
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!


சில ஆண்டுகளுக்கு முந்தைய தருமபுரியை ‘களி, புளி, கம்பளி’ என்ற மூன்று வார்த்தைக்குள் அடக்குவார்கள் எழுத்தாளர்கள். அதாவது, அன்றைய சராசரி தருமபுரிக்காரர் களியைத் தின்று நாள்களை ஓட்டுவார். புளியை விற்று வருடத்துக்கு ஒரு முறை துணி எடுப்பார். கம்பளியைப் போர்த்திக்கொண்டு ஆடுகளை மேய்த்து அமர்ந்திருப்பார். கூடவே, சாதிக் கலவரங்களும் அதிகமாக நடந்த, நடக்கும் பகுதி தருமபுரி. நக்சல்கள் தலையெடுத்துவிடும் அபாயம் இன்றும் அங்கே உண்டு என்பார்கள். ஆனால், தடைகளுக்கு இடையேயும் தருமபுரி குறிப்பிடத்தக்க அளவு இன்று முன்னோக்கி வந்திருக்கிறது. நவீன கல்வி வளர்ச்சியை நன்றாகப் பயன்படுத்தி, தருமபுரி மாவட்ட மக்கள் பல படிகள் முன்னேறியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, கடந்த 5 ஆண்டுகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் இடைநிற்கும் விகிதம் தருமபுரியில் வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.
சமூகப் பொறுப்பிலும் தருமபுரி மாவட்ட மக்கள், மற்ற மாவட்ட மக்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள். கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களை எடுத்துக்கொள்வோம். 2019 நாடாளு மன்றத் தேர்தலில் மொத்தம் 81.18% மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்திருக்கிறார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 82.25% மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து மக்களாட்சிக் கடமையை நிறைவேற்றியிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தருமபுரி இரண்டு தேர்தல்களிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் வீற்றிருக்கிறது. இந்த இடங்களை வளர்ந்த மாவட்டங்களாக அறியப்படும் சென்னை, கோயம்புத்தூர் மாவட்டங்கள்கூட அடைய முடியவில்லை. ஆக, கல்வி, சமூகப் பொறுப்பு என இரண்டு முக்கிய அலகுகளில் முன்னேறியிருக்கும் தருமபுரியை, அடுத்ததாக மாவட்டப் பொருளாதாரம் மற்றும் தனிநபர் வாழ்க்கைத் தரத்திலும் முன்னேற்றத்தை நோக்கி நகர்த்த வேண்டும். அதற்குத்தான் விடாப்பிடியாக திருவண்ணாமலை, கடலூரைத் தொடர்ந்து மூன்றாவதாக இன்னொரு வடக்கு மாவட்டத்தையும் உடனடியாகத் தேர்ந்தெடுத்தேன்!

தருமபுரியின் முதன்மையான வளம், தமிழ்நாட்டுக்குள் காவிரி அன்னை கால்வைக்கும் பகுதியான ஒகேனக்கல்! நடைமுறையில், ‘தமிழ்நாட்டின் நயாகரா’ என்று ஒகேனக்கலைச் சொல்கிறார்கள். அதற்கு முற்றிலும் தகுதி வாய்ந்ததே ஒகேனக்கலும். ஏறக்குறைய 66 அடி நீளம் கொண்ட அழகான அருவி. பல கிலோமீட்டர் தூரத்துக்கு வெண்பாறைப் பரப்பு. அருவிக்குப் பின்னணியில் மேகம் மோதி விளையாடும் மேலகிரி மலை. இத்தகைய வளங்கள் கொண்ட ஒகேனக்கலுக்கு வருடத்துக்கு 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இவர்களை Engage செய்வதற்கென படகுச் சவாரி, அருவி விளையாட்டு, மீன் சமையல், எண்ணெய்க் குளியல், முதலைப்பண்ணை, வன இல்லங்கள் எனக் குறிப்பிடத்தகுந்த சேவைகளை அளித்துவருகிறது தமிழ்நாடு சுற்றுலாத்துறை. ஆனால், இதன் வழியாகப் பெரிய அளவுக்கு வருவாய் எதுவும் உருவாவதில்லை. 2020-ம் ஆண்டு நிலவரப்படி, ஒகேனக்கலின் ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாய் மட்டும்தான். நீங்களே கணக்குப்போடுங்கள். 50 லட்சம் சுற்றுலாப்பயணிகளின் வருகை எங்கே இருக்கிறது, அதன் மூலம் பெறக்கூடிய 2 கோடி ரூபாய் வருவாய் எங்கே இருக்கிறது?
வாட்டர் தீம் பார்க்!
