Published:Updated:

`தொடர் காய்ச்சல்; மஞ்சள் காமாலை?' - திருச்சி அரசு மருத்துவமனை 6-வது மாடியிலிருந்து குதித்த இளைஞர்

காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த கணேசமூர்த்திக்கு, காய்ச்சல் குணமானாலும், மஞ்சள் காமாலை இருப்பது உறுதி செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

கணேச மூர்த்தி
கணேச மூர்த்தி

திருச்சி அரசு மருத்துவமனை, இன்று காலை வழக்கம்போல நோயாளிகள் வருகையால் பரபரப்பாக இருந்தது. அப்போது, மருத்துவமனையின் 6-வது மாடியிலிருந்து இளைஞர் ஒருவர் திடீரென குதித்தார். அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள், இளைஞர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுதான் வேதனை. தற்கொலை செய்துகொண்டவர், திருச்சி அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த பெல் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி நாகராஜனின் மகன் கணேசமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர் பொறியியல் பட்டதாரி.

நாகராஜனுக்கு, மீராபாய் என்கிற மனைவியும், இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். முதல் மகனும், மகளும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், இளையமகன் கணேசமூர்த்தியுடன் நாகராஜன் வசித்துவந்தார். கணேசமூர்த்தி கோயம்புத்தூரிலுள்ள பஞ்சாலை ஒன்றில் பணிபுரிந்தார். கடந்த சிலவாரங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், தற்கொலை செய்துகொண்ட செய்தி காட்டுத்தீயாய் பரவ, திருச்சி அரசு மருத்துவமனை பரபரப்பானது.

தாய் மீராபாய்
தாய் மீராபாய்

தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீஸார், நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், வழக்கமாகத் திருச்சி அரசு மருத்துவமனையின் 6-வது மாடி பாதுகாப்பு காரணங்களுக்காக எப்போதும் மூடியே இருக்கும். அப்படியிருக்கையில், இன்று காலை திறந்திருந்தது ஏன் என்பது குறித்தும் விசாரணை தொடர்கிறது. நள்ளிரவில் வேறு சில சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாகவும், அதன் காரணமாக மொட்டை மாடி திறந்து கிடந்ததாகவும் வெளியான தகவல்கள், மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

போலீஸாரின் விசாரணையில், கோவையில் பணியாற்றிவந்த கணேசமூர்த்தி, வேலையை விட்டுவிட்டுப் பெற்றோரோடு இருந்துவந்தார். இந்த நிலையில், அவர் தீபாவளி முதலே கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வந்தாராம். அதற்காகத் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில், காய்ச்சல் சரியாகாததால் அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கணேசமூர்த்தி
கணேசமூர்த்தி

அங்கு கடந்த 10 நாள்களுக்கும் மேலாக, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, இன்று டிஸ்சார்ஜ் ஆகியிருந்த நிலையில், மருத்துவமனையின் 6-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

நம்மிடம் பேசிய மீராபாய், ``இங்கு வந்தபிறகு உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு நல்லா இருந்தான். அவனை உடனிருந்து கவனித்துவந்தோம். காலையில், பசிக்குதுன்னு சொல்லவே, அவனின் அப்பா வெளியே போய் சாப்பிட டிபன் வாங்கிவரப் போனார். போனவர் திரும்பி வருவதற்குள் இப்படி பண்ணிட்டடானே. கல்யாணத்துக்குப் பெண் பார்த்து வந்தநிலையில் என் பிள்ளை இப்படிப் பண்ணிட்டானே. என்ன செய்வேன்” எனக் கதறினார்.

இந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதாமணி கூறுகையில், ``கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கணேசமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். நோயின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்னர் இங்குவந்தார். அவரைப் பரிசோதனை செய்ததில் காய்ச்சலுடன், மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை வழங்கியதில், காய்ச்சல் முழுவதும் குணமானது. அதையடுத்து, இன்று அவர் வீட்டுக்குச் செல்லும் நிலையில் உடல்நிலை முன்னேறியிருந்தது. இந்த நிலையில், காலை மொட்டைமாடிக்குச் சென்று கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதாமணி
திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதாமணி

சரியான வேலை இல்லாத காரணத்தினாலும், திருமண ஆகாத காரணத்தினாலும் மன உளைச்சலில் இருந்த அவருக்கு, உடல்நிலை சரியில்லாதது மேலும் மன உளைச்சலைக் கொடுத்ததால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்” என்றார்.

காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த கணேசமூர்த்திக்கு, காய்ச்சல் குணமானாலும், மஞ்சள் காமாலை இருப்பது உறுதி செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதற்கு சிகிச்சை வழங்காமல் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்ததும், வழக்கமாக மூடிக்கிடக்கும் 6-வது மாடிக் கட்டடம் திறந்து கிடந்தது எப்படி என்று இந்த விவகாரத்தில் பல்வேறு கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.