கடந்த ஒரு மாத காலமாகத் தீவிர லாக்டௌன் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், கங்கை போன்ற நதிகளில் நீரின் தரம் குடிக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மிகவும் மோசமான நிலைக்கு மாறிக்கொண்டிருந்த கங்கை, இந்த ஒரே மாதத்தில் மக்கள் குடிக்கும் அளவுக்குத் தரம் உயர்ந்திருக்குமா? என்ற சந்தேகம் பலர் மனதிலும் எழாமல் இல்லை. இந்தச் சந்தேகத்தை நம் ##DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருந்தார் வாசகர் நவீன் குமார்.

இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்பதற்கு முன்னால், ஒருவரைப் பற்றிப் பேசியாக வேண்டும். அவருடைய பெயர் ஜி.டி.அகர்வால். `கங்கை செத்துக்கொண்டிருக்கிறது, அதைச் சுத்தப்படுத்தி மீட்டெடுங்கள்’ என்ற கோரிக்கையோடு 111 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து மறைந்தவர்.


``கங்கையையே கைவிட்டவர்கள், என்னையா கவனிக்கப்போகிறார்கள்! நான் இன்னும் சில தினங்களே இருப்பேன். குளூக்கோஸ் டிரிப்ஸ்களை கழட்டிவிடுங்கள். என் மரணம் கங்கையைக் காப்பாற்றுவதற்கான தொடக்கமாக இருக்கட்டும்" என்பதே அவருடைய கடைசி அறிக்கையாக இருந்தது.
1986 முதல் பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம், இந்திய அரசு கங்கையைக் காப்பாற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. 1986 முதல் 2014 வரை 4,800 கோடி ரூபாய் இதற்காகவே ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு, நமாமி கங்கா திட்டத்தின்கீழ் சுமார் 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 7304.64 கோடி ரூபாய் கங்கையைக் காப்பாற்ற இந்திய அரசு செலவு செய்துள்ளது. ஆனால், இந்த லாக்டௌனுக்கு முந்தைய தேதி வரை கங்கை சுத்தமானதற்கான அறிகுறிகூடத் தெரியவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்கள், பல்வேறு இழப்புகள், பல்வேறு செலவுகளில் தூய்மையடையாத கங்கை, ஒரேயொரு மாதம் மனிதர்கள் அவரவர் வீட்டுக்குள்ளேயே இருந்ததால் தூய்மையடைந்துவிட்டது என்று சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், `அப்படித் தூய்மையடைந்ததைப் போல் தெரிகிறதே தவிர இது முழுமையான தூய்மையல்ல’ என்கிறார் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் (Centre for Science and Environment) தலைவர் சுனிதா நரேன்.
கங்கை ஓரளவுக்குச் சுத்தமாகியுள்ளது... ஆனால் முற்றிலும் அல்ல.சுனிதா நரேன்
அவரிடம் பேசியபோது, ``மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஆதாரங்களும் தரவுகளும் கங்கை நீரின் தரம் உயர்ந்துவிட்டதாகக் கூறவில்லை. பயோகெமிக்கல் ஆக்ஸிஜன் டிமாண்ட் அளவு அவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்த அனைத்து கண்காணிப்பு மையங்களிலுமே அதிகரித்துள்ளதாகத்தான் கூறியுள்ளது. கரைந்த ஆக்ஸிஜனும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிகமாகவில்லை. இந்த ஆய்வின் மூலம் நமக்குத் தெரிய வந்துள்ளது என்னவென்றால், கங்கை ஓரளவுக்குச் சுத்தமாகியுள்ளது... ஆனால் முற்றிலும் அல்ல. லாக்டௌன் என்பதால், மக்கள் அந்த நதியில் பூக்களைக் கொட்டுவதில்லை, திடக்கழிவுகளைக் கொட்டுவதில்லை, மொத்த கழிவுகளில் 9 சதவிகிதம் பங்கு வகிக்கும் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதில்லை. ஆகவே, கங்கை தூய்மையாகிவிட்டதைப் போல் தெரிகின்றதே தவிர, நீரின் தரத்தில் பெரிய மாற்றமில்லை" என்று கூறினார்.

