Published:Updated:

`பஹ்ரைனில் இறந்த கணவர்; கலங்கி நின்ற மனைவி' - வைகோ உதவியால் நெகிழ்ந்த திருச்சி குடும்பம்

வைகோ
வைகோ

ராஜன்ராமனின் உடலைக் கொண்டு வருவதற்கு வைகோ கடும் சிரத்தை எடுத்தார். முதலில் இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பஹ்ரைன் நாட்டில் பணிபுரிந்து வந்த திருச்சியைச் சேர்ந்த ஒருவர் திடீரென இறந்துவிட அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்காக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எடுத்த பெரும் முயற்சி அந்தக் குடும்பத்தை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வைகோ எழுதிய கடிதம்
வைகோ எழுதிய கடிதம்

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்ராமன். வயது 44. இவரின் மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 5-ம் வகுப்பு படிக்கின்ற ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், பஹ்ரைன் நாட்டில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்த ராஜன்ராமன் கடந்த 25-ம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் இறந்துவிட்டார் என வந்த தகவல் அவரின் குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்கும்விதமாக விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், `தன் கணவர் உடல் சொந்த ஊருக்கு வந்து சேருமா... கடைசியாக தானும் தன் பிள்ளைகளும் அவர் முகத்தைப் பார்க்க முடியுமா' என்ற கவலையில் ராஜன்ராமனின் மனைவி ராஜகுமாரி தன் குழந்தைகளை அணைத்துக்கொண்டு கதறியிருக்கிறார். மேலும், அவர் சம்பாத்தியத்தில்தான் இந்தக் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. ``இனி இரண்டு பிள்ளைகளை வைத்து கொண்டு என்ன செய்யப்போகிறேன். அவர்களின் எதிர்காலத்தை நினைச்சா ஒரே கவலையா இருக்கு" என்றும் கலங்கியபடியே இருந்துள்ளார்.

ஆம்புலன்ஸ் வாகனம்
ஆம்புலன்ஸ் வாகனம்

ராஜன்ராமனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அவரது உறவினர்கள் செய்துள்ளனர். ஆனால், கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் உடலைக் கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்தத் தகவல் பஹ்ரைனில் உள்ள தஞ்சாவூரைச் சேர்ந்த வல்லம் பசீர் என்பவருக்குச் சென்றது. இவர் ம.தி.மு.க-வில் வளைகுடா நாடுகளின் பொறுப்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உடனே பஹ்ரைனில் உள்ள சமூக ஆர்வலரான ருத்ரமூர்த்தியைத் தொடர்புகொண்டு ராஜன்ராமன் குறித்த ஆவணங்களைப் பெறுமாறு வலியுறுத்தினார்.

இந்த நிலையில் வல்லம் பசீர், இதை ம.தி.மு.க பொதுசெயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். அனைத்தையும் அமைதியாக கேட்ட வைகோ, ``ஒரு பெண்ணுக்கு அவர் கணவர்தான் உலகம். அவர் மறைந்துவிட்ட நிலையில் அந்தப் பெண் மனது எப்படி துடிக்கும் என்பதையும், ராஜகுமாரியின் மனநிலையையும் அறிய முடிகிறது. அவரின் ஆசையை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். எப்படியாவது முயற்சி எடுத்து அவர் உடல் சொந்த ஊருக்கு வரச் செய்கிறேன்" என்றவர், உடனே அதற்கான பணியில் இறங்கினார்.

ராஜன்ராமன்
ராஜன்ராமன்

இது குறித்து வல்லம் பசீரிடம் பேசினோம், ``கொரோனா பாதிப்பால் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ராஜன்ராமனின் உடலைக் கொண்டு வருவதற்கு வைகோ கடும் சிரத்தை எடுத்தார். முதலில் இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். அதன்பின்னர் அந்தக் கடிதம் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வந்தது. பின்னர் சரக்குகள் கொண்டுவரப்படும் விமானத்தின் மூலம் உடலை அனுப்ப முடிவு செய்தனர்.

கேரளாவில் உள்ள கொச்சின் விமான நிலையத்துக்குதான் அந்த விமானம் செல்லும் என்பதால் உடனடியாக உடல் வந்து சேர்ந்தவுடன் அனுப்பிவைப்பதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பினார். அத்துடன் எல்லைகள் முடக்கப்பட்டுள்ளதால் எந்தவிதமான சிக்கல்களும் ஏற்படாமல் இருக்க எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் சுகாஸ் ஐ.ஏ.எஸ் அவர்களிடமும், எதிர்க்கட்சி தலைவர் சென்னிதலாவிடமும் தொலைபேசியில் பேசி எந்தச் சிக்கலும் இல்லாமல் ராஜன்ராமனின் உடல் வந்து சேர்வதற்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

கடிதம்
கடிதம்

இன்று பஹ்ரைனிலிருந்து ராஜன்ராமன் உடல் சரக்கு விமானம் மூலம் கொச்சிக்கு வந்தது. உடலை எடுத்துச் செல்ல அங்கு அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸுடன் தயாராக இருக்கின்றனர். அங்கு ஏதேனும் சிக்கல் வந்தால் அதை சரி செய்வதற்காக தனது உதவியாளர் ஒருவரையும் வைகோ அனுப்பி வைத்தார். வைகோ மனிதாபிமானம் மிக்கவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு குடும்பத்தின் ஏக்கத்தை உணர்ந்து இதில் நேரடியாக அவரே தலையிட்டு ஒருவரது உடலைக் கொண்டு சேர்ப்பதற்காக அவர் எடுத்த முயற்சிகளை நினைத்து பெரும் வியப்படைந்தேன்" என தெரிவித்தார்.

`எங்கே இருக்கிறார் உமர் அப்துல்லா... அழைப்பிதழ் கொடுக்கணும்!' - நீதிமன்றத்தை நாடிய வைகோ

ராஜன்ராமனின் மைத்துனர் நவீன் என்பவரிடம் பேசினோம், `ராஜகுமாரி உட்பட உறவுகள் அனைவருக்கும் அவர் உடல் வந்து சேருமா, முகத்தைப் பார்க்க முடியுமா என்ற கேள்வி இருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் சொந்த ஊருக்கு உடல் வந்து சேர உள்ளது. இதற்காக வைகோ அவர்கள் எடுத்த முயற்சிகள் எங்களுக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு