Published:Updated:

`இந்தியத் தேர்தல் நடைமுறையின் சீர்திருத்தவாதி' - டி.என்.சேஷன் காலமானார்!

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சென்னையில் காலமானார்

 டி.என்.சேஷன்
டி.என்.சேஷன்

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் (வயது 87) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் காலமானார். கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள திருநெல்லையைச் சேர்ந்த டி.எஸ். நாராயணய்யர், சீதாலட்சுமி தம்பதிக்கு டிசம்பர் 15,1932-ம் ஆண்டு மகனாகப் பிறந்தார். மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் இயற்பியல் பட்டம் பயின்றார். மூன்றாண்டுகள் இதே கல்லூரியில் பணியாற்றினார். ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். 1955-ம் வருடம் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

 டி.என்.சேஷன்
டி.என்.சேஷன்

இவர், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறை இயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர் என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். அதேபோல் மத்திய அரசிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1988-ம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1989-ம் ஆண்டு அமைச்சரவை செயலாளராக பதவி உயர்வு பெற்றார். ஆனால், வி.பி.சிங் ஆட்சிக்கு வந்ததும் சேஷன் திட்டக் கமிஷனுக்கு அனுப்பப்பட்டார்.

இந்தியாவின் 10-வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக 1990-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பொறுப்பேற்றார். 1996-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்த காலத்தில்தான், வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கியது. வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் தேர்தல் சீர்திருத்தப் பணிகளில் மும்முரமாக செயல்பட்டார். சேஷன் பணியில் மிகவும் கண்டிப்பான நபர்.

`இந்தியத் தேர்தல் நடைமுறையின் சீர்திருத்தவாதி' - டி.என்.சேஷன் காலமானார்!

விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் தனது முழு அதிகாரத்தைப் பயன்படுத்தியது இவரது பதவிக்காலத்தில்தான் எனக் கூறலாம். இதன்காரணமாக இந்தியத் தேர்தல் நடைமுறையின் சீர்திருத்தவாதி என அழைக்கப்பட்டார். இவருக்கு 1996-ம் ஆண்டு உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது. டி.என்.சேஷனின் மனைவி ஜெயலஷ்மி கடந்த வருடம்தான் காலமானார். இந்த நிலையில், நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டு சேஷன் உயிரிழந்துள்ளார். சேஷன் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.