Published:Updated:

`நீ என்ன சாதி..? தமிழ்ச்சாதி' - நெருப்புத் தமிழன் முத்துக்குமார் நினைவு தினப் பகிர்வு!

முத்துக்குமார்
முத்துக்குமார்

முத்துக்குமார் மூட்டிய நெருப்புதான், ஈழத்துக்காக மட்டுமல்லாமல் காவிரிக்காக, முல்லைப் பெரியாருக்காக, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக, மீத்தேன், ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக இன்னும் இதில் விடுபட்டுப்போன பலநூறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் அனலாகத் தகிக்கிறது.

ஜனவரி 29, 2009...

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை

உடலில் தீய்க்காயங்களோடு, வாழ்வின் இறுதித் தருணத்தில் இருக்கும் அந்த இளைஞனிடம் காவல்துறை அதிகாரிகள், பெயர், வயது, ஊர், வேலை என எல்லாம் கேட்டுவிட்டு கடைசியாக

'நீ என்ன சாதி' எனக் கேட்கிறார்கள்...

'தமிழ்ச்சாதி' என்கிறான் அவன்.

இறக்கும் தருவாயிலும் அவனுக்கிருந்த மொழிப்பற்றும் இனப்பற்றும், தமிழ்ச்சமூகத்தை பீடித்த பெரும் நோயான சாதி குறித்த கேள்வியை, அவன் கையாண்ட விதமும் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்துகிறது.

அந்தக் கணத்தில் அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான் எனச் சொல்ல முடியாது. அந்த உயிர் அவன் உடம்பில் நீடிக்க போராடிக்கொண்டிருந்த தருணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆம், அவன் திட்டமிட்டே செய்திருந்தான். முழுமனதோடு தன்னுயிரைத் தரத் தயாராகியிருந்தான் என்பதை மருத்துவர்களுடனான அவன் உரையாடல் மூலமாக நாம் அறியலாம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம்
இந்தி எதிர்ப்புப் போராட்டம்

மருத்துவர்கள்: ``பொதுவாக தீ வைத்துக்கொள்பவர்களுக்கு இவ்வளவு காயம் ஏற்படாதே. எப்படி வைத்துக்கொண்டீர்கள்?''

முத்துக்குமார்: ``என்னை யாரும் காப்பாற்றிவிடக் கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளவில் ஓட்டை போட்டு, மண்ணெண்ணெயை என் மீது ஊற்றிக்கொண்டேன்.''

மருத்துவர்கள்: ``இவ்வளவு புத்திசாலியாய் இருக்கும் நீ, ஏன் தீக்குளித்தாய்?''

முத்துக்குமார்: ``என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான்.''

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?
- முத்துக்குமார் (தன் கடிதத்தில்)
Vikatan

ஆம்... இன்றிலிருந்து சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கட்டுரையை கை நடுக்கத்தோடு நான் எழுதும் இதே நேரத்தில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனுக்கு வந்து தான் கையில் கொண்டு வந்த கடிதத்தை எந்தவிதப் பதற்றமும் இல்லாமல், மக்களிடம் விநியோகித்துவிட்டு, ஈழத்தமிழர்களை காப்பாற்றக்கோரி முழக்கமிட்டு, தன்னுடல் மீது தீ வைத்துக்கொண்டான் 29 வயதான இளைஞன் ஒருவன். அவன் பெயர் முத்துக்குமார்.

தன் கண் முன்னே தன்னின மக்கள் கொத்துக்கொத்தாகக் கொலை செய்யப்படுவதைப் பொறுக்க முடியாமல், பெண்கள், குழந்தைகள் சித்ரவதைக்கு ஆளாவதைச் சகிக்க முடியாமல் தன்னையே இழக்கத் துணிந்தான் அந்த இளைஞன். அதுவரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், வழக்கமாகப் போராடும் அரசியல் இயக்கங்கள் மட்டுமே ஈழத் தமிழர்களுக்காக நீதி கேட்டு வீதிக்கு வந்திருந்த வேளையில், பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் பெருவாரியான மாணவர்களை, இளைஞர்களைப் போராட வீதிக்கு அழைத்து வந்தவன் அவன்தான்.

