Published:Updated:

ஹெல்மெட் அணிந்தும் பயனில்லை! - முதல்வர் பாதுகாப்புக்குச் சென்ற காவலருக்கு நேர்ந்த சோகம்

இரவுப் பணியை முடித்துவிட்டு முதல்வர் பாதுகாப்புக்காகச் சென்றபோதுதான், காவலர் வரதராஜுக்கு அந்தப் பெரும் சோகம் ஏற்பட்டிருக்கிறது.

காவலர் வரதராஜ்
காவலர் வரதராஜ்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ் (27). 2013-ம் ஆண்டு போலீஸ் வேலைக்குச் சேர்ந்தவர், ஈரோடு ஆயுதப்படைப் பிரிவில் போலீஸாகப் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பாரதியும் ஈரோடு ஆயுதப்படைப் பிரிவில் போலீஸாக பணியாற்றி வருகிறார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

`திடீர் ஓசை; 20 அடி உயரத்துக்குத்  தீ ஜுவாலை!' - கோவிலூரைப் பதறவைத்த மின்வாரிய விபத்து

இவர்களுக்கு கௌசிக் சர்வந்த் (4), கிஷோர் சர்வந்த் (2) என இரு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மாதம்தான் ஆயுதப்படையிலிருந்து, கோபி தாலுகா பங்களாபுதூர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வசித்து வந்த வரதாஜுக்கு நேற்று எதிர்பாராத அந்தச் சோகம் அரங்கேறியது.

நேற்று இரவுப் பணியை முடித்துவிட்டு, வரதராஜ் வீட்டுக்குக் கிளம்பியிருக்கிறார். அப்போது, `கோவையிலிருந்து சேலத்துக்கு காரில் செல்லும் முதல்வரின் பாதுகாப்புப் பணிக்கு நீங்கள் செல்ல வேண்டும்’ என அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். அதையடுத்து ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு முதல்வரின் பாதுகாப்புப் பணிக்காக மதியம் சித்தோடு பகுதிக்கு கிளம்பியிருக்கிறார். கரட்டடிபாளையம் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, காவலர் வரதராஜ் மீது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியிருக்கிறது. இதில் தூக்கிவீசப்பட்ட காவலர் வரதராஜ், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியிருக்கிறார்.

விபத்து
விபத்து

அருகிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து காவலர் வரதராஜை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். தலையில் பலத்த காயத்துடன், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், செல்லும் வழியிலேயே காவலர் வரதாஜ் உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் அது பலனில்லாமல் போயிருக்கிறது. உயிரிழந்த காவலர் வரதராஜின் உடல் அவருடைய சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது. திருமணத்துக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட அரசுப் பேருந்து (spare bus)தான் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவத்தையடுத்து பஸ் டிரைவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். `தொடர்ந்து இரவுப்பணி, பாதுகாப்புப் பணி என ஓய்வில்லாமல் வேலை பார்த்து வந்ததுதான் காவலர் வரதராஜின் உயிரிழப்புக்குக் காரணம்' என்று சொல்லப்படுகிறது.