Published:Updated:

`வீட்டிலிருந்த மருத்துவர்கள்; மொபைல்மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்கள்?’- பறிபோன இளம்பெண் உயிர்

உயிரிழந்த இளம்பெண் பரீதா
உயிரிழந்த இளம்பெண் பரீதா

வீட்டிலிருந்த மருத்துவர்களிடம் செல்போனில் ஆலோசனை கேட்டு செவிலியர்களே பிரசவம் பார்த்ததால், இளம்பெண் உயிரிழந்த சம்பவம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நடந்திருக்கிறது.

திருப்பத்தூர் டவுன் ஆரிப் நகரைச் சேர்ந்தவர் இம்ரான் (30), கூலித் தொழிலாளி. இவரின் மனைவி பரீதா (25). இந்தத் தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், பரீதா இரண்டாவதாக கருவுற்றிருந்தார். கடந்த 21-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு, பரீதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சேர்க்கப்பட்டார்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை

அந்த நேரத்தில், மருத்துவர்கள் ஒருவர் கூட பணியில் இல்லை. சிறிது நேரத்தில், குழந்தையின் தலை வெளியில் தெரிந்து தாமாகப் பிரசவிக்க நேர்ந்ததால், வலி தாங்க முடியாமல் பரீதா கதறி துடித்தார். உறவினர்கள், ஓடிச் சென்று செவிலியர்களிடம் தகவல் கூறினர். அலட்சியமாக அவர்கள் பதில் கூறியதால், உறவினர்கள் ஆத்திரமடைந்து கடும் வாக்குவாதம் செய்தனர். அதையடுத்து, மருத்துவர்களுக்குத் தகவல் கொடுக்காமல் செவிலியர்களே பிரசவம் பார்த்தனர்.

குழந்தையை வெளியில் எடுக்கும்போது சந்தேகம் ஏற்பட்டதால், வீட்டிலிருந்த மருத்துவர்களைப் போன் மூலம் தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டனர் செவிலியர்கள். போன் மூலமாகத்தான் பிரசவமே நடந்துமுடிந்தது. பரீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. செவிலியர்கள் அறையிலிருந்து வெளியில் சென்றுவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில், பரீதா மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

செவிலியர்கள்
செவிலியர்கள்

பணியில் அலட்சியமாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவர்கள் அமைதியாகினர். இந்தச் சம்பவம் தொடர்பாக, சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மின் மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநரக அதிகாரிகள், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாள்களாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களிடம் பரீதாவின் உறவினர்கள் சிலர் கூறுகையில், ``பரீதாவை பிரசவத்துக்காக அனுமதித்தபோது, மருத்துவர்கள் பணியில் இல்லை. மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது, செவிலியர்களிடம் ஓடிச் சென்று தகவல் கூறினோம். `சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறோம், போ வர்றோம்’ என்று சொன்னவர்கள் நீண்ட நேரமாகியும் வரவில்லை. திரும்பப் போய் சொன்னதற்கு, `செத்தா போய்டுவா...’ என்று செவிலியர்கள் அலட்சியமாகப் பதில் கூறியதுடன் ஆபாசமாகவும் எங்களிடம் கடிந்துகொண்டனர். பரீதா இறப்புக்கு மருத்துவர்கள், செவிலியர்கள்தான் காரணம்’’ என்றனர் கொதிப்புடன்.

சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மின்
சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மின்

இதுகுறித்து, சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மினிடம் பேசினோம். ``நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு மேல்தான் விசாரணை நிறைவடைந்தது. சனி, ஞாயிறு விடுமுறை நாள் என்பதால், விசாரணை அறிக்கையைத் திங்கட்கிழமைதான் சமர்ப்பிப்போம். அதன்பிறகு, பரீதா இறப்புக்கான காரணம் குறித்தும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீதான நடவடிக்கை குறித்தும் நிச்சயமாகத் தெரிவிக்கிறேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு