Published:Updated:

ஜெ - சசி நீராடல்... 12 ஆண்டுகள்... 15 நிமிடங்கள்... 48 உயிர்கள் - மறக்க முடியாத மகாமகம்!

சசிகலா - ஜெயலலிதா
சசிகலா - ஜெயலலிதா

பல உயிர்கள் அநியாயமாகப் பறிபோயின. பலர், பலத்த காயங்களோடு மருத்துமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அரசின் கணக்காக 48 பேர் மட்டும் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், அது அதிகமாக இருக்கும் என்பதே அப்போது அங்கிருந்தவர்களின் கருத்தாக இருக்கிறது.

குடந்தைக்குப் பெயர் மாற்றுங்கள்...

மகாபலிபுரம் என்று!

இப்படி ஒரு ஹைக்கூவை இப்போது படித்தால் யாருக்கும் புரியாது. 1992-ம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று நடந்த ஒரு விபரீதத்துக்குப் பின் எழுதப்பட்ட ஹைக்கூ இது. அன்றைக்கு என்ன நடந்தது..?

வருடத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வரலாறு இருக்கும். ஒரு சில நாள்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கடந்த காலத்திலிருந்து அள்ளித் தரும். ஒரு சில நாள்கள், தீராத சோகத்தையும் ஆராத ரணத்தையும் நினைவுபடுத்தும். இன்றைய நாளுக்கு அப்படியொரு துயர வரலாறு உண்டு. சரியாக இன்றிலிருந்து 28 ஆண்டுகளுக்கு முன்பு, இதேநாளில் பெரும் மக்கள் கூட்டம் மரண ஓலத்தோடு திக்குத் தெரியாமல் முட்டி மோதி பல உயிரிழப்புகளைச் சந்தித்தது. 'மகாமகம்' என்றாலே ஆன்மிக மணம் கமழும் நினைவு வராமல், மரண நெடி நம் நாசிக்கு ஏறக் காரணமான நாள் இன்று. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாகப் பறிபோன தினம் இன்று.

ஜெயலலிதா
ஜெயலலிதா

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், 1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்த ஐந்தாண்டுகளில் அவர் வாழ்ந்த வாழ்க்கை முறைதான், அவருடைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான துவக்கப்புள்ளியாக இருந்தது என்றால் அது மிகையாகாது. வளர்ப்பு மகன் திருமணம், டான்சி ஊழல் வழக்கு, கொடநாடு எஸ்டேட், சொத்துக்குவிப்பு... என அந்த ஐந்தாண்டுகளில் அவரும் அவருடைய உடன்பிறவா சகோதரி சசிகலாவும் இணைந்து தமிழகத்தை அகில இந்தியாவும் அறியச் செய்யுமளவுக்கு ‘அமோகமான’ ஓர் ஆட்சியை நடத்தினர். அப்போது, மறக்க முடியாத பல நிகழ்வுகளில் மகாமகத்தில் இருவரும் இணைந்து நீராடியதும் ஒன்று.

ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராகப் பதவியேற்று ஏறக்குறைய ஒருவருடம். கும்பகோணத்தில் மகாமக நிகழ்ச்சி நடந்தது. 12 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் விழா என்பதால் தமிழ்நாடு முழுவதுமுள்ள பக்தர்கள் மகாமகக் குளத்தில் நீராட ஆவலாக காத்துக்கொண்டிருந்தார்கள். மறுபுறம், முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் அதே ஆசை தொற்றிக்கொள்ள, அதிகாரிகளிடத்தே தெரிவிக்கிறார். அதுவரைக்கும் மக்களை ஒழுங்குபடுத்த வேறு வேறு திட்டங்களை வகுத்திருந்த அதிகாரிகளுக்கு, ஜெயலலிதாவின் வருகை அறிவிப்பு அந்தத் திட்டங்களை அடியோடு மாற்ற வைத்தது. தாமதமாகத் தொடங்கிய பராமரிப்பு வேலைகள், அரசுத் துறைகளின் மெத்தனம், ஆகம விதிகள் மீறப்பட்டதாக எழுந்த புகார் என ஏற்கெனவே மிகப்பெரிய சர்ச்சைகளோடு தயாராகிக் கொண்டிருந்த மகாமக ஏற்பாடுகள், முதல்வரின் வருகை அறிவிப்பால் இன்னும் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது. அரசு இயந்திரம் அத்தனையும் ஜெயலலிதாவின் பாதுகாப்பில் கவனத்தைக் குவித்தது.

