மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 19 - தருமபுரி - வளமும் வாய்ப்பும்

தருமபுரி
பிரீமியம் ஸ்டோரி
News
தருமபுரி

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 19 - தருமபுரி - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம், ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம், ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் எனக்கு Insta Message ஒன்று அனுப்பியிருந்தார். அதில், தேனியில் Gutsy Adventures என்ற புதிய Startup நிறுவனம் ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்கியிருந்த செய்தி இருந்தது. அதேநேரத்தில்தான் நான் ஒகேனக்கல் சுற்றுலா ஆய்விலும் இருந்தேன். அது தொடர்பாக நயாகரா அருவியின் சில ஹெலிகாப்டர் சேவை காணொலிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டும் சரியாக Sync-ஆக, ஒகேனக்கலில் Helicopter Ride சேவையைத் தொடங்கலாமே என்ற முடிவுக்கு வந்தேன். இதில் இரண்டு பார்வைகள் ஒளிந்திருக்கின்றன. ஒன்று, ஒகேனக்கலின் Aerial அழகு முற்றிலும் Helicopter சேவைக்கு உகந்தது. மேலகிரி மலையையும், ஒகேனக்கல் அருவியையும் Helicopter-ல் மட்டுமே முழுமையாகக் கண்டுகளிக்க முடியும். இரண்டாவது, சாமானியருக்கும் Helicopter சேவையைக் கைக்கெட்டும் தொலைவுக்குக் கொண்டுவருவது.

Gutsy Adventures நிறுவனத்திடம் விசாரித்தேன். அவர்கள் தற்போதைக்கு 10 நிமிட Helicopter Ride சேவையை மட்டுமே அளித்துவருகிறார்கள். புதிய நிறுவனம் என்பதால், 30 நிமிடங்கள், ஒரு மணி நேரம் ஆகிய கட்டத்துக்கு இன்னும் நகரவில்லை. இந்த 10 நிமிட சேவையில் ஆறு பயணிகள் வரை அனுமதிக்கிறார்கள். கட்டணமாக ஒவ்வொருவருக்கும் 5,000 ரூபாய் வசூலிக்கிறார்கள். தினமும் எத்தனை பயணிகள் Ride-க்கு வருகிறார்கள் என்ற துல்லியமான தகவலை அந்த நிறுவனத்திடமிருந்து பெற முடியவில்லை. ஆனாலும், வருபவர்கள் எல்லாமே ‘தேனி மலைகளின் அழகை ஹெலிகாப்டரில் அமர்ந்து காண்பது வாழ்நாள் அனுபவமாக இருக்கிறது’ என்று கருத்து தெரிவித்ததாகச் சொன்னார்கள். ஆக, நாம் அறியவேண்டியது ஒன்றே. Helicopter Ride நம்மூரில் எடுபடுகிறது. முக்கியமாக, கிராமத்து மக்களும் ஹெலிகாப்டரில் பயணிக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

கனவு - 19 - தருமபுரி - வளமும் வாய்ப்பும்
கனவு - 19 - தருமபுரி - வளமும் வாய்ப்பும்

ஹெலிகாப்டர் சேவையைச் சுற்றிய Business மாடலைச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு ஹெலிகாப்டர் நிறுவனத்துக்குக் கண்டிப்பாக 10-லிருந்து 20 பேர் தேவைப்படுவார்கள். அவர்களில் Pilot, Co pilot, Public Safety Dispatcher, Concierge, Helicopter Mechanic, Flight Instructor எனப் பலர் உள்ளடங்குவார்கள். கூடவே, Marketing, Vehicle service என மற்ற வேலைவாய்ப்புகளும் உண்டு. நான் விசாரித்தவரை, ஒரு ஹெலிகாப்டரின் சந்தை விலை 8 முதல் 15 கோடி ரூபாய். இது கிட்டத்தட்ட One Time Investment போன்றதுதான். கண்டிப்பாக, ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வருமானம் பெற முடியும். வாய்ப்பு இருந்தால், ஹெலிகாப்டரைச் சுற்றுலாவுக்குப் பயன்படுத்துவதைக் கடந்து, Ambulance, Air Taxi போன்ற தளங்களிலும் பயன்படுத்தி, வருமானத்தை அதிகரிக்கலாம். ஆகவே, தருமபுரி தொழில்முனைவாளர்களுக்கு நான் சொல்வது இதுதான். தாராளமாக ஒகேனக்கலில் Helicopter Ride சேவையைத் தொடங்குங்கள். முந்துபவர்கள் பணம், பெருமை என இரண்டையும் சேர்த்துச் சம்பாதிப்பீர்கள்!