கங்கை ஓரளவுக்குச் சுத்தமாகியிருக்கிறது. ஆனால் நீரின் தரம் குடிக்கக்கூடிய அளவுக்கு உயரவில்லை.மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம்
கடந்த திங்கள் கிழமையன்று, கங்கை நதியிலிருந்து நீர் மாதிரிகளைச் சேகரித்த மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது. அந்த ஆய்வு முடிவுகளின்படி, அவர்கள் கங்கை ஓரளவுக்குச் சுத்தமாகியிருப்பதை உறுதி செய்துள்ளார்கள். ஆனால், நீரின் தரம் குடிக்கக்கூடிய அளவுக்கு உயரவில்லை. நதிநீர், அங்கு வாழ்கின்ற நீர்வாழ் உயிரினங்களுக்கு உகந்த அளவுக்கு, அதில் முங்கி எழுந்தால் உங்களை உடல்ரீதியாகப் பாதிக்காத அளவுக்குத் தரம் உயர்ந்துள்ளது. ஆயினும், அந்த நீரைக் குடிக்கப் பயன்படுத்த முடியாது. மார்ச் 15 முதல் 21-ம் தேதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரியையும் லாக்டௌன் தொடங்கியபிறகு 22-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 15-ம் தேதிக்குள் கிடைத்த நீர் மாதிரிகளையும் ஆய்வு செய்து இரண்டின் தரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
``லாக்டௌன் காரணமாகக் கரைந்த ஆக்ஸிஜனின் அளவு கங்கையில் அதிகரித்துள்ளது. அதேநேரம், நைட்ரேட் போன்ற மாசுபாட்டுக் காரணிகளின் அளவு நீரில் ஓரளவுக்குக் குறைந்துள்ளது. இதன்மூலம் நீரின் தரம் சற்று அதிகரித்துள்ளது" என்று தேசிய மாசுபாடு கண்காணிப்பு மையமும் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியமும் தெரிவித்துள்ள அதேநேரம், வீட்டுப் பயன்பாட்டுக் கழிவுகளால் உற்பத்தியாகும் கழிவுகளைக் கணக்கிடும் `பயோகெமிக்கல் ஆர்கானிக் டிமாண்ட்’ என்ற அளவு அதிகமாகியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது மாசுக்கட்டுப்பாடு வாரியம்.


பயோகெமிக்கல் ஆர்கானிக் டிமாண்ட் (Biochemical Organic demand) என்ற அளவுகோல், தொழில்நுட்பக் கழிவுகள் தவிர்த்த இதர மாசுபாடுகளுக்கான அளவுகோலாகக் கூறப்படுகின்றது. இந்த அளவுகோல் இன்னமும் கங்கை நதியில் அதிகமாகத்தான் இருக்கிறது என்ற தகவலையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகின்றது. உத்தரப்பிரதேசத்தில் மற்ற மாசுபாடுகள் குறைந்திருந்தாலும், இந்த அளவு லாக்டௌனுக்கு முன்பிருந்ததைவிடச் சிறிதளவு அதிகரித்திருக்கிறது. இந்த ஆய்வின் முடிவுகள், அதோடு சேர்த்து தொழிற்சாலைக் கழிவுகளின் அளவைப் பொறுத்தவரை கங்கை நீரின் தரம் மேற்கு வங்கத்தைவிட உத்தரப் பிரதேசத்தில் சற்று மேம்பட்டிருப்பதை உணர்த்தியுள்ளது.

