Published:Updated:

திருவாரூர்: இறுதிச் சடங்கின்போது வந்த கொரோனா ரிசல்ட்! -தி.மு.க பிரமுகருக்கு நேர்ந்த துயரம்

மரணம்
மரணம் ( Representational Image )

``ரிசல்ட் வருவதற்கு முன்னாடியே ஏன் உடலை ஒப்படைச்சாங்கனு தெரியலை. இதனால் ஊர்மக்கள் கொரோனா பயத்துல கிடக்குறோம்” என இப்பகுதி மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த ஓருவருக்கு, இறுதிச்சடங்கின் போது கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதனால் ஊர்மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டமெடுத்துள்ளனர். இறந்தவரின் குடும்பத்தினரும் வீட்டுக்குள் சென்றுவிட்டார்கள். அருகில் யாருமே இல்லாமல் பிணமாக கிடந்த நபர், இதே ஊரின் உள்ளூர் வி.ஐ.பி என்பதுதான் சோகம்.

கோவிந்தராசு
கோவிந்தராசு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள, எடகீழையூரைச் சேர்ந்தவர், கோவிந்தராசு. இவர் தி.மு.க ஊராட்சி கழக செயலாளராக இருந்துள்ளார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, மன்னார்குடி அரசு பொது மருத்துவமனையில் அவ்வபோது சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே ஊரைச் சேர்ந்த காமராஜ் என்பவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இதனால் இங்குள்ள பலருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

கோவிந்தராசுவுக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிசல்ட் வரவில்லை. இந்நிலையில்தான் நேற்று காலை, கோவிந்தராசுவுக்கு உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. மன்னார்குடி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கொரோனா ரிசல்ட் வந்தால்தான் டயாலிசிஸ் செய்ய முடியும் என மருத்துவர்கள் சொல்லியுள்ளார்கள். மற்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மதியம் 12 மணியளவில் கோவிந்தராசு உயிரிழந்துள்ளார்.

இதன்பிறகு நடந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய ஊர் மக்கள், ``கொரோனா ரிசல்ட் வந்தால்தான், உடலை ஒப்படைப்போம்னு மன்னார்குடி மருத்துவமனை மருத்துவர்கள் சொல்லியிருக்காங்க. அதுவும் கூட பாசிட்டிவ்னு வந்தால், சுகாதாரத்துறை பணியாளர்கள்கிட்டதான் கொடுப்போம்னு சொல்லியிருக்காங்க. 2 மணியளவில் ’ரிசல்ட் வந்துடுச்சி.. கொரோனா நெகட்டீவ்’னு சொல்லி, கோவிந்தராசு உடலையும் குடும்பத்தினர்கிட்ட கொடுத்துட்டாங்க.

வீட்டுக்கு முன்னாடி வச்சு, உடலை குளிப்பாட்டி, மாலை போட்டு ஊர் மக்கள் எல்லாரும் இங்க ஒண்ணா கூடி, மாலைகள் போட்டு, அழுது எல்லாம் நடந்துக்கிட்டு இருக்குற சமயத்துலதான் கோவிந்தராசுக்கு கொரோனா பாசிட்டிவ்னு சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து சொல்லியிருக்காங்க. உடனே ஊர்மக்கள் எல்லாரும் உயிரைக் கையில புடிச்சிக்கிட்டு பதறியடிச்சி ஓடிட்டோம். ஒருத்தர்கூட அங்க இல்லை.

பிரேதம் மட்டும் தனியாக கிடந்திருக்கு. சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பிரேதத்தை இடுகாட்டுக்கு கொண்டு போயிருக்காங்க. கொரோனா பயத்துனால, ஜே.சி.பிகாரங்க குழி தோண்ட வரலை. ராத்திரி பத்துக்கு மேலதான் ஜே.சி.பி கிடைச்சி, கோவிந்தராசு உடலை அடக்கம் செஞ்சிருக்காங்க. மன்னார்குடி அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர்தான் இந்த தவறுக்கு முக்கிய காரணம்.

ரிசல்ட் வருவதற்கு முன்னாடியே ஏன் உடலை ஒப்படைச்சாங்கன்னு தெரியலை. இதனால் ஊர்மக்கள் கொரோனா பயத்துல கிடக்குறோம். தவறு செய்த மருத்துவத்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கணும்” என ஆதங்கத்தோடு தெரிவித்தார்கள்.

Corona Live Updates: தமிழகத்தில் 1.6 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 4,538 பேருக்குத் தொற்று

மன்னார்குடி அரசு மருத்துவமனை உயர் அலுவலர் விஜயகுமாரிடம் பேசியபோது, ‘’இதில் எங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள், கோவிந்தராஜுவுக்கு கொரோனா நெகட்டிவ்தான், பிரேதத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைச்சிடுங்கன்னு சொன்னாதால்தான் கொடுத்தோம்” என்றார்.

திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜமூர்த்தியிடம் பேசினோம். ‘’கொரோனா அறிகுறிக்காக கோவிந்தராசு மருத்துவமனைக்கு வரவில்லை. அவர் சிறுநீரக நோயாளி. மனிதாபிமானத்தோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இறந்த பிறகு அவரது குடும்பத்தினரிடம்தான் பிரேதத்தை ஒப்படைச்சோம். பின்னர்தான், கொரோனா பாசிட்டிவ்னு தெரிந்தது. இதனால் தகுந்த ஏற்பாடுகளோடு சுகாதாரத்துறையினர் உடலை அடக்கம் செய்தனர்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு