விவசாயிகள் சங்க நிர்வாகியும் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணித்தலைவருமான புலியூர் நாகராஜன் கொரோனாவில் உயிரிழந்தது விவசாயிகள் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. த.மா.கா-வைச் சேர்ந்தவர் என்றாலும் அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்டவர். அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரையும் எளிதாக அணுகக்கூடியவர். இதன்மூலமாக விவசாயிகளின் கோரிக்கைகளை முடிந்த அளவுக்கு சாதிக்கவும் செய்பவர்.
ஜூன் 26-ம் தேதி அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கொம்பு அணையைப் பார்வையிட திருச்சி வந்திருந்தார். முதல்வர் எப்போது திருச்சி வந்தாலும், புலியூர் நாகராஜன் அவரைச் சந்தித்துப் பேசுவது வழக்கம். அப்படித்தான் இந்த முறையும் முதல்வர் திருச்சி வந்திருந்தபோது ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து புலியூர் நாகராஜன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் 13 பேர் முதல்வரைச் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக முதல்வரிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
கொரோனா பரவலுக்குப் பிறகு முதல்வரைச் சந்திக்க யார் வந்தாலும், அவர்களுக்கு சுகாதாரப் பரிசோதனைக் குழுவினர் ‘தெர்மல் ஸ்கேனர்’ மற்றும் ஸ்வாப் (SWAB) பரிசோதனைகளைச் செய்வார்கள். பிறகு சானிடைஸரால் கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ளச் செய்த பின்னரே அனுமதிப்பார்கள். திருச்சியில் அன்றைய தினம் முதல்வரைச் சந்தித்த அதிகாரிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், கட்சியினர் அனைவருக்குமே மேற்கண்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், புலியூர் நாகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் குழுவினருக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

முதல்வரைச் சந்தித்த மறுநாளே புலியூர் நாகராஜன் தனக்கு முதுகுவலி என்று ஆர்த்தோ மருத்துவரைப் பார்த்திருக்கிறார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு மூன்று நாள்கள் சிகிச்சையில் இருந்தவர், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, ஜூலை 2-ம் தேதி காலை 11 மணியளவில் இறந்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்!
கொரோனாவுக்கு மனிதர்களிடையே பேதம் இல்லை. அலட்சியம் காட்டும் எவரையும் அது தொற்றிக்கொள்ளும். கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் பட்டியல் இது.
1) உளுந்தூர்பேட்டை - குமரகுரு (அ.தி.மு.க)
2) பரமக்குடி - சதன் பிரபாகர் (அ.தி.மு.க)
3) ஸ்ரீபெரும்புதூர் - பழனி (அ.தி.மு.க)
4) பாலக்கோடு - கே.பி.அன்பழகன் (அ.தி.மு.க, உயர்கல்வித்துறை அமைச்சர்)
5) ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன் (தி.மு.க)
6) செய்யாறு - ஆர்.டி.அரசு (தி.மு.க)
7) செஞ்சி - கே.எஸ்.மஸ்தான் (தி.மு.க)
8) கோவை தெற்கு தொகுதி - அம்மன் அர்ச்சுனன் (அ.தி.மு.க)