தொழிற்சாலைகள் மூடப்பட்டது, மழை பெய்தது போன்றவை கங்கை நதியின் இந்தச் சிறியளவு சுய தூய்மைப்படுத்தலுக்குக் காரணமாக இருக்கலாம். ஆறுகள் சூரிய ஒளி, ஆக்ஸிஜன் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும் திறன்கொண்டவை. அதிலும் கங்கைநதியில் கலக்கும் கழிவுகளைச் சுத்தம்செய்ய அதில் பேக்டீர்யோஃபேஜஸ் என்ற நுண்ணுயிர்கள் இருக்கின்றன. 1896-ல் ஆங்கிலேய பாக்டீரிய ஆராய்ச்சியாளர் எர்னெஸ்ட் ஹாங்கின் கங்கை நீரை ஆய்வுசெய்தார். அப்போது காலரா நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் கங்கையில் கலக்கப்போன நீரில் முன்பு இருந்ததையும் அது கங்கையில் கலந்தபின் நதிநீரில் அந்த பாக்டீரியாக்கள் இல்லாததையும் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு அவர் செய்த ஆராய்ச்சியின் மூலம் கங்கையில் கலக்கும் நுண்கிருமிகளைக் கொல்லும் ஆன்டி-பாக்டீரியா நுண்ணுயிரிகள் இருப்பது தெரிந்தது. அதற்குப் பிறகு 1916-ம் ஆண்டு கங்கையை ஆய்வுசெய்த கனடிய நீரியல் விஞ்ஞானி, ``ஒரு நுண்கிருமியைக் கொல்லும் நுண்ணுயிர் மற்றொன்றைத் தாக்காது. வெகுசில மட்டுமே அனைத்து நுண்கிருமிகளையும் அழிக்கும் திறனுடையதாக இருக்கும்" என்று கூறியதோடு அந்தவகை நுண்ணுயிர்கள் கங்கையில் வாழ்வதை உறுதிசெய்தார்.

உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து மொத்தமாக நாளொன்றுக்கு, கங்கையில் சுமார் 5,382 மில்லியன் லிட்டர் கழிவு நீர் கலக்கப்படுகின்றது.
தொடர்ந்து கழிவுச் சாக்கடையாக நினைத்து இதில் கழிவுகளைக் கலந்துகொண்டேயிருக்கும் வரை, எந்தவகை நுண்ணுயிரிகளாலும் அதைச் சுத்தம்செய்ய முடியாதென்று ஆய்வாளர்கள் வருந்தினர். இந்த நிலையில்தான், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட லாக்டௌன் கங்கையில் கலந்துகொண்டிருந்த கழிவுகளில் ஒருபகுதியைத் தற்காலிகமாக நிறுத்தியது. கழிவுகள் கலக்காததால், நதிநீருக்கும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கிடைக்கவே அந்த நுண்ணுயிர்களின் தூய்மைப்படுத்தும் வேலை தொடங்கியிருக்கலாம்.
உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து மொத்தமாக நாளொன்றுக்கு, கங்கையில் சுமார் 5,382 மில்லியன் லிட்டர் கழிவு நீர் கலக்கப்படுகின்றது. அதில், 3,183 லிட்டர் கழிவு நீர் உத்தரப்பிரதேசத்திலிருந்து மட்டுமே கலக்கின்றது. மேற்கு வங்கத்திலிருந்து 1,179 மில்லியன் லிட்டர் கழிவு நீர் கலக்கின்றது. இதில் 9 சதவிகிதம் மட்டுமே தொழிற்சாலைக் கழிவுகள். அவை தற்போது முடங்கியிருப்பதால் இந்தக் கழிவுகள் நதியில் கலப்பதில்லை.