தமிழகத்தில் நடந்த முக்கியமான போராட்டங்களாக மூன்று போராட்டங்களைச் சொல்லலாம். ஒன்று இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தன் மொழிக்காகப் பல்லாயிரணக்கணக்கான மாணவர்கள் ஒன்றுகூடிப் போராடி, உயிரிழந்து, தங்களின் மொழியைக் காத்தது. அதுவரையில் கோலோச்சி வந்த தேசியக் கட்சிகளின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் இனம், மொழி, இட ஒதுக்கீடு என்று பேசும் கட்சிகளை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்தது. அதற்குப் பிறகு, மாணவர்கள் ஒன்று சேர்ந்த நிகழ்த்திய மாபெரும் போராட்டங்கள் எனக் குறிப்பிட எதுவும் இல்லை. மாணவர்கள் போராட்டத்தின் மூலமாக ஆட்சிக்கு வந்த கட்சிகளும் அதை விரும்பவில்லை.

மறுபுறம், உலகமயமாக்கல்! அரசை நேரடியாகச் சார்ந்திருந்தால்தானே, வறுமை சூழும் வேளையில் அரசை எதிர்த்துக் கேள்வி கேட்க மனம் வரும்? உலகமயம், தனியார்மயம் அதற்கு வேலை இல்லாமல் செய்துவிட்ட பிறகு; அரசை, அரசு வேலையைச் சார்ந்திருத்தலே அவமானமாகப் பார்க்கப்பட்ட பிறகு; ஒருவனின் தரம் பொருளாதார ரீதியாக கணக்கிடப்பட்ட காலத்துக்குப் பிறகு; மனிதர்களிடம் விலகிப் பொருள்களை நோக்கி ஓடும் காலம் உருவாகிவிட்ட பிறகு, மக்களுக்கும் போராட்டங்களுக்கும்... குறிப்பாக மாணவர்களுக்கும் போராட்டங்களுக்கும் பெரிய இடைவெளி உண்டானது.

ஜல்லிக்கட்டு போராட்டம்
ஜல்லிக்கட்டு போராட்டம்

அந்த இடைவெளியைத் தன்னுயிரைக் கொண்டு நிரப்பியவன் முத்துக்குமார். அரசியலா? அதுக்கும் நமக்கும் ஆகாது. அரசியல் என்றால் சாக்கடை என்று விலகியிருந்த லட்சோபலட்சம் இளைஞர்களை அரசியலின் பக்கம் திருப்பியவன் அவன். அதற்குப் பிறகு, தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் பற்றியெறிந்தது மாணவர் போராட்டம். ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணவர்களிலிருந்து ஓராயிரம் தலைவர்கள் உருவானார்கள். அதுவரையில் ஈழ மக்களுக்காகப், போராடிய தலைவர்கள் எல்லாம் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்தார்கள்.

முத்துக்குமார் தன் கடிதத்தில்...
உங்கள் சொந்த மாநிலத்தில்கூட இல்லாத நிம்மதியோடும் பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடுதான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருக்கும் எங்கள் சகோதரர்கள், இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆகக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை வற்புறுத்துங்கள்.
முத்துக்குமார் கடிதம்
முத்துக்குமார் கடிதம்

அன்று முத்துக்குமார் மூட்டிய நெருப்புதான் மொழிப்போராட்டத்துக்குப் பிறகு, 40 ஆண்டுகள் எதையும் கண்டுகொள்ளாமல் உறங்கிக்கொண்டிருந்த தமிழ் மாணவச் சமூகத்தை தட்டியெழுப்பியது. வழக்கறிஞர்களுக்கு; என்னுடலை உடற்கூறாய்வு செய்யும் மருத்துவர்களுக்கு; காவல்துறை நண்பர்களுக்கு; தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களுக்கு; தமிழீழ மக்களுக்கு; சர்வதேச சமூகத்துக்கு... என அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக அவன் எழுதிய கடிதம்தான் சாதி, மதம், வர்க்கம் கடந்த அனைவரையும் களத்துக்கு அழைத்து வந்தது.

