Published:Updated:

கல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன?! #DoubtOfCommonMan

கல்விக்கடன்
News
கல்விக்கடன்

கல்விக்கடன் பெற்றவர்கள், வேலைக்குச் சேர்ந்த ஆறு மாதத்துக்குள் கடன் தவணையைத் திரும்பச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.

Published:Updated:

கல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன?! #DoubtOfCommonMan

கல்விக்கடன் பெற்றவர்கள், வேலைக்குச் சேர்ந்த ஆறு மாதத்துக்குள் கடன் தவணையைத் திரும்பச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.

கல்விக்கடன்
News
கல்விக்கடன்

அடித்தட்டு, ஏழை மாணவர்களும் உயர்கல்வியை எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது கல்விக்கடன் திட்டம். பல ஆயிரம் மாணவர்கள், கல்விக்கடன் திட்டத்தைப் பயன்படுத்தி பட்டதாரிகளாகியிருக்கிறார்கள். கல்விக்கடனுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எவ்வித உத்தரவாதமும் இல்லாமல், கல்வி நிறுவனத்தின் சான்றிதழ்களை மட்டும் பெற்றுக்கொண்டு வங்கிகள் கடன் வழங்கின.

சமீப காலமாக, பெரும்பாலான வங்கிகள் கல்விக்கடன் வழங்க ஆர்வம் காட்டுவதில்லை. கல்விக்கடன் பெற்ற பெரும்பாலான மாணவர்கள், கடனை திருப்பிச் செலுத்தாததே காரணம் என்று வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கல்விக் கடன்
கல்விக் கடன்
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் நிறைய வாசகர்கள் கல்விக்கடன் குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.
கல்விக்கடன் கேட்டு சென்றால், சில வங்கிகள் தர மறுக்கின்றன. கல்விக்கடன் பெற, யாரை எப்படி அணுக வேண்டும்?
வாசகர் கே.ரஞ்சித்
கல்விக்கடனை சிறிது சிறிதாகக் கட்டிவருகிறேன். ஆனால், அந்தத் தொகை வட்டியிலேயே கழிந்துவிட்டது என்கிறார்கள் வங்கி அதிகாரிகள். கலெக்க்ஷன் ஏஜென்டுகளை வீட்டுக்கு அனுப்பி தொல்லைசெய்கிறார்கள். கல்விக்கடன் தள்ளுபடி ஆக வாய்ப்புள்ளதா?
வாசகர் உதய்
Doubt of common man
Doubt of common man
* "பொதுத்துறை வங்கிகள், திரும்ப வராத கல்விக்கடன்களை, ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு விற்றுவிடுவதாகச் சொல்லப்படுவது உண்மையா? அப்படி விற்றால், கல்விக்கடன் வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டுள்ளார், வாசகர் அருண்.
* "படிப்பு முடிந்து 9-15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு நபர் கல்விக்கடனை திரும்பச் செலுத்த முடியாவிட்டால் என்ன நடக்கும்? பணியில் சேர்ந்தாலும்கூட போதிய சம்பளம் கிடைக்காத காரணத்தால் கடனை செலுத்த முடியவிட்டால், அதன் விளைவுகள் எப்படியிருக்கும்" என்று கேட்டுள்ளார், அமிர்தா என்ற வாசகி.
கல்விக்கடன்
கல்விக்கடன்

இந்தக் கேள்விகள் அனைத்தையும் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஸ்டீபன் சுரேஷிடம் முன்வைத்தோம்.

"முதலில், கல்விக்கடன் மறுக்கப்படுவது குறித்து பார்ப்போம். பல்கலைக்கழக மானியக் குழுவின் (ஸ்டீபன் சுரேஷ்.சி) அங்கீகாரம் உள்ள அனைத்து வகையான படிப்புகளுக்கும் கல்விக்கடன் பெறமுடியும். தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கும் கல்விக்கடன் பெறலாம். ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கல்விக்கடன் பெறமுடியும். குடும்ப உறுப்பினர்கள் வாங்கியுள்ள மற்ற கடன்கள், மாணவர்களுக்கான கல்விக்கடனைப் பாதிக்காது. கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள், தங்கள் அருகில் உள்ள வங்கிகள் அல்லது தங்கள் பெற்றோர் கணக்கு வைத்துள்ள வங்கிகளை அணுகி விண்ணப்பம் செய்யலாம்.