கங்கைக் கரையைச் சுற்றி குடியிருப்புகளும் மக்கள் தொகையும் அதிகமாகிவிட்டன. அனைவரும் அதிலிருந்து தண்ணீர் எடுத்துப் பயன்படுத்திக்கொண்டு மிஞ்சிய கழிவுகளைத் திருப்பி கங்கைக்கே கொடுக்கிறார்கள். ஒருமுறையல்ல, கங்கோத்ரியிலிருந்து டைமண்ட் துறைமுகம் அருகே வங்காள விரிகுடாவில் கலப்பதுவரையிலான நீண்ட பயணத்தில் பலமுறை அப்படியான கழிவுகள் அதில் கொட்டப்படுகின்றது. 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய நீர்மேலாண்மை வாரியம் வெளியிட்ட அறிக்கை, மனிதக் கழிவுகளில் உருவாகும் கொடிய நுண்கிருமிகள் கங்கையில் மிக அதிகளவில் பரவிருப்பதாகச் சொன்னது. அத்தகைய கழிவுகள் தொழிற்சாலைக் கழிவுகளைப் போல் லாக்டௌன் காலகட்டத்தில் தவிர்க்கப்படவில்லை.
கங்கையைச் சுற்றி நாளொன்றுக்கு உற்பத்தியாகும் 3,500 மில்லியன் லிட்டர் வீட்டுப் பயன்பாட்டுக் கழிவுகளில் 1,100 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படுகின்றது. மீதி 2,400 மில்லியன் லிட்டர் கழிவு அப்படியே கங்கையில்தான் கொட்டப்படுகின்றது.
கழிவுநீர் உற்பத்தியிலும், கழிவுநீர் சுத்திகரிப்பிலும் கடந்த நாற்பது வருடங்களில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதிகரிக்கும் மக்கள்தொகைக்குத் தகுந்தவாறு அதிகமாகும் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாமல் போகிற போக்கில் ஆற்றில் கலந்துவிட்டுக் கொண்டிருக்கின்றன கங்கை நதியோர நகர நிர்வாகங்கள். அவற்றின் 80% கழிவுகள் நதியில்தான் கலக்கின்றன. அதுபோக, கங்கையைச் சுற்றி நாளொன்றுக்கு உற்பத்தியாகும் 3,500 மில்லியன் லிட்டர் வீட்டுப் பயன்பாட்டுக் கழிவுகளில் 1,100 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படுகின்றது. மீதி 2,400 மில்லியன் லிட்டர் கழிவு அப்படியே கங்கையில்தான் கொட்டப்படுகின்றது. இவ்வளவு வன்கொடுமைகள் அந்த ஒரு நதியின்மீது இத்தனை ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கின்றன. அதைத் தடுப்பதற்கும் கங்கையைக் காக்கவும் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளது. அந்த நதியைச் சுற்றி அமைந்திருந்த 764 தொழிற்சாலைகள், வீட்டுப் பயன்பாட்டுக் கழிவுகள், 97 நகரங்களின் கழிவுகள் என்று அனைத்துமே இத்தனை ஆண்டுகளாக அதில்தான் கலந்துகொண்டிருந்தது. அதில் சிலவற்றைக் கலப்பதிலிருந்து சில நாள்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தடை, அந்த நதி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்த அவகாசமோ, இப்போதைய சூழலோ கங்கைக்கு மட்டுமல்ல சென்னையின் கூவம் முதல் லண்டனின் தேம்ஸ் வரை எந்த நதிக்குமே போதாது. இது தற்காலிகமானது மட்டுமே, இதையே நாம் நீடித்த நிலையான முறையிலும் செய்யமுடியாது. நதிகள் மட்டுமன்றி, காற்று மாசுபாட்டில் முன்னேற்றம், காட்டுயிர்களின் வாழ்விடத்தில் முன்னேற்றம் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

இது நிரந்தரமில்லை. இதைப் பெரிதாகப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, மனித நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் எப்படி இயற்கையை மீட்டெடுப்பது என்பதைத்தான் நாம் பேச வேண்டும்.சுனிதா நரேன்
இதுபோல், இந்த லாக்டௌனில் இயற்கைத் தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருப்பதாக வந்துகொண்டிருக்கும் தகவல்கள் குறித்து சுனிதா நரேனிடம் கேட்டபோது, ``மனித நடவடிக்கை எதுவுமில்லாததால் இந்த முன்னேற்றம் இருக்கின்றது. ஆனால், மனித நடவடிக்கையே இல்லாமலும் இருக்கமுடியாது. ஆகவே, இது நிரந்தரமில்லை. இதைப் பெரிதாகப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, மனித நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் எப்படி இயற்கையை மீட்டெடுப்பது என்பதைத்தான் நாம் பேச வேண்டும். அதற்குரிய நீடித்த நிலையான திட்டமிடலுக்கு நாம் வழிவகுக்க வேண்டும்" என்று கூறினார்.
ஆம், கொரோனா நமக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது. இயற்கை மீதான அனைத்து சீரழிவுகளையும் நாமே செய்துள்ளோம். அதை நம்மால் நிச்சயமாக மீட்டெடுக்க முடியும் என்பதைக் கொரோனா லாக்டௌன் உணர்த்தியுள்ளது. இனிவரும் நாள்கள், நம் எதிர்காலம் எதுவுமே பழைய மாதிரி இருக்கப் போவதில்லை. அதைப் போலவே சூழலியல் மீதான நம்முடைய அணுகுமுறைகளையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நீடித்த நிலையான வாழ்க்கைமுறைக்கு மாறத் தொடங்குவோம். இந்த மாற்றத்தை நிலையானதாக்குவோம்.