தமிழகத்தில் முத்துக்குமார் மூட்டிய போராட்ட நெருப்புதான், ஈழத்துக்காக மட்டுமல்லாமல், காவிரிக்காக, முல்லைப் பெரியாருக்காக, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக, மீத்தேன், ஹைட்ரோ கார்பானுக்கு எதிராக இன்னும் இதில் விடுபட்டுப்போன பல நூறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் பற்றி எறிகிறது. `உங்கள் மத்தியில் ஒரு தலைவனைத் தேடுங்கள்’ எனும் முத்துக்குமாரின் வாசகங்கள்தான் அன்று கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பல மாணவர்களை இன்று இளம் அரசியல் தலைவர்களாக உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் இன்றிருக்கும் கட்சி சாராத பெருவாரியான மாணவ, இளைஞர்கள் அமைப்புகள் எல்லாம் முத்துக்குமார் மூட்டிய தீயில் உருவானவைதான். அதன் தலைவர்களாக இருப்பவர்களெல்லாம் முத்துக்குமாரின் தியாகத்தில் கருவானவர்கள்தான்.

`இளைஞர்கள் போராடக் கற்றுக் கொடுக்கிறார்கள்’ - ஜே.என்.யூ போராட்டம் தொடர்பாக மும்பை நீதிமன்றம் கருத்து
சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள் - நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?
- முத்துக்குமார் (தன் கடிதத்தில்)

''என் பிரேதத்தை உடனே எரித்துவிடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள். என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்” எனும் முத்துக்குமாரின் கோரிக்கை, அன்றைய நாளின் அரசியல் சூழ்ச்சிகளால் நடைபெறாமல் போயிருந்தாலும், அவன் தியாகம் அன்றிலிருந்து இன்று வரை பல நூறு போராளிகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. ஏன் ஒட்டு மொத்த இந்தியவையே திரும்பிப் பார்க்க வைத்த, ஜல்லிக்கட்டு போராட்டம்கூட முத்துக்குமார் மூட்டிய நெருப்பின் தொடர்ச்சிதான்.

எழுக தமிழ் போராட்டம்
எழுக தமிழ் போராட்டம்

இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் ஒரு வரலாறு என்றால் முத்துக்குமாரின் மரணமும் ஒரு வரலாறுதான். ஆனால், முத்துக்குமார் அன்று இந்திய அரசிடம் சர்வதேச சமூகத்திடம் முன்வைத்த கேள்விகள் இன்றளவும் அப்படியேதான் இருக்கின்றன. போர் ஓய்ந்து பத்தாண்டுகளுக்கு மேலான பிறகும் இன்னும் ஈழ மக்களுக்கான தீர்வோ, கொல்லப்பட்டவர்களுக்கான நீதியோ கிட்டவில்லை. காணாமல் போனவர்கள் என இதுநாள் வரையில் சொல்லப்பட்டு வந்தவர்களும் இறந்துவிட்டார்கள் என்கிறார் தற்போதைய இலங்கை அதிபர். முத்துக்குமார் தன் கடிதத்தில் குறிப்பிட்டத்தைப்போல, சர்வதேச சமூகம் இன்னும் தன் மௌனத்தைக் கலைக்காமல் இருக்கிறது.

முத்துக்குமார் தன்னினமான தமிழ் மக்களுக்காக மட்டுமா உயிர் விட்டான். நிச்சயமாக இல்லை. ''பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்; தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; தமிழ்நாட்டுக்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்...” எனச் சிங்கள மக்களுக்காகவும் அவன் முன்வைத்த கோரிக்கைகள் சாகும் வேளையிலும் அறத்தை வாழவைத்தவை.

பல ஆயிரம் தமிழர்கள் இறந்துபோனதாக அறிவிப்பு...
மீட்பு நடவடிக்கைக்கு இலங்கை முற்றுப்புள்ளி!

முத்துக்குமார் தேர்ந்தெடுத்த பாதையை இனியொருவர் தேர்ந்தெடுக்காமல் இருப்பதும், முத்துக்குமார் என்னும் அந்த இளைஞன் எதற்காகத் தன்னுயிரைத் தந்தானோ அதற்காகப் போராடுவதும், குரல் கொடுப்பதுவுமே அவனுக்காக நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

அடுத்த கட்டுரைக்கு