மகாமகம்
மகாமகம்

கும்பகோணம் முழுவதும் ஜெயலலலிதாவை வரவேற்க கட் அவுட்களும் போஸ்டர்களுமாகக் காட்சியளித்தன. மகாமகம் புனித நீராடல் என்பதெல்லாம் மறைந்து, ஜெயலலிதா வருகிறார் என்பதே முதன்மையானது. ஜெயலலிதாவுக்கென பிரத்யேகமான குளியலறைகளும் கட்டப்பட்டன. 18-ம் தேதி மகாமகத்துக்கு, 17-ம் தேதியிலிருந்தே காவல்துறை கெடுபிடிகள் தொடங்கின. முதல்வர் வந்து நீராடும் வரை யாரும் நீராடக்கூடாது என்று காவல்துறையினர் அறிவித்தனர். ஆனால், கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அந்த உத்தரவை உடைத்தெறிந்தது. பல லட்சம் மக்கள் பக்திப்பரவசத்தில் நீராடிக்கொண்டிருந்தனர். காவல்துறையாலும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை காத்திருப்பதே இந்தப் புனித நீராடலுக்குத்தான். அதற்கும் ஆயிரம் கட்டுப்பாடுகள் என்றால் அவர்கள் எப்படிப் பொறுப்பார்கள்? நிகழ்ச்சியைத் தவற விட்டு விடுவோமோ என்கிற பதற்றம், அந்த மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் காவல்துறையின் கட்டுகளையும் உடைக்க வைத்தது. மறுபுறம், ஜெயலலிதாவைக் காணவும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

`தீர்த்தவாரி நேரம்’ பகல் 11.45 முதல் 12.30 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சரியாக 11.32-மணிக்கு நீராடுவதற்காக பிரத்யேகமாகக் கட்டப்பட்டிருந்த குளியலறைக்கு வந்தார் ஜெயலலிதா. தீர்த்தவாரி ஆரம்பமாகிறது என்பதை அறிவிக்க வால்டர் தேவாரம் வானத்தை நோக்கி மூன்று முறை அப்போது சுட்டார். ஏற்கெனவே கூட்ட நெரிசல், ஜெயலலிதா வந்த ஹெலிகாப்டர் சத்தம் ஏற்படுத்தியிருந்த அச்ச உணர்வு என பதற்றத்தில் மூழ்கியிருந்த மக்களை இந்த துப்பாக்கிச் சத்தம் மேலும் பயந்து அலறவைத்தது. சத்தம் வந்த திசையிலிருந்த மக்கள் வெவ்வேறு திசைகளில் அலைஅலையாய் நகர, நெரிசல் அதிகமானது. அதேநேரத்தில், ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்ட பிரத்யேகக் குளியலறையில் குளிக்க விருப்பமில்லாமல், வெளியே குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து குளிக்க முடிவெடுத்தார் ஜெயலலிதா.

சசிகலா- ஜெயலலிதா
சசிகலா- ஜெயலலிதா

உடனே, மேற்குக் கரையின் ஓரத்தில் குளித்துவிட்டு அப்படியே வெளியேறிச் செல்லும்படி திட்டமிடப்பட்டிருந்தது. ஜெயலலிதா வெளியில் தீர்த்தமாடுகிறார் என்றதும் அவரைக் காண இன்னும் மக்கள் கூட்டம் முண்டியடித்தது. அப்படி மேற்குக் கரை ஓரத்திலேயே குளித்துவிட்டுச் சென்றிருந்தாலும் ஓரளவு பாதிப்போடு போயிருக்கும். இடையில் புகுந்த சிலர், மையப்பகுதியில் நீராடுமாறு ஜெயலலிதாவுக்கு ஆலோசனை கூறுகின்றனர். உடனே, மேற்குக் கரையின் மையப் பகுதியில் ஜெயலலிதா நீராட அவசரகதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் மேற்குக் கரையின் இருபுறமும் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

நீராட வரும் மக்கள், குளத்தின் வடகரைப் பகுதியில் இறங்கி நீராடிவிட்டு, மேற்குக் கரை வழியாக வெளியேறுவதாகத்தான் முதலில் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. மக்களிடமும் அவ்வாறே அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடைசி நேர குழப்படியால் எல்லாமும் மாறிப்போனது. வடகரையில் இறங்கி தென்கரையில் ஏறவேண்டும் என போலீஸார் திடீரென திட்டத்தை மாற்ற, அது மக்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் குளத்தில் இறங்கியவர்கள் மீண்டும் கரையேற வழி இல்லாமல் குளத்துக்குள்ளே நிற்கத் தொடங்கினர். குளத்தின் படிகளில் நின்றவர்கள், வெகுநேரம் நிற்க முடியாமல் அப்படியே நெருக்கமாக உட்கார்ந்துவிட்டனர். அவர்களுக்குப் பின்னால் லட்சக்கணக்கான மக்கள் குளத்தில் இறங்க வாய்ப்பு எதிர்பார்த்தபடி பதற்றத்துடன் முட்டிமோதி நின்றுகொண்டிருந்தனர்.