கல்லூரிப் படிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம், லேப்டாப் போன்ற அனைத்துக்கும் சேர்த்து மொத்தத் தொகையை கல்விக்கடனாகக் கேட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி அடிப்படையில் கடன் வழங்கப்படும். ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட சதவிகித அளவு கல்விக்கடன் வழங்க வேண்டும் என ஒவ்வோர் ஆண்டும் இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த இலக்கின் அடிப்படையில், வங்கிகள் பயனாளிகளைத் தேர்வுசெய்கின்றன. 4 லட்சம் ரூபாய் வரை கடன் தேவைப்படுபவர்கள், அடமானமோ, ஜாமீன்தாரர் கையொப்பமோ இல்லாமல் கடன் பெறலாம். மாணவரது பெற்றோர் மற்றும் மாணவர் இணைந்து விண்ணப்பித்தால் போதுமானது.

இந்த அளவிலான கடனுக்கு, குடும்ப வருமான அடிப்படையில், மத்திய அரசின் வட்டி மானியம் உண்டு. 4 லட்சம் ரூபாய் முதல் 7.50 லட்சம் வரை கடன் தேவைப்படுபவர்களுக்கு தகுதியுள்ள நபர்கள் யாராவது ஜாமீன் கையொப்பம் இட வேண்டும். சொத்து அடமானம் எதுவும் தேவையில்லை.

கல்விக் கடன்
கல்விக் கடன்

7.50 லட்சத்துக்கு மேல் கடன் தேவைப்படுபவர்கள், வங்கி நிர்ணயித்திருக்கும் அளவில், அசையா சொத்துகள், கடன் பத்திரங்கள், பங்குகள் போன்றவற்றை அடமானமாக வழங்க வேண்டும். 4 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் தேவைப்படுபவர்கள், தன் பங்களிப்பாகக் கடன் தொகையில் 5 சதவிகித அளவு தொகையை முன்பணமாகச் செலுத்த வேண்டும். மத்திய அரசு, 'வித்யாலட்சுமி போர்டல்' என்ற இணையதளத்தை உருவாக்கியிருக்கிறது. இதில், 36 வங்கிகள் பதிவு செய்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கல்விக்கடன் திட்டங்கள் உள்ளன. இந்த இணையதளத்திலும் (www.vidyalakshmi.co.in) பதிவுசெய்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த இணையதளத்தில், ஒரே விண்ணப்பம்மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் விண்ணப்பம் செய்ய இயலும். கிளை மேலாளர் அந்தஸ்தில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு, கல்விக்கடன் கேட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களை நிராகரிக்க அதிகாரம் இல்லை. பிராந்திய மேலாளர் (Regional Manager) அந்தஸ்தில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு மட்டுமே கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க அதிகாரம் உண்டு. அதுவும் தகுந்த காரணம் இருந்தால்தான் நிராகரிக்க முடியும்.

Doubt of common man
Doubt of common man

கல்விக்கடனை திருப்பிச் செலுத்துதல்

கல்விக் கடன்
கல்விக் கடன்

கல்விக்கடன் பெற்றவர்கள், வேலையில் சேர்ந்த ஆறு மாதத்துக்குள் கடன் தவணையைத் திரும்பச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும். சில வங்கிகள், படிப்புக் காலத்தில் வட்டியை மட்டும் வசூல்செய்கின்றன. இந்த விதிகள், வங்கிகளைப் பொறுத்து மாறுபடும். கடனுக்கான வட்டி விகிதங்களும் வங்கியைப் பொறுத்து மாறுபடும். அதுகுறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகளில் தெரிந்துகொள்ளலாம். 7.50 லட்சம் ரூபாய்க்கு உள்ளான கடனை திரும்பச் செலுத்துவதற்கான தவணைக்காலம் 4-10 ஆண்டுகள். அதற்கு மேற்பட்ட தொகையை கடனாகப் பெற்றிருந்தால், 15 ஆண்டுகள் வரை திரும்பச் செலுத்தலாம்.

