமனை! - குழப்பத்தால் தொடரும் அவலம்

இறப்பு
இறப்பு

``குறைந்தபட்சம் அவருக்கு இறுதிச்சடங்கு செய்யவாவது நாங்கள் விரும்புகிறோம். எனவே, தயவு செய்து அவரின் உடலைக் கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள்.”

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கடுமையாக அதிகரித்துவருகிறது. இதுவரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துவிட்டது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11,458 பேர் இந்த வைரஸால் பாதிப்படைந்தது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிப்படைந்தவர்களில் 8,884 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதிகமான பாதிப்புகளால் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிரம்பியவண்ணம் உள்ளன. இதனால், மருத்துவமனைகளில் பல்வேறு குழப்பங்களும் நிலவிவருகின்றன. இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் இறந்த நோயாளி ஒருவரின் உடலை வேறொரு குடும்பத்தினருக்கு மாற்றி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

கொரோனா ட்ரீட்மென்ட்
கொரோனா ட்ரீட்மென்ட்
மாதிரிப்படம்

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூச்சுத் திணறலால் பாதிப்படைந்த நபர் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது குடும்பத்தினரால் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால், மருத்துவமனை நிர்வாகம் அவர்களிடம் ஒரு நாளைக்கு ரூபாய் 50,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கேட்டுள்ளது.

அவ்வளவு பணத்தை அவர்களால் கொடுக்க முடியாது என்பதால் நோயாளியை அரசு மருத்துவமனைக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அழைத்துச்சென்றுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் அவரை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் சிறப்பு வார்டில் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவரது தந்தை பேசும்போது, ``எனது மகன் கொரோனா வைரஸால் பாதிப்படையவில்லை. பின்னர், ஏன் அவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்கு புரியவில்லை” என்று குழப்பத்துடன் தனது கேள்வியை எழுப்பியுள்ளார்.

`சென்னையில் 30 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு;  தமிழகத்தில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்’ -கொரோனா அப்டேட்ஸ் #NowAtVikatan

இதனையடுத்து அரசு மருத்துவமனை நிர்வாகம், மூச்சுத் திணறலால் பாதிப்படைந்தவரின் குடும்பத்தினரிடம் அவர் இறந்துவிட்டதாகக் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஆனால், அவரது உடலைக் காண உறவினர்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது, இறந்தவரின் உடல் அங்கு இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குழப்பமடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், அங்கிருந்த 13 உடல்களை உறவினர்களிடம் காட்டியுள்ளனர். ``அந்த உடல்களில் எதுவும் எங்களது சகோதரரின் உடல் இல்லை” என இறந்த நபரின் சகோதரர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இறந்தவரின் உடலைக் கண்டுபிடிக்க உதவிகேட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை அவர்கள் வெளியிட்டனர்.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

இதுதொடர்பாக அவரின் குடும்பம் பேசும்போது, ``குறைந்தபட்சம் அவருக்கு இறுதிச்சடங்கு செய்யவாவது நாங்கள் விரும்புகிறோம். எனவே, தயவுசெய்து அவரின் உடலைக் கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள்” என மிகவும் வேதனையுடன் கூறியிருந்தனர். இதனையடுத்து, வேறொரு நபரின் உடலை அடக்கம் செய்துவிட்டதாக இந்த குடும்பத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இறந்தவரின் சகோதரர் இதுதொடர்பாகப் பேசுகையில், ``காவல்துறை அதிகாரிகள், அவரது உடலை ஏற்கெனவே மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த ஜூன் 10-ம் தேதி அடக்கம் செய்துவிட்டதாகத் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்த மற்றொரு நபரின் உடலுக்குப் பதிலாக குழப்பத்தில் என்னுடைய சகோதரரின் உடலை அவர்கள் எடுத்து சென்று இறுதிச்சடங்கு செய்துள்ளனர்” என்றார்.

ஹைதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டாவது முறையாக இதுபோன்ற சம்பவம் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு 48 வயதான நபர் ஒருவரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் மாற்றி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அந்த நபருக்கு இறுதிச்சடங்கு செய்யும்போது, அவரது மனைவி இதனைக் கண்டுபிடித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புகள் நாட்டில் அதிகரித்துவருவதாலும் அதிகமான இறப்புகள் ஏற்படுவதாலும் இந்த குழப்பங்கள் நிலவுவதாகக் கூறப்படுகிறது. எனினும், மருத்துவமனை நிர்வாகம் கவனக்குறைவுடன் நடந்துகொள்வது தொடர்பான கண்டனங்களும் எழுந்தவண்ணம் உள்ளன.

Credits : NDTV

இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் A3i கொரோனா வைரஸ்... தமிழகத்தின் நிலை என்னவாகும்? #ExpertOpinion
அடுத்த கட்டுரைக்கு