ஒகேனக்கலைத் தொடர்ந்து, தருமபுரியின் முக்கியமான சுற்றுலாத்தலமாக ‘வத்தல்மலை’ இருக்கிறது. கொல்லிமலையைப் போன்ற கொண்டை ஊசி வளைவுகள் இதன் சிறப்பு. தருமபுரியிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்திருக்கிறது. ஊட்டியைப்போலவே தொடர்ச்சியான மலைத்தொடர்களும், 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலையும் இருப்பதால், இதை ‘மினி ஊட்டி’ என்று அழைக்கிறார்கள். ஆனால், ஊட்டி என்பதற்கான எந்தத் தடயமும் இதுவரை வத்தல்மலையில் ஏற்படுத்தப்படவில்லை. முதற்கட்டமாக, ஒரு செயற்கை ஏரியை உருவாக்கி, படகுத்துறை ஒன்றை அமைக்கும் பணிகளைச் சுற்றுலாத்துறை முன்னெடுத்துவருகிறது. ஆனால், அதற்கு முன்னால் அங்கே கொண்டுவரவேண்டியது நல்ல போக்குவரத்து வசதிகளையும், தங்குமிடங்களையும், உணவகங்களையும்தான். மிகச் சமீபகாலம் வரைகூட வத்தல்மலையில் ஒன்றிரண்டு சிறிய பெட்டிக்கடைகள் மட்டுமே காணப்படுகின்றன. பொதுவாக, மலைப்பகுதியில் சில Viewpoint-களாவது அமைத்து வைத்திருப்பார்கள். அதுகூட வத்தல்மலையில் இல்லை.

கனவு - 19 - தருமபுரி - வளமும் வாய்ப்பும்
கனவு - 19 - தருமபுரி - வளமும் வாய்ப்பும்

ஆகவே, முதலில் தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து தொடர்ச்சியான பேருந்து வசதிகளை வத்தல்மலைக்கு ஏற்படுத்த வேண்டும். வத்தல்மலைக்குச் செல்லும் வழிகளில் மற்றும் அடிவாரங்களில் நல்ல தங்குமிடங்களையும் உணவகங்களையும் திறக்க வேண்டும். அடுத்ததாக, மலைக்கு மேலே சுற்றுலாப்பயணிகளை Engage செய்வதற்கான Viewpoints அமைக்க வேண்டும். வத்தல்மலையில் சின்னச் சின்னதாக அருவிகள் இருப்பதால், அருகில் Eco Park திறக்கலாம். இதெல்லாம் First Phase நடவடிக்கைகள் மட்டுமே. ஒருசில வருடங்களுக்கு இவை கணிசமான சுற்றுலாப்பயணிகளை வத்தல்மலைக்குக் கொண்டுவரும். இதற்கடுத்து, Second Phase-ல் வத்தல்மலையை Aerial Adventure Spot-ஆக வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம். ஏனென்றால், வத்தல்மலை ஒருவிதத்தில் பள்ளத்தாக்கு வடிவமைப்பைக்கொண்டுள்ளது. இங்கே Zip Line, Hot Air Balloon, Hang Gliding போன்ற வான் சாகச விளையாட்டு சேவைகள் நல்ல வருமான மதிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

பாப்பிரெட்டிப்பட்டியில் இருக்கும் வாணியாறு அணைக்கட்டு குறிப்பிடவேண்டிய இயற்கைப் பகுதி. இங்கே ஏற்கெனவே பரிசல் சவாரி உள்ளது. ஆனால், இன்னும் கொஞ்சம் அதிக முயற்சி எடுத்தால், வாணியாறு அணையை தருமபுரியின் மேட்டூராக மாற்றலாம். அதற்குச் சில அடிப்படையான பணிகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக, வத்தல்மலையைப் போலவே வாணியாறு அணைக்கட்டுக்கும் தொடர்ச்சியான பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அடுத்ததாக, அணைக்கட்டுக்கு அருகிலேயே ஒரு சிறிய சிறுவர் விளையாட்டுப் பூங்கா. மூன்றாவதாக, முட்டுக்காட்டைப்போல Row Boat, Speed Boat, Pedal Boat ஆகிய மூன்று வகை படகுச் சவாரிகளை அறிமுகப்படுத்த வேண்டும். நான்காவதாக, Inflatable Water Park என்ற புதிய Concept-ஐயும் அறிமுகப்படுத்தலாம். இந்த நான்கையும் செய்தால், தருமபுரியின் தெற்கில் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக வாணியாறு அணைக்கட்டு மாறும்.