கல்விக்கடனை திரும்பச் செலுத்தாத நபருக்கு, 'சிபில்' மதிப்பெண் குறைந்துவிடும். கல்விக்கடனை திரும்ப செலுத்தாதபட்சத்தில், அவர் தனிநபர் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட வேறு எந்த கடனையும், எந்த வங்கியிலும் பெறமுடியாது. அதனால், கடனை எப்படியாவது கட்டுவதுதான் நல்லது.
ஸ்டீபன் சுரேஷ்

கடன் பெற்ற நாளிலிருந்தே வட்டி கணக்கு செய்யப்படும் என்பதால், எவ்வளவு விரைவாகக் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவாகக் கட்ட முயற்சி செய்ய வேண்டும். உண்மையிலேயே சம்பளம் குறைவாக இருப்பதால் சிலரால் கடனை திரும்ப செலுத்த முடிவதில்லை. சிலர், 'தேர்தல் வந்தால், வட்டி தள்ளுபடி செய்யப்படும், கடன் தள்ளுபடி செய்யப்படும்' என்ற எண்ணத்தில் பொருளாதார வசதிகள் இருந்தும் கடனை திரும்பச் செலுத்துவதில்லை. கடனைத் திரும்ப செலுத்தாவிட்டால், வராக்கடன் பட்டியலில் வைக்கப்படுமே ஒழிய, கடன் தள்ளுபடி ஆக வாய்ப்பே இல்லை.

மத்திய அரசு மானியத்திட்டத்தின் கீழ் வருபவர்களுக்கு மட்டுமே வட்டி மானியம் கிடைக்கும். அவர்களும் அசல் தொகையைக் கட்டித்தான் ஆக வேண்டும். சில வங்கிகள், வராக்கடன் பட்டியலில் உள்ளவர்களை அழைத்து, வட்டியில் சில சலுகைகளைக் கொடுத்து கடனை வசூலிக்கின்றன. சில வங்கிகள், 'லோக் அதலத்' மூலம், கடன்தாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சில சலுகைகளைக் கொடுத்து கடனை வசூலிக்கின்றன. இப்படி வங்கிகள் அறிவிக்கும்பட்சத்தில், அதைப் பயன்படுத்திக்கொண்டு கடனை முடிக்க முயற்சி செய்யலாம்.

கல்விக் கடன்
கல்விக் கடன்

கல்விக்கடனை திரும்ப செலுத்தாத நபருக்கு, 'சிபில்' மதிப்பெண் குறைந்துவிடும். கல்விக்கடனை திரும்ப செலுத்தாதபட்சத்தில் அவர் தனிநபர் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட வேறு எந்த கடனையும் எந்த வங்கியிலும் பெறமுடியாது. அதனால், கடனை எப்படியாவது கட்டுவதுதான் நல்லது. கட்டாமல் இழுத்தடித்து வந்தால், வட்டி அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்பதை மனதில் வைக்க வேண்டும். படிப்புக் காலம் எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும், கடன் வாங்கிய நாளிலிருந்து வட்டி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதை மறக்காதீர்கள். மாதாமாதமோ ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆண்டுக்கு ஒரு முறையோ வட்டி கணக்கிடப்பட்டு, கடன் பெற்றவரின் கணக்கில் சேர்க்கப்படும்.

கடன் பெற்றவர் அவ்வப்போது செலுத்தும் தவணை, அன்றைய தேதி வரை நிலுவையில் இருக்கும் வட்டிக்கும் குறைவாக இருக்கும்பட்சத்தில், அந்தத் தொகை வட்டியில்தான் வரவு வைக்கப்படும். நிலுவையில் இருக்கும் வட்டித் தொகைக்கு அதிகமாக தவணை செலுத்தினால் அந்தக் கூடுதல் தொகை அசலில் வரவு வைக்கப்படும். அதே நேரத்தில், குடும்ப வருமான அடிப்படையில் வட்டி மானியம் பெறும் மாணவர்கள், எவ்வளவு தொகை செலுத்தினாலும் அந்தத் தொகை அசலில்தான் வரவு வைக்கப்படும்.

அப்படி வரவு வைக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட வங்கி உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். வட்டி மானியம் பெறும் தகுதி இல்லாத மாணவர்கள், அவ்வப்போது வட்டியைச் செலுத்துவது, கடன் சுமையைக் குறைக்கும்.

கல்விக் கடன்
கல்விக் கடன்

அனைத்து வங்கிகளுமே, மற்ற கடன்தாரர்களைப் போலத்தான் கல்விக்கடன் தாரர்களையும் அணுகுகின்றன. கல்விக்கடனை கட்டாவிடில், சட்டப்படியான நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ள வேண்டும். ஆனால், சில வங்கிகள் கலெக்‌ஷன் ஏஜென்ட்டுகள் மூலம் வசூல் செய்ய முயற்சி செய்கின்றன.

