Published:Updated:

`நீ கிடைக்கலன்னா தற்கொலை பண்ணிக்குவேன்!'- இளைஞரின் மெசேஜால் உயிரைவிட்ட அரசு பெண் ஊழியர்

ரா.சதீஸ்குமார்

நீலகிரி மாவட்டம், ஊட்டி கோர்ட்டில் தட்டச்சராக பணியாற்றி வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஊட்டி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு
ஊட்டி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு

கோவை மாவட்டம், புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம். இவரின் மகள் இந்திரா பிரியதர்ஷினி (31). TNPSC தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஊட்டியில் உள்ள கோர்ட்டில் இந்த ஆண்டு தட்டச்சராகப் பணியில் சேர்ந்தார். திருமணம் ஆகாத இவர் ஊட்டியில் உள்ள சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி தினமும் பணிக்குச் சென்றுவந்தார். விடுமுறை நாள்களில் கோவைக்குச் சென்று பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவார். வழக்கம் போல் நேற்று காலையும் விடுதியில் இருந்து பணிக்குச் சென்று மாலை விடுதிக்குத் திரும்பினார்.

ஊட்டி அரசு மருத்துவமனை
ஊட்டி அரசு மருத்துவமனை

இரவு 9 மணியளவில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்த பெண்கள் பதறிப்போய் விடுதி காப்பாளரிடம் கூறினர். இந்திரா பிரியதர்ஷினி விஷம் குடித்திருக்கக்கூடும் என சந்தேகித்த விடுதி காப்பாளர் மற்றும் உடன் இருந்தவர்கள், வாகனத்தில் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பிரியதர்ஷினியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஊட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு வந்த போலீஸார் இறந்த பெண்ணின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு விசாரணையை தொடங்கினர். இந்திரா பிரியதர்ஷினியின் மொபைல் போனை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பாபு என்ற இளைஞர் செல்போனில் அழைத்துள்ளதும் மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்தது. `நீ கிடைக்கலன்னா நான் தற்கொலை பண்ணிக்குவேன்' என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.

ஊட்டி அரசு மருத்துவமனை
ஊட்டி அரசு மருத்துவமனை

மேலும், விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினருக்கு பல உண்மைகள் வெளிவந்தன. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ``ராஜேஷ் பாபு மற்றும் அவரின் குடும்பத்தினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்திரா பிரியதர்ஷினியைப் பெண் பார்த்துச் சென்றுள்ளனர். விருப்பம் இல்லாததுபோல ராஜேஷ்பாபு மற்றும் ராஜேஷ்பாபு வீட்டார் நடந்துள்ளனர். அதன் பின்னர் இந்திரா பிரியதர்ஷினிக்கு ஊட்டி கோர்ட்டில் அரசுப்பணி கிடைத்தது.

இந்திராவுக்கு அரசு வேலை கிடைத்தும் அவரை மணக்க மீண்டும் திருமணப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்துகொண்ட பெண் வீட்டார் ராஜேஷ் பாபு மற்றும் ராஜேஷ்பாபு வீட்டாரை சந்திப்பதை தவிர்த்துள்ளனர். பின்னர் எப்படியோ இந்திரா பிரியதர்ஷினி எண்ணை வாங்கிய ராஜேஷ்பாபு அவரிடம் பேசத் தொடங்கியுள்ளார்.

இந்திரா பிரியதர்ஷினி
இந்திரா பிரியதர்ஷினி

தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், இந்திரா வீட்டில் வேறு ஒருவரை திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இரண்டு பக்கமும் பதில் சொல்ல முடியாமல் தவித்த இந்திரா என்ன செய்வதென்று தெரியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்” என்றனர். இந்திரா பிரியதர்ஷினியின் உடலை வாங்க மருத்துவமனைக்கு வந்திருந்த உறவினர்களிடம் பேச முயற்சி செய்தோம். ஆனால், அவர்கள் பேச மறுத்துவிட்டனர்.