பதவி உயர்வுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு மெமோ! - பழிவாங்கப்படுகிறாரா ஐ.பி.எஸ் அதிகாரி..?

தினகரன் கடந்த 1998-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தவர். பதவி உயர்வு பெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு அவருக்கு சார்ஜ் மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது
தமிழக காவல்துறையில் ஐ.ஜி-யாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலருக்கு, கடந்த ஜனவரி மாதம் ஏ.டி.ஜி.பி பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி-யாகப் பணியாற்றிவரும் தினகரன் ஐ.பி.எஸ்-ஸுக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதற்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், குட்கா வழக்கு விசாரணைக்காக தினகரன் ஐ.பி.எஸ்-ஸுக்கு மெமோ அளிக்கப்பட்டதைக் காரணம் காட்டியிருக்கிறார்கள். இதனால், தீர்ப்பாயத்திடம் முறையீட்டுக்குச் சென்றிருக்கிறார் தினகரன்.

தமிழ்நாடு காவல்துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் இந்த விவகாரம் குறித்து மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``கடந்த டிசம்பர் 2014 முதல் பிப்ரவரி 2016 வரையிலான காலகட்டத்தில், தடைசெய்யப் பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்க, அப்போதைய அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மாமூல் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ வசம் இருந்துவரும் சூழலில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம், அப்போது பதவியிலிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு சார்ஜ் மெமோ வழங்கவும் சிபிஐ நீதிமன்றம் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தது. இதில், இணை கமிஷனர்கள் தினகரன், தர், நிர்மல் ஜோஷி, துணை கமிஷனர்கள் ஜெயக்குமார், விமலா, உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட எட்டு காவல்துறை அதிகாரிகளின் பெயர்களும் அடக்கம்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் தினகரனுக்கு ஏ.டி.ஜி.பி பதவி உயர்வு வழங்கப்படவிருந்தது. ஆனால், குட்கா வழக்கில் மெமோ வழங்கப்பட்டதைக் காரணம் காட்டி அவரின் பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் ‘குரூப்-1 ஆபீஸர்களான ஜெயக்குமார், விமலா ஆகியோர்மீது விசாரணை ஏதும் நிலுவையில் இல்லை. அவர்களுக்கு ஐ.பி.எஸ் அந்தஸ்து கொடுக்கலாம்’ என தமிழக அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட வேறோர் அதிகாரிமீது, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்த நிலையில் அவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், தற்போது பணியில் இருக்கும் வேறெந்த அதிகாரி மீதும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில், தினகரன் மட்டும் பழிவாங்கப்படுகிறார். அதனால்தான் அவர் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (CAT) முறையிட்டிருக்கிறார்” என்றனர்.

இது குறித்து தினகரன் ஐ.பி.எஸ் சார்பாக நம்மிடம் பேசியவர்கள், “தினகரன் கடந்த 1998-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தவர். பதவி உயர்வு பெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு அவருக்கு சார்ஜ் மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது. எட்டு அதிகாரிகளுக்கு சார்ஜ் மெமோ வழங்குவதற்குப் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தினகரன் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்... இதன் பின்னணியில் சில முக்கிய காவல்துறை உயரதிகாரிகளின் பழிவாங்கும் சதித்திட்டம் இருக்கிறது” என்றனர்.
டி.ஜி.பி அலுவலக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், ‘‘சார்ஜ் மெமோ நிலுவையில் இருக்கும்போது எந்தக் காவல்துறை அதிகாரிக்கும் பதவி உயர்வு வழங்க முடியாது. இதற்கு வேறு விஷயங்களைக் காரணமாகச் சொல்வதை ஏற்க முடியாது” என்றார் சுருக்கமாக.