Published:Updated:

`பா.ஜ.க ஆட்சியைப் பற்றி அப்போதே கூறிவிட்டனர்!’ - நிர்மலா சீதாராமனின் புறநானூறு விளக்கம்

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் ( lok shaba tv )

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் புறநானூறு பாடல் மற்றும் அதற்கான விளக்கத்தை கேட்டு தமிழக எம்.பி-க்கள் அதிர்ந்தனர்.

புதிதாகப் பதவியேற்றுள்ள அரசின் முதல் பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்று காலை 11 மணி முதல் தனது முதல் மத்திய பட்ஜெட்டை வாசித்தார்.

மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்

மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்களுக்குக் கூடுதல் சலுகைகள், 2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டம், ஒரே நாடு, ஒரே மின்சாரம் விநியோக அமைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சம அளவில் மின் விநியோகம் செய்யப்படும், சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம், 2024 -ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் நீர் விநியோகம் போன்ற பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

இதற்கிடையே அவர் பேசும் போது, `` பொறுப்பாக, தவறாமல் வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி. ஐந்து ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அது ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நான் இங்கு சில புறநானூறு வரிகளைச் சொல்ல விரும்புகிறேன். தமிழில் அதைக் கூற சபாநாயகர் எனக்கு அனுமதி வழங்க வேண்டும்’ எனக் கூறிவிட்டு புறநானூறு பாடல் வரிகளான `யானை புகுந்த நிலம்’ என்ற பாடலின் சில வரிகளைக் கூறி விளக்கம் அளித்தார்.

புறநானூறு பாடல்!

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,

மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,

வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,

கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம்போலத்,

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

நிர்மலா
நிர்மலா

விளக்கம் :

சிறு நிலத்தில் விளைந்த நெல்களை உணவாக்கி யானைக்கு அளித்தால் அதைப் பல நாள்கள் பயன்படுத்தலாம். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும் அங்கு யானை நுழைந்தால் கண்ணில் பட்ட நெற்களை உண்பது மட்டுமில்லாது, தன் காலால் மிதிக்கப்பட்டு மொத்த வயலையும் நாசமாக்கும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறையை அறிந்து மக்களிடம் வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அதுவே அறிவில்லாத அரசன் பிறரின் சொல் கேட்டு தினமும் வரி வசூலிக்க நினைத்தால் யானை புகுந்த நிலம் போல தானும் பயனடையாமல் உலகமும் கெட்டுவிடும்.

பாடலின் பின்னணி :

பாண்டியன் அறிவுடை நம்பி, தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் வரி வாங்கினான். அரசனின் தவறுகளை அவனிடம் சென்றுகூற யாரும் முன்வரவில்லை. அந்த நிலையில், அறிவுடை நம்பிக்கு அறிவுரை வழங்குமாறு பிசிராந்தையாரை பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். அவரும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசனுக்கு அறிவுரை வழங்கி எவ்வாறு வரி வசூலிக்க வேண்டும் என்பதை விளக்குவதுபோல இந்தப் பாடல் அமைந்துள்ளது.

மோடி
மோடி
lok sabha tv

தற்போதுள்ள பா.ஜ.க அரசு மக்களிடம் எப்படி வரி வசூலிக்க வேண்டும் எனத் தெரிந்து முறையாக வசூலிப்பதாகவும் அதன் காரணமாகத் தான் 6.3 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நேரடி வரி வருவாய் 11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகச் சுட்டிக் காட்டினார். இன்றைய மத்திய அரசின் ஆட்சியை அப்போதே பிசிராந்தையார் கூறிவிட்டார் என்றும் நிர்மலா சீதாராமன் தன் உரையில் தெரிவித்துள்ளார். அவர் இந்தப் பாடலைக் கூறி அதற்கான விளக்கத்தை முழுமையாகக் கூறி முடிக்கும் முன்பே மக்களவையில் கரகோஷங்கள் எழத்தொடங்கின.

அடுத்த கட்டுரைக்கு