மகாமகம்
மகாமகம்
கூவத்தூர் ரிலீஸ்... ஸ்டாலின் சட்டை கிழிப்பு... பன்னீர் பவ்யம்... நான்காம் ஆண்டில் எடப்பாடி ஆட்சி!

சரியாக 12 மணிக்கு ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் புனித நீராடிவிட்டு கரையேற, அந்த நேரத்தில் மக்களை நோக்கி ஜெயலலிதா கை அசைக்க, அவருக்கு நேர் எதிரில், வடக்கு வீதி பக்கம் இருந்தவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. இடையில் இருந்த ஒரு கோயில் அவர்களை மறைத்தது. எனவே, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் முன்னுக்கு வந்து பாங்கூர் தர்மசாலா கட்டடத்தின் வெளிப்புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது ஏற முயன்றனர். அதைத் தொடர்ந்து, இரும்பு கிரில் கட்டைச் சுவரோடு சாய்ந்தது. அதைப் பார்த்ததும் மக்கள் கூட்டம் மேலும் சிதறியோட, நெரிசல் இன்னும் அதிகரித்தது. ஒரு கும்பல் குளத்திலிருந்து கரையேறவும், மற்றொரு கும்பல் போலீஸ் தடியடி பொறுக்க முடியாமல் குளத்தில் இறங்க முற்பட்டதும் இடையில் மக்கள் சிக்கி மூச்சுத் திணறினர்.

ஜெயலலிதா கிளம்பிய பிறகு நெரிசல் இன்னும் அதிகரிக்க, போலீஸார் தடியடியை வேகப்படுத்தினர். வடகரையில் பாங்கூர் தர்மசாலா அருகில், கிட்டத்தட்ட 200 அடி இடைவெளியில் நூற்றுக்கணக்கானவர் விழுந்து கிடந்தனர். காயம்பட்டுப் பலர் துடித்துக்கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர, குளத்தின் மற்ற கரைகளில் நெரிசலில் சிக்கிக் காயம்பட்டவர்கள் பலர். இவர்கள் அனைவரையும் தர்மசாலா வாசலுக்கு அருகே தூக்கிவந்து தரையில் வரிசையாகப் படுக்கவைத்தனர். இவ்வளவுக்கு மத்தியிலும் காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் ஜெயலலிதாவை பத்திரமாக அனுப்பி வைப்பதிலேயே தங்களின் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்தனர். அதனால் கீழ் நிலையில் இருந்த காவலர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி, பல உயிர்கள் அநியாயமாகப் பறிபோயின. பலர் பலத்த காயங்களோடு மருத்துமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அரசின் கணக்காக 48 பேர் மட்டும் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், அது அதிகமாக இருக்கும் என்பதே அப்போது அங்கிருந்தவர்களின் கருத்தாக இருக்கிறது.

மகாமகம்
மகாமகம்
`கும்பகோணம் மகாமகம் டு பெரியகோயில் குடமுழுக்கு!' - தஞ்சை கலெக்டரின் நாஸ்டால்ஜியா

இவ்வளவு அசம்பாவிதங்களும் ஜெயலலிதாவுக்கு சொல்லப்படவே இல்லை. சென்னை சென்ற பிறகுதான் தெரியப்படுத்தப்பட்டது என அப்போது சொல்லப்பட்டது. ஆனால், அவர்கள் சொல்லாமல் இருந்ததற்கான காரணத்தை ஜெயலலிதா மட்டும் அல்ல தமிழகமே அறியும். அந்த அளவுக்கு ஜனநாயக ரீதியாக உரையாடக்கூடிய இடத்தில் ஜெயலலிதா யாரையுமே அப்போது வைத்திருக்கவில்லை. ஒரு ஆட்சியாளரின் தன் சுய விருப்புகளுக்காக எடுக்கும் திடீர் முடிவுகள், தனக்குக் கீழ் நிலையில் இருப்பவர்களை எவ்வளவு பாதிக்குமென்பதற்கு மகாமகம் மகா சாட்சி. சாதாரண அடித்தட்டு மக்களின் வாக்குகளை வாங்கி அரியணையில் ஏறுவோர், அந்த மக்களின் நலனைப் பற்றி துளியும் சிந்திக்காமல் எடுக்கும் முடிவுகள் அனைத்துமே, இப்படித்தான் பல விபரீதங்களை விதைக்கின்றன. அந்த வகையில், கும்பகோணத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 18-ம் தேதி, கறுப்பு தினமாகவே வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது. அதன்பிறகு, இரண்டு மகாமகங்கள் கடந்துவிட்டன. ஆனாலும், அந்த வடுக்கள் ஆறாத ரணங்கள். செருக்கு மிகுந்த ஆட்சியாளர்களின் அலங்கோலங்களுக்கு சாட்சிகளாக இருக்கின்றன அநியாயமாக மிதிபட்டுப் பறிபோன 48 உயிர்கள்!

அடுத்த கட்டுரைக்கு