Published:Updated:

‘தலித்’ அடையாளம் எழில்மலை!

எழில்மலை
பிரீமியம் ஸ்டோரி
News
எழில்மலை

ஐ.நா சபையில் இனரீதியான கொடுமைகள் குறித்த விவாதம் நடைபெற்றபோது, ‘இனரீதியான கொடுமைகளைவிட சாதியக் கொடுமைகள் கொடூரமானவை’ என்று பேசினார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் அம்பேத்கரிய சிந்தனையாளருமான தலித் எழில்மலை, 74-வது வயதில் மே 6-ம் தேதி அதிகாலை உடல் நலிவுற்ற நிலையில் காலமானார்.

1945-ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தில் மதுராந்தகம் அருகே இரும்பேடு கிராமத்தில் பிறந்தவர் இரா.ஏழுமலை. இந்து மதம் சார்ந்த பெயரிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, ஏழுமலை என்ற தன் பெயரை `எழில்மலை’ என மாற்றிக்கொண்டார். தமிழகத்தில் `தலித்’ என்கிற சொல் பிரபலமாவதற்கு முன்பே தன் பெயருக்கு முன் ‘தலித்’ எனச் சேர்த்துக்கொண்டார். சாதி ஒழிப்பு அரசியலில் தீவிரமாகச் செயல்பட்ட தலித் எழில்மலை, எப்போதும் நீலச்சட்டைதான் அணிவார். மொழியாற்றல்மிக்க அவருக்கு, ஆங்கிலம் உட்பட ஒன்பது மொழிகள் தெரியும்.

எழில்மலை
எழில்மலை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1967-ம் ஆண்டு இந்திய தபால் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த தலித் எழில்மலை, ‘தலித் மக்கள் முன்னணி’ என்ற அமைப்பின் மூலம் பல சமூகப் பணிகளில் ஈடுபட்டார். 1970-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தவர், இந்தியா – பாகிஸ்தான் போரில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றினார். ராணுவத்தில் அவர் ஆற்றிய சிறந்த சேவைக்காக, குடியரசுத் தலைவரிடம் `கே.சைனிக் சேவா’ பதக்கம் பெற்றார்.

1980-களில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை முன்வைத்து பல்வேறு இயக்கங்களை நடத்தினார். பெங்களூரிலிருந்து வெளியான ‘தலித் வாய்ஸ்’ என்ற ஆங்கில இதழின் ஆசிரியரான ராஜசேகருடன் இணைந்து 1982-ம் ஆண்டில் தலித் சாகித்ய அகாடமி என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். பண்டிதர் அயோத்திதாசரின் படைப்புகள், அம்பேத்கரின் படைப்புகள் உட்பட ஏராளமான நூல்களை வெளியிட்டார்.

1990-களில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து அதன் பொதுச்செயலாளர் ஆனவர், 1998-ம் ஆண்டு சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றினார். பா.ம.க-வில் இருந்தபோதும், அம்பேத்கரிய கருத்துகளில் தீவிரமாக இருந்தார் தலித் எழில்மலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர் மத்திய இணை அமைச்சராக இருந்தபோதுதான், தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு அயோத்திதாசர் பெயரைச் சூட்டுவதற்கு இவர்தான் காரணம். மத்திய அமைச்சராக இருந்தபோது, அம்பேத்கர் எழுதிய ‘காந்தியும் காங்கிரஸும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?’ என்ற நூலை வெளியிட்டார். ஐ.நா சபையில் இனரீதியான கொடுமைகள் குறித்த விவாதம் நடைபெற்றபோது, ‘இனரீதியான கொடுமைகளைவிட சாதியக் கொடுமைகள் கொடூரமானவை’ என்று பேசினார்.

எழில்மலை
எழில்மலை

டாக்டர் ராமதாஸுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக பா.ம.க-விலிருந்து விலகிய இவர், பிறகு ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். 2001-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிறகு, தீவிர அரசியலில் இருந்து விலகினார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன். மகள்களில் ஒருவரான எழில் கரோலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறார்.