Published:Updated:

` ராஜமரியாதையோடு கோர்ட்டுக்கு வருகிறார்கள்!'- கலங்கும் கோகுல்ராஜ் தாயார்

கோகுல்ராஜ்
கோகுல்ராஜ்

எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மனநலரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதால் வழக்கைச் சேலத்திற்கு மாற்ற வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம்.

``தமிழக அரசு ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை என அண்மையில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில் ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை கூட நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளுவதில்லை'' என வேதனை தெரிவித்துள்ளார் கோகுல்ராஜின் தாயார் சித்ரா.

சித்ரா
சித்ரா
க. தனசேகரன்

சேலம் ஓமலூரைச் சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரோடு கல்லூரியில் சக மாணவியாகப் பயின்று வந்தவர் ஸ்வாதி. இவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரும் நெருங்கிப் பழகி வந்தார்கள்.

இந்நிலையில் இருவரும் 23.6.2015-ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் இருவரையும் மிரட்டி உள்ளார். பிறகு ஸ்வாதியை அனுப்பிவிட்டு கோகுல்ராஜை தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார். அடுத்தநாள் 24.6.2015-ம் தேதி கோகுல்ராஜ் பள்ளிப்பாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே டிராக்கில் சடலமாகக் கிடந்தார். இவ்வழக்கை நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆணவக் கொலையாகப் பதிவு செய்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. பிறகு மதுரைக்கு மாற்றப்பட்டு தற்போது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

யுவராஜ்
யுவராஜ்
க. தனசேகரன்

கோகுல்ராஜின் தாயார் சித்ராவைச் சந்தித்துப் பேசினோம். ''சின்ன வயதிலேயே கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு என் மகன் கோகுல்ராஜை வளர்த்து ஆளாக்கினேன். ஒரு பாவமும் அறியாத அவனை ஆணவப் படுகொலை செய்தார்கள். அவனைத் துடிதுடிக்கக் கொன்றதை நினைத்து மனரீதியாகப் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறேன். இந்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நாமக்கல் நீதிமன்றத்திற்குச் செல்லும் போது என் மகனைக் கொன்றவர்கள் ராஜமரியாதையோடு கட்சி மாநாட்டிற்கு வருவதைப் போல வந்தார்கள். எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மனநலரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதால் வழக்கைச் சேலத்திற்கு மாற்ற வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம்.

சித்ரா
சித்ரா
க. தனசேகரன்

ஆனால், உயர் நீதிமன்றம் எங்கள் கோரிக்கையைப் பரிசீலனை செய்யாமல் வழக்கை மதுரைக்கு மாற்றிவிட்டது. இதனால் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேலும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். என்னைப் போன்று சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவரின் கோரிக்கைகளையும் நீதிமன்றங்கள் சற்று ஆலோசிக்க வேண்டும். எப்படியும் நீதிமன்றம் என் மகனைக் கொன்ற குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை பெற்று தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆணவக் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஈவு இரக்கமே காட்டாமல் தண்டனை வழங்கினால் மட்டுமே ஓரளவுக்கு ஆணவப் படுகொலைகளை தடுக்க முடியும்'' என்றார் கொதிப்புடன்.

பாத்ரூமில் வழுக்கிவிழுந்து கை உடைந்தவர்கள் எத்தனை பேர்?- போலீஸுக்கு 10 ஆர்.டி.ஐ கேள்விகள்!

கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன், '' உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து, ப்ஆணவக் கொலைகளை பற்றி அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதைப் பற்றி வருத்தம் தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். ஏற்கெனவே நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆணவக் கொலை வழக்குகளை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு, பயணப்படி போன்ற பல சட்ட திட்டங்களை கீழமை நீதிமன்றங்கள் கடைப்பிடிக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பார்த்திபன்
பார்த்திபன்
க. தனசேகரன்

சில ஆணவக் கொலை வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்திற்கு வருகிறது. அப்படி வரும் கொலை வழக்குகளில் வெறும் 3 சதவிகித வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். பல வழக்குகளில் குற்றவாளிகள் செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பித்துக்கொள்கிறார்கள். கோகுல்ராஜ் குடும்பத்தினர் ஏழ்மையானவர்கள். அவர்கள் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் வழக்கைச் சேலத்திற்கு மாற்றக் கேட்டோம். ஆனால் மதுரைக்கு மாற்றிவிட்டார்கள். இதனால் கோகுல்ராஜ் குடும்பம் மேலும் பாதிக்கப்பட்டது. இந்தக் கொலைக்கான அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது'' என்றார் உறுதியாக.

பின் செல்ல