உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவின் மைன்புரியில் வசிக்கும் கௌஷல் யாதவ் என்பவர், உணவு டெலிவரி நிறுவனமொன்றில் டெலிவரி பார்ட்னராகப் பணிபுரிந்துவந்தார். இந்த நிலையில், இவர் புத்தாண்டு அன்று இரவு ஒரு மணியளவில் நொய்டாவின் செக்டார் 14 மேம்பாலத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, கௌஷலின் பைக் மீது அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதியிருக்கிறது.

இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய பிறகு, விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவுக்கு அவர் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அதன் பிறகு காரை ஓட்டிவந்த நபர், காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையில், இறந்தவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.
அதில், ``சம்பவத்தன்று இரவு கௌஷலுக்கு போன் செய்தபோது, வேறு ஒருவர் செல்போனை எடுத்து கௌஷல் விபத்தில் சிக்கியிருப்பதாகவும், சனி பகவான் கோயிலுக்கு அருகே சாலையில் கிடப்பதாகவும் தெரிவித்தார். அதன் பிறகே அங்கே சென்று அவரை மீட்டோம். குற்றவாளிமீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, விபத்து குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார், விசாரணை நடத்திவருகின்றனர்.

போலீஸார் அந்தப் பகுதியிலிருக்கும் சிசிடிவி காட்சிகளைக்கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். டெல்லியில் சமீபத்தில், 20 வயது பெண் ஒருவர்மீது கார் மோதியதில், சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.