ஆகவே, இனி வரும் காலத்தில் ஒகேனக்கலை இந்திய அளவிலேயே முக்கியமான சுற்றுலா மையமாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும். கிட்டத்தட்ட கேரளாவின் அதிரப்பள்ளி அருவி, சத்தீஸ்கரின் சித்ரகோட் அருவி போன்ற முக்கியத்துவத்தை, தமிழ்நாட்டின் ஒகேனலுக்கும் ஏற்படுத்த வேண்டும். அதற்கு நிறைய புதுமையான Engaging அம்சங்களை ஒகேனக்கலில் நாம் அறிமுகப்படுத்தவேண்டியது அவசியமாகிறது. இந்த முன்னெடுப்பை ‘எந்த அளவுக்குச் சாத்தியம்’ என்ற சந்தேகக் கண் கொண்டு பார்க்காமல், ‘இப்படி ஏதேனும் ஒன்றை முயன்றால் மட்டுமே நம்மால் ஒகேனக்கலை அசாதாரணமான சுற்றுலாத்தலமாக மாற்ற முடியும்’ என்ற நம்பிக்கைக் கண் கொண்டு பார்ப்பது நல்லது. அதுவே, முறையானதும்கூட!
சரி! ஒகேனக்கலில் நான் முன்னிறுத்தும் முதன்மையான ஆலோசனை, Water Theme Park! யோசித்துப் பாருங்கள். ஒகேனக்கலுக்கு வரும் 50 லட்சம் பேரில் 99% பேர் தண்ணீருக்காகவே வருகிறார்கள். தண்ணீர் அவர்களுக்கு ஒரு Fantasy Factor-ஆக இருக்கிறது. ஆனால், ஒகேனக்கலில் ஜனவரி முதல் மார்ச் மாதங்களில் அவ்வளவாக தண்ணீர்வரத்து இருப்பதில்லை. அதற்கு அப்படியே நேரெதிராக ஜூன், ஜூலை மாதங்களில் வெள்ளப்பெருக்கும் உண்டு. இந்த இரண்டு தருணங்களிலுமே ஒகேனக்கலின் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படும். இந்தத் தடைச் செய்தி பரவியதுமே, ஒகேனக்கலுக்கு வருவோரின் எண்ணிக்கை பாதியாகக் குறையும். எனவே, எல்லாக் காலத்திலும் ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகளை Engage செய்ய ஒரு ‘365 Days’ அம்சம் தேவை. அதுதான் Water Theme Park!


உலகெங்கும் மிகப்புகழ்பெற்ற வாட்டர் தீம் பார்க்குகள் நிறைய இருக்கின்றன. சென்னையிலேயேகூட நான்கு வாட்டர் தீம் பார்க்குகள் இருக்கின்றன. ஆனால், ஒகேனக்கலில் அந்த அளவுக்குப் பெரிய வாட்டர் தீம் பார்க் நமக்கு அவசியமில்லை. ஏனென்றால், அது அகலக்கால் வைப்பது. கூடவே, வாட்டர் தீம் பார்க்கை ஒரு Side Attraction-ஆகவே நாம் திட்டமிடுகிறோம். ஆகவே, எளிமையாக Slide, Ride, Play, Surf ஆகிய நான்கு இன்றியமையா அம்சங்களை மட்டுமேகொண்ட வாட்டர் தீம் பார்க் போதும். இதைச் சில நூறு கோடிகளில் அமைத்துத் தருவதற்கென்று உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவிலேயே 25-லிருந்து 100 கோடி ரூபாய்க்குள் ஒரு வாட்டர் தீம் பார்க்கை அமைத்துத் தரும் நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு நாம் காட்டவேண்டியது, தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் இடத்தை மட்டுமே.
அடிப்படையில், ஒரு தீம் பார்க்குக்கு Park Admission, Sponsorship, Merchandise, Food & Drinks, Premium Games ஆகிய 5 வகைகளில் வருமானம் வரும். இதில், Premium Games-ஐ ஆரம்பகட்டத்தில் நம்மால் செய்ய முடியாது. ஏனென்றால், நுழைவுக்கென தனிக் கட்டணம், Premium Games-க்கென தனிக் கட்டணம் என இரண்டு கட்டணங்களை மாதச் சம்பளத்திலிருந்து ஒதுக்க மக்கள் தயாராக இருக்க மாட்டார்கள். எனவே, மற்ற நான்கு வகைகளில் தீம் பார்க்குக்கான வருமானத்தைப் பெற முடியும். ஒரு சராசரி வாட்டர் தீம் பார்க்கை எடுத்துக் கணக்கிட்டால், 50 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்தை நம்மால் ஒகேனக்கலில் உருவாக்க முடியும். கூடவே, Food and Beverage, Ticketing, Security, Attractions Employees, Grounds Maintenance, Entertainment என 100-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு களையும் புதிதாக உருவாக்கலாம். எப்படிப் பார்த்தாலும், Double Dhamaka-தான்!
மீன் சமையல் அங்காடி!
