
மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தச் சோதனைச்சாவடி செயல்படுகிறது. சோதனைச் சாவடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன
‘தனுஷ்கோடி கடற்கரையைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்’ என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் சோதனைச்சாவடி, தற்போது வனத்துறை அதிகாரிகளின் வசூல் சாவடியாக மாறியிருக்கிறது எனக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலமான தனுஷ்கோடி கடற்கரையில், சுற்றுலாப்பயணிகள் விட்டுச்செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்களால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது என்று இயற்கை ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தனுஷ்கோடி ஜடாதீர்த்தம் அருகே வனச்சரகம் சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருள்கள், மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த பிறகே தனுஷ்கோடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 20 ரூபாயைக் கட்டணமாக வசூலித்து, தனுஷ்கோடியைத் தூய்மைப்படுத்த அந்தத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளவும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றனர் வனத்துறையினர்.
இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத் தாண்டி பணம் வசூலிப்பதாகவும், வாங்கும் பணத்துக்கு டோக்கன் வழங்குவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து நம்மிடம் பேசிய ராமநாதபுரம் விதைகள் அமைப்பின் நிர்வாகி அரு.சுப்பிரமணியன், “சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என நாங்கள் போராடி கொண்டுவந்த சோதனைச்சாவடியை, வனத்துறையினர் தங்களின் வசூல் சாவடியாக மாற்றிவிட்டனர். 20 ரூபாய் கட்டணம் என்ற அளவைத் தாண்டி, டோக்கனே கொடுக்காமல் ரூ.50, ரூ.100 எனக் கட்டணக் கொள்ளை அடிக்கின்றனர். அந்தப் பணத்தில், நகரைத் தூய்மைப்படுத்தும் பணியையும் செய்யவில்லை. தனுஷ்கோடியைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. அதற்காகச் சுற்றுலாப்பயணிகளிடமிருந்து பணம் வசூலிப்பது சட்டத்துக்குப் புறம்பானது’’ என்றார் ஆவேசத்துடன்.
குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு வனத்துறை அதிகாரி மகேந்திரனிடம் பேசினோம். “மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தச் சோதனைச்சாவடி செயல்படுகிறது. சோதனைச் சாவடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, 20 ரூபாய்க்கு மேல் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்க வாய்ப்பில்லை. பெறப்பட்ட கட்டணத்துக்கு ஊழியர்கள் டோக்கனும் கொடுக்கின்றனர். கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் தெரிவித்தால், தவறு செய்த ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மைப் பணிகள் மேற்கொள்வதில்லை என்பது தவறான தகவல்’’ எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் இது குறித்துக் கேட்டோம். “வனத்துறையினர் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகப் புகார் ஏதும் வரவில்லை. வனத்துறையினர் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன். தனுஷ்கோடியைத் தூய்மையாக வைத்துக்கொள்ள எந்த மாதிரியான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என ஆய்வுசெய்யப்பட்டு விரைந்து தீர்வு காணப்படும்’’ என்றார் சம்பிரதாயமாக.
வாலு போய் கத்தி வந்த கதையால்ல இருக்கு?!