Published:Updated:

``கொரோனா வார்டுல இறந்த அம்மா...'' - மகனின் குற்றச்சாட்டும் மருத்துவமனையின் பதிலும்

கொரோனா வார்டில் நடைபெற்ற துயர சம்பவம்
கொரோனா வார்டில் நடைபெற்ற துயர சம்பவம்

கொரோனா வார்டில் தன் அம்மாவை இழந்தபோது, அங்கு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் பாஸ்கர்.

இந்த கோவிட்-19 பேண்டமிக் சூழலில், அனைத்து நாடுகளிலும் முன்வரிசையில் நின்று களப்பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு, உலகமே கடமைப்பட்டுள்ளது. மக்களைக் காக்கும் இந்த வைரஸ் போரில், உலகம் முழுக்க மருத்துவமனைகள் இடையறாது இயங்கிவருகின்றன. மருத்துவப் பணியாளர்கள் இரவு பகல் பாராதும், சிலர் தங்கள் இன்னுயிர் தந்தும் ஆற்றிவரும் சேவை இது.

'சிகிச்சையோடு அந்த டாக்டர்ஸ் தந்த தைரியமும்தான் கொரோனாவை குணப்படுத்துச்சு' என்ற சென்னைப் பெண்மணி, 'செவிலியர்கள் முதல் வார்டு பாய், தூய்மைப் பணியாளர்கள்வரை கொரோனா வார்டுல எல்லாரும் நல்லா பாத்துக்கிட்டாங்க, நோய்கூடவே வேலைபார்த்துட்டிருக்கிற அந்தப் புள்ளைங்க எல்லாம் நல்லாயிருக்கணும்' என்று வாழ்த்திய திருநெல்வேலி முதியவர், 'என் ஒன்றரை வயசுக் குழந்தை கொரோனா வார்டுல இருந்தப்போ, அம்மாவைப்போல என் புள்ளையைப் பொத்திப் பொத்திப் பார்த்துக்கிட்ட அந்த நர்ஸ் முகத்தைக்கூட, அவங்க போட்டிருந்த மாஸ்க்கால முழுசா பார்க்க முடியலைங்க' என்று நெகிழ்ந்தார் மதுரையைச் சேர்ந்த இளம் தாய். இப்படி நம்மைக் காத்துக்கொண்டிருக்கும் மருத்துவத் துறைக்கு, நன்றி என்பது சிறிய வார்த்தை.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

இந்நிலையில், ஆங்காங்கே சிலருக்கு மனக்கசப்பான கொரோனா வார்டு அனுபவங்களும் ஏற்படுகின்றன. அப்படி ஒருவர்தான் பாஸ்கர். அவர் தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

பிரபல ஆங்கில இதழ் ஒன்றின் விற்பனைப் பிரிவில் பணியாற்றுபவர் பாஸ்கர். அவரின் 69 வயது அம்மா சரஸ்வதி. மார்ச் மாதம் இவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. சிகிச்சையைத் தொடங்குவதற்குள் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் சிகிச்சை தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

இந்நிலையில் மே 25-ம் தேதி திடீரென்று சரஸ்வதிக்கு உடல்நிலை மோசமானது. அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது, கொரோனாவாக இருக்கலாம் என்று கூறி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். அரசு மருத்துவமனையில் அனுமதித்து கொரோனா பரிசோதனை செய்து முடிவுக்காக இரண்டு நாள்கள் காத்திருந்துள்ளனர்.

ராஜீவ்காந்தி மருத்துவமனை
ராஜீவ்காந்தி மருத்துவமனை
கொரோனா கட்டுப்பாடு அறையில் பணியாற்றிய மருத்துவருக்குத் தொற்று! - கலக்கத்தில் தேனி

பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என்று உறுதியான பின், பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் சரஸ்வதி. ''அந்த நாலு நாள்ல ஒரு நாள் மட்டுமே மருத்துவர்கள் வந்தாங்க. 50 பேருக்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மட்டுமே இருந்தாங்க. சிகிச்சை திருப்தி அளிக்காததால், வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம்'' என்கிறார் பாஸ்கர்.

தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை உட்பட பல பரிசோதனைகளைச் செய்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் ஒரு நாள் பரிசோதனைக்கு மட்டுமே 62,000 ரூபாய் செலவாகியுள்ளது. தொடர்ந்து அந்த மருத்துவமனையில் இருந்தால், கையிருப்பு கரைந்துவிடும் நிலை. இந்நிலையில் பாஸ்கரின் அம்மாவுக்குக் கொரோனா இருப்பது தனியார் மருத்துவமனைப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

காசு கொடுத்ததற்கான சாட்சி இருந்தால், நடவடிக்கை எடுப்போம்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் நாராயணசாமி

கொரோனா உறுதியானதால் மீண்டும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சரஸ்வதி. இந்த முறை நேரடியாக கொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அனுமதிக்கப்பட்ட ஐந்தாவது நாள், சரஸ்வதி இறந்துவிட்டதாக அவர் மகனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''கடந்த ரெண்டு மாசமா எங்க அம்மாவால சரியா பேச முடியல. சாப்பாடுகூட மூக்கு வழியாகத்தான் போயிட்டிருந்தது. அரசு ஆஸ்பத்திரியில அஞ்சு நாள் எங்க அம்மாவுக்கு என்ன உணவு கொடுத்தாங்கனு தெரியல. அவங்களுக்கு மூக்கு வழியா உணவு போச்சா, சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு மருந்து கொடுக்கப்பட்டதானு தெரியல. இறக்கிறதுக்கு மூன்று நாள்கள் முன்னாடி எங்க அம்மா நல்லா இருக்கிறதா டீன் சொன்னாங்க. அடுத்த ரெண்டு நாள்ல இறந்துட்டதா மருத்துவமனையிலிருந்து தகவல் வந்துச்சு.

death report
death report

கொரோனா தொற்று இல்லாம இருந்த அம்மா, நாலு நாள் பொது வார்டில் இருந்தபோதுதான் தொற்று ஏற்பட்டிருக்கணும். பொது வார்டில் அட்டெண்டர்ஸ் எல்லாம் முகக்கவசம் அணியாம இருந்தாங்க. என் அம்மா இறந்த உடன் கொரோனா வார்டில், அம்மாவைத் தூக்க ஆள் இல்லைன்னு என்னைத் தூக்கச் சொன்னாங்க.

நான் அந்த வார்டுக்குள் நுழைஞ்சபோது எனக்குப் பாதுகாப்புக் கவசம் எதுவும் கொடுக்கலை. இப்படியொரு நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது'' என்று தழுதழுத்தவர், அம்மாவின் உடலை எடுத்துச் செல்வதற்கு ஆங்காங்கே சிலருக்குப் பணம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.

சாட்சிகள் இருந்தால் நடவடிக்கை!

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர், மருத்துவர் நாராயணசாமியிடம் பேசினோம்.

"இங்கே ஒரு நோயாளி வரும்போது அவருக்கு இருக்கும் அறிகுறிகளை வைத்து கோவிட் வார்டில் சேர்க்க வேண்டுமா, வேறு வார்டில் அனுமதிக்க வேண்டுமா என்று முடிவு செய்வோம்.

கொரோனா வைரஸின் நோய் அரும்பு காலம் 7 முதல் 10 நாள்கள். இந்த நோயாளிக்கு தொற்று முன்னரே ஏற்பட்டிருக்க வேண்டும். மருத்துவமனை மூலம்தான் அவருக்குத் தொற்று ஏற்பட்டது என்று கூற முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர், மருத்துவர் நாராயணசாமி
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர், மருத்துவர் நாராயணசாமி

இறந்த உறவினர்களின் உடலை 20 அடி தூரத்தில் நின்று பார்ப்பதற்கே அனுமதி. உடலை அருகில் சென்று பார்ப்பதானால் முழு பாதுகாப்புக் கவசத்துடன் செல்ல வேண்டும் என்பதால், உடலுக்கு அருகில் செல்ல, உறவினர்களுக்கு அனுமதி இல்லை. உடலை கார்ப்பரேஷன் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவோம்.

'நீங்களே உங்கள் உறவினரின் உடலை எடுத்துச் செல்லுங்கள்' என்றெல்லாம் யாரிடமும் கூறப்படுவதில்லை. அப்படியிருக்கும்போது, யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. காசு கொடுத்ததற்கான சாட்சி இருந்தால், நடவடிக்கை எடுப்போம்.

பொது வார்டில் இருந்தபோது மருத்துவர்கள் ஒரு நாள்தான் வந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோவிட்-19 தொற்றில்லாத நோயாளிகள் குறைவாக இருப்பதால், அங்கு மருத்துவர்களுக்குத் தட்டுப்பாடு இல்லை" என்று கூறினர்.

அடுத்த கட்டுரைக்கு