அடுத்ததாக ஒகேனக்கலின் மேம்பாட்டுக்கு நான் முன்னிறுத்தும் திட்டம், Modern Fish Cooking Market! அனைவருக்குமே தெரியும், ஒகேனக்கலில் தண்ணீருக்கு நிகராகப் பிரபலமானது, மீன் சமையல். அதாவது, ஒகேனக்கலுக்கு வருவோர் மீன் சமையல் கடைகளுக்குச் சென்று, பிடித்தமான மீன் உணவைத் தயாரிக்கச் சொல்லிவிட்டு அருவிக்குச் செல்வார்கள். அவர்கள் வருவதற்குள் மீன் சமையலர்கள் சமைத்துத் தயாராக வைத்திருப்பார்கள். சுற்றுலாப்பயணிகளும் அதை உண்டுவிட்டு மாலை நேரத்தில் வண்டியேறுவார்கள். வெறுமனே மீன் உண்பதற்காக மட்டுமே ஒகேனக்கலுக்கு வருபவர்களும் உண்டு. இத்தகைய மீன் சமையல் பாரம்பர்யம் பல பத்தாண்டுகளாக ஒகேனக்கலில் நீடிக்கிறது. தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே வேறு எங்கும் இப்படியொரு பாரம்பர்யம் காணக் கிடைப்பதில்லை. என் கள ஆய்வில், மொத்தம் 500 பெண்கள் மீன் சமையலர்களாக ஒகேனக்கல் அருவி வட்டாரத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்குத் தனியாக உரிமச்சீட்டும் சுற்றுலாத்துறை அளித்திருக்கிறது.
இப்போது இந்தப் பாரம்பர்யத்தை நாம் வேறு ஒரு பரிணாமத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். இதற்கான காரணத்தை நான் மூளையிலிருந்து எடுக்கவில்லை, மனதிலிருந்து எடுத்திருக்கிறேன். அதாவது, மக்கள் கூட்டம் அதிகமாக வரும் மாதங்களில் மட்டுமே மீன் சமையலர்களின் அடுப்பு எரிகிறது. மற்ற மாதங்களில் அவர்களின் அடுப்பில் சாம்பல் மட்டுமே தெரிகிறது. இத்தகைய நிச்சயமற்ற பணிச்சூழலால் அவர்களின் மீன் சமைக்கும் திறனும் முழுப்பலனை எட்டுவதில்லை. இதுதான் நம் நாட்டில் பிரச்னையே. நம்மிடம் மூலப்பொருள் இருக்கும். உழைப்பு இருக்கும். நேர்த்தி இருக்கும். ஆனால், சந்தைப்படுத்த மட்டும் தெரியாது. அதனால், 75 சதவிகித பலனை அப்படியே மாற்றானுக்குத் தாரைவார்த்துவிடுவோம். பின்னர், ‘தமிழ்நாடு என்றைக்கு அமெரிக்காபோல மாறுவது…’ என்று டீக்கடையிலும் சலூன் கடையிலும் அமர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம். ‘Marketing…’ இந்தச் சொல்லில்தான் மீன்கடை முதல் விமான சேவை வரையான அத்தனை தொழில்களின் ஜீவநாடியும் துடிக்கிறது.



Here’s my sharp points… ஒகேனக்கலில் மீன் சமைப்பவர்கள் அனைவரையும் ஒரே கட்டமாக Fish Cooking Market என்ற அமைப்புக்குள் நாம் கொண்டுவர வேண்டும். இந்த Fish Cooking Market ஒன்றும் Python Program-ஐ போன்ற கடினமான Concept அல்ல. நம்மூரில் ஏற்கெனவே உழவர் சந்தை என்ற வடிவில் கலைஞர் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகம் செய்துவிட்டார். அதாவது, அங்கே தனித்தனி மீன் சமையல் கூடங்கள் இருக்கும். ஒவ்வொரு கூடத்துக்கும் பிரத்யேகமான எண்கள் வழங்கப்படும். ஆனால், இம்முறை சுற்றுலாப்பயணிகள் வெளியில் வாங்கிவரும் மீன்களையும், சமையல் பொருள்களையும் வைத்து மீன் சமையலர்கள் சமைக்க மாட்டார்கள். மீன் கடைக்குள்ளேயே வாளை, கெளுத்தி, ஆரா, கட்லா, ரோகு, கெண்டை, Silver Cup என அத்தனை வகை மீன்களையும் தேர்ந்தெடுப்பதற்கான கலன் இருக்கும். Tendercuts Basket-ஐ பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதேபோல. மொத்தத்தில், பழைய வடிவில் சமைக்க மட்டுமே செய்து 5,000 ரூபாய் வரை மாத வருமானம் ஈட்டிய மீன் சமையலர்கள், புதிய வடிவில் மீன் மற்றும் சமையல் பொருள்களின் மதிப்பையும் சேர்த்து மாதத்துக்கு 20,000 ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுவார்கள். என் வீட்டிலேயே ஒரு மீன் உணவு Startup வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த Startup-ன் மதிப்பை வைத்துக் கணக்கிட்டால், ஒகேனக்கல் Modern Fish Cooking Market ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் சந்தையாக உருவெடுக்கும். துணை விளைவாக, தரையில் அமர்ந்து ஊதாங்குழல் ஊதி, கண்கள் வீங்கி வீட்டுக்கு மீளும் 500 பெண்கள், சிரித்த முகத்தோடு அடையாள அட்டையை கம்பீரமாகக் கழுத்தில் மாட்டியபடி வீட்டுக்குச் செல்வார்கள்!
(இன்னும் காண்போம்)