
தொடர்ச்சியாக, இந்திய இருமல் மருந்துகளால் அயல்நாட்டுக் குழந்தைகள் உயிரிழந்துவரும் சம்பவம் உலக நாடுகளிடையே இந்திய மருந்துகள் மீதான நம்பகத்தன்மையைக் குலைத்து வருகிறது
மருந்துகள் தொடங்கி கொரோனா தடுப்பூசி வரை உற்பத்திசெய்து, அவற்றை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்த இந்தியா, சமீபகாலமாக சோதனையைச் சந்தித்துவருகிறது.
2022, அக்டோபர் மாதம் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், இந்திய இருமல் மருந்தைக் குடித்த 66 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில், ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் (Maiden Pharmaceuticals) நிறுவனம் காலாவதியான மருந்துகளை முன் தேதியிட்டு, காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்திருப்பது உறுதியானது. உலக சுகாதார நிறுவனம் (WHO) கடுமையாக எச்சரித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான சர்ச்சைக்குரிய நான்கு மருந்துகளின் உற்பத்தியை நிறுத்தியது.
இந்த நிலையில், `இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த, தங்கள் நாட்டின் 18 குழந்தைகள் உயிரிழந்துவிட்டார்கள்’ என உஸ்பெகிஸ்தான் அரசாங்கம் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``இந்தியாவின் மரியான் பயோடெக் (Marion Biotech) நிறுவனம் தயாரித்த, `Doc-1 Max’ எனும் இருமல் மருந்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளில்18 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்தக் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, 2 முதல் 7 நாள்களுக்கு Doc-1 Max மருந்தை 2.5 ml முதல் 5 ml எனும் அளவுகளில் அன்றாடம் மூன்று முதல் நான்கு முறை எடுத்திருப்பதைக் கண்டறிந்தோம். சம்பந்தப்பட்ட மருந்தைப் பரிசோதனை செய்தபோது அதில், `எத்திலின் கிளைக்கோல்’ (Ethylene Glycol) என்ற நச்சுப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியானது. இதனால் நாட்டிலுள்ள அனைத்து மருந்துக் கடைகளிலிருந்தும் Doc-1 Max மருந்தை திரும்பப் பெற்றிருக்கிறோம். இந்த இருமல் மருந்தைத் தயாரித்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ``சர்ச்சைக்குரிய மருந்து நிறுவனத்தில் ஆய்வுகள் நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என உஸ்பெகிஸ்தானுக்கு உறுதியளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவிலிருக்கும் மரியான் பயோடெக் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இது குறித்து மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) மற்றும் உத்தரப்பிரதேச மருந்துக் கட்டுப்பாடு ஆணையம் ஆகியவை இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றன. ஆய்வறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தொடர்ச்சியாக, இந்திய இருமல் மருந்துகளால் அயல்நாட்டுக் குழந்தைகள் உயிரிழந்துவரும் சம்பவம் உலக நாடுகளிடையே இந்திய மருந்துகள் மீதான நம்பகத்தன்மையைக் குலைத்து வருகிறது . எனவே இது போன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் இந்திய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
மருத்துவமும் மருந்துகளும்தான் மனிதர்களின் கடைசி நம்பிக்கை. எனவே, அவற்றில் அலட்சியம் காட்டாதீர்!