வராக்கடன் அதிகரிக்கும் சூழ்நிலையில், வங்கிகளுக்கு நிதி நெருக்கடி உட்பட பலவித பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால், வங்கிகள் கடனை வசூலிக்க இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு வங்கி, இதுபோல கலெக்‌ஷன் ஏஜென்ட்டு மூலம் நடவடிக்கை எடுத்ததால், மதுரையைச் சேர்ந்த ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வந்தன. இதுபோன்ற சூழ்நிலைகளில் கடன் பெற்றவர்கள் சட்ட ரீதியாகத் தீர்வு பெறலாம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று, தனது கடன்களை மொத்தக் கடன் தொகையில் 55 சதவிகித அளவுக்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதாவது, மொத்தக் கடன் தொகையில் 10 சதவிகிதத் தொகையை அந்த நிறுவனம் வங்கிக்கு ரொக்கமாகச் செலுத்தியதாகவும் மீதி 45 சதவிகிதத் தொகைக்கு ஈடாக, 10 ஆண்டுகள் கழித்து மாற்றிக்கொள்ளும் வகையில் உத்தரவாதப் பத்திரங்களை வழங்கியதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் வந்தன. இந்த வகையில், சுமார் 900 கோடி ரூபாய் கடன் கைமாற்றிவிடப்பட்டது. அதில், கல்விக்கடன்களும் அடக்கம்.

கல்விக் கடன்
கல்விக் கடன்

அந்த நிறுவனம், மொத்தத் தொகையையும் அபராதத்துடன் வசூலித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அது, கடன்தாரர்கள் பலரையும் மிரட்டி கடனை வசூல் செய்ததாகத் தகவல்கள் வந்தன. இப்படி கடனை மாற்றிவிடுவதற்கான விதிமுறைகள், சட்டங்கள் தெளிவாக வகுக்கப்படவில்லை. வங்கிகளில் கல்விக்கடன் வாங்கியவர்கள், இப்படி தனியார் நிறுவன ஆட்களால் மிரட்டப்பட்டால், சட்ட ரீதியாகத் தீர்வு பெறலாம். அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்.

கல்விக்கடனும் திரும்பச் செலுத்தவேண்டிய கடன்தான். அதனால் கடன் வாங்கியவர்கள் அதை அடைத்துத்தான் ஆக வேண்டும். கடன் விஷயத்தில் நேர்மையாக இருந்தால்தான் சிபில் மதிப்பெண் அதிகரிக்கும். சிபில் மதிப்பெண் இல்லாவிட்டால், அவசர சூழ்நிலையில்கூட வங்கிக்கடன் பெற முடியாத நிலை ஏற்படலாம்..!

www.vidyalakshmi.co.in

இந்த தளத்தில், முதலில் ஒரு நிரந்தர கணக்கை உருவாக்க வேண்டும். மொபைல் எண் , இ-மெயில் முகவரி , மாணவர் பெயர் , தந்தை பெயர் போன்றவற்றைப் பதிவுசெய்தால், யூசர் நேம், பாஸ்வேர்டு கிடைக்கும். பிறகு 'Log in' செய்து விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள தேசிய வங்கியின் பெயர், சேரப்போகும் படிப்பு , கல்விக் கட்டண விவரகங்களைக் குறிப்பிட வேண்டும். அதன்பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு 'Application No' எஸ்எம்எஸ் வரும். அதன்பிறகு, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது.

விண்ணப்பத்தின் நிலையை அறிய, இதே இணையதளத்திற்கு சென்று 'Login' செய்து, மனுவின் நிலையை அறியலாம். பதிவு செய்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு இணையதளம் மூலம் அனுப்பப்படும். வங்கியிலிருந்து மாணவருக்கும் பெற்றோருக்கும் தொலைபேசி மூலம் அழைப்பு வரும். நேரடியாக வங்கி அதிகாரியிடம் பேசி, கடன் பெற்றுக்கொள்ளலாம். கடன் மறுக்கப்படும் பட்சத்தில், இதே இணையதளத்தில் புகாரையும் பதிவுசெய்யலாம்.

கல்விக் கடன்
கல்விக் கடன்

கல்விக்கடன் தர மறுக்கும் வங்கிகளை எங்கு புகார் செய்வது?

தமிழ்நாடு, யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றுக்கான வங்கி குறைதீர்ப்பு ஆணையத்தின் முகவரி.

குறைதீர்ப்பு ஆணையர்,

C/o இந்திய ரிசர்வ் வங்கி

போர்ட் க்ளேசிஸ்,

சென்னை 600 001

Doubt of common man
Doubt of common man