Published:Updated:

உடல்நலக் குறைவு; இதய அறுவை சிகிச்சை - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்!

ராம்விலாஸ் பஸ்வான்
ராம்விலாஸ் பஸ்வான்

இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 74.

உடல்நலக் குறைபாடு காரணமாக டெல்லி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதகாலமாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்(74) சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், இன்று அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ``ராம்விலாஸ் மறைவின் மூலம் இந்தத் தேசம் தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு தலைவரை இழந்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் திறம்பட செயலாற்றியவர் அவர். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்தவர் அவர். அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டபோது ஜெயபிரகாஷ் நாராயணின் வழிகாட்டுதலின்படி அதற்கு எதிராகப் போராடியவர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி, தனது இரங்கல் குறிப்பில், ``எனது வருத்தத்தைப் பதிவு செய்ய வார்த்தைகள் இல்லை. தேசிய அளவில் அவரது மறைவால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் என்பது எப்போதும் நிரப்ப முடியாதது. ராம்விலாஸ் பஸ்வானின் மறைவு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பு. நல்ல நண்பரை நான் இழந்துவிட்டேன். ஒவ்வொருவரும் வாழ்வை மரியாதையுடன் வாழ வேண்டும் என்று எண்ணியவர் அவர். கடின உழைப்பாளி. அமைச்சரவைக் கூட்டங்களில் அவரது ஆலோசனை பயனுள்ளதாக இருந்திருக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan

இந்த மாத இறுதியில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளக் கட்சியுடன் கூட்டணியில் தாங்கள் கேட்டிருந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை. அதோடு, ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் காரணமாக, இரண்டு கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதையடுத்து, இந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறிய லோக் ஜனசக்தி, தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருந்தது.

ராம்விலாஸ் பஸ்வான்
ராம்விலாஸ் பஸ்வான்

கூட்டணியிலிருந்து வெளியேறியபோதும், தேசிய அளவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் நீடிப்பதாக அந்தக் கட்சி அறிவித்தது. பீகார் தேர்தலில் பா.ஜ.க போட்டியிடாத 143 தொகுதிகளில் மட்டும் போட்டியிட முடிவு செய்திருந்தது. உடல்நலக் குறைபாடு காரணமாக லோக் ஜனசக்தி தலைவர் மருத்துவமனையிலிருந்ததால், கட்சியின் முடிவுகளை அவரின் மகன் சிராக் பஸ்வான் எடுத்துவந்தார்.

அடுத்த கட்டுரைக்கு