கனவு - 19 - தருமபுரி - வளமும் வாய்ப்பும்

தருமபுரியில் ஆன்மிகம் சார்ந்த சுற்றுலா மேம்பாட்டுக்கு தீர்த்தமலை, தொப்பூர் ஆகிய இரண்டு பகுதிகளில் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. தீர்த்தமலை தருமபுரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்கே தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மிகப் பிரபலமாக இருக்கிறது. இங்கிருக்கும் சுனையில் கிடைக்கும் தீர்த்தத்தை அருந்தினால், தீராத நோய்களும் தீரும் என்று மக்கள் நம்புகிறார்கள். ராம தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய ஐந்து வகையான தீர்த்தங்களாக, அந்த தீர்த்தத்தைச் சொல்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள். இந்தத் தீர்த்தங்கள் ஒவ்வொன்றும் அரியவகை மூலிகைக் குணங்கள் கொண்டிருக்கும் என்பதும் அவர்களின் கூற்று. இப்போது இந்தத் தீர்த்தத்தைச் சரியாகச் சந்தைப்படுத்தவேண்டியது நம் முன்னிருக்கும் பணி. எப்படி பழநி பஞ்சாமிர்தத்தையும், ராமேஸ்வரத்தின் கோடி தீர்த்தத்தையும் Brand ஆக்கினோமோ, அதேபோல தீர்த்தமலை தீர்த்தத்தையும் நாம் Brand செய்ய வேண்டும். இதில் கிடைக்கும் அத்தனை வருமானத்தையும் தீர்த்தமலை கோயிலின் மேம்பாட்டுக்கும், பக்தர்களுக்குச் சரியான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கனவு - 19 - தருமபுரி - வளமும் வாய்ப்பும்

தருமபுரி சுற்றுலாப் பிரிவில் கடைசியாக நான் சொல்லப்போவது, மிகவும் முக்கியமான மற்றும் தமிழரின் மதச்சார்பற்ற தன்மையை அகிலத்துக்குப் பறைசாற்றும் பகுதியான, தொப்பூர் தர்கா!

இந்த தர்கா 100 ஆண்டுகளுக்கு முன்பாக சூஃபி பெரியவர் Hazrath Syed Shah Waliullah-வின் நினைவாகக் கட்டப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இதை இஸ்லாமியர்களுக்கு மட்டுமான இடம் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளி அன்றும் பெரும் திரளாக தொப்பூர் தர்காவுக்கு வந்து குறைகளைச் சொல்லி வழிபட்டுச் செல்கிறார்கள். பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி வரும் ரயில்களில் பயணிப்போருக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் தொப்பூர் ரயில் நிலையத்தில் பெரும் திரளாக இஸ்லாமியர்களும், இந்து மக்களும் இறங்கி தர்காவுக்கு வேன் பிடிப்பார்கள். ஆண்டுக் கணக்கை வைத்துப் பார்த்தால், 40-லிருந்து 70 லட்சம் யாத்ரீகர்கள்! இத்தகைய தொப்பூர் தர்காவைச் சுற்றுலாத்துறையும் வஃபு வாரியமும் மனதுவைத்தால், நாகூர் தர்காவுக்கு இணையான ஆன்மிகத்தலமாகப் பரிமாற்றம் செய்யலாம். இதற்கு ஏற்றபடி தர்கா இருக்கும் இடமும் இயற்கை எழில் சூழ பிரமாண்டமாக அமைந்திருக்கும். இங்கே தங்குமிடங்கள், நல்ல உணவகங்கள் மற்றும் குழந்தைகளை Engage செய்வதற்கான பூங்காக்களை ஏற்படுத்த வேண்டியது உடனடித் தேவையாக இருக்கிறது. குறைந்தபட்சம் ஒவ்வோர் ஆண்டும் ‘Urs’ நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வரும் தருணங்களிலேனும், தற்காலிகத் தங்குமிடம் மற்றும் உணவகங்களை ஏற்படுத்தலாம்!

(இன்னும் காண்போம்)