கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் கல்குளம் விளவங்கோடு தாலுகா விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்திருக்கிறது. இந்தச் சங்கத்தின் தலைவராக இருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த நாஞ்சில் டொமினிக் உறுப்பினர் சேர்க்கையில் முறைகேடு செய்ததாக சமீபத்தில் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், உறுப்பினர்கள் பட்டியலைச் செம்மைப்படுத்தியதால், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக பொய்யான காரணங்களைக் கூறி சஸ்பெண்ட் செய்துவிட்டதாக நாஞ்சில் டொமினிக் கூறிவருகிறார். இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி இரவு சுமார் 8 மணிக்கு மேல் இந்தக் கூட்டுறவு சங்க அலுவலகத்தைத் திறந்து சிலர் உள்ளே சென்று ஆவணங்களை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் கூட்டுறவு சங்கச் செயலாளர், நிர்வாக இயக்குநர் ஆகியோர் செல்வதும் பதிவாகியிருந்தது.

இது குறித்து கூட்டுறவு சங்க உறுப்பினர் கிறிஸ்டோபர் ஜான் என்பவர் தமிழக ஆளுநர், முதல்வர், கூட்டுறவுத்துறைப் பதிவாளர் உள்ளிட்டவர்களுக்கு புகார் அனுப்பியிருக்கிறார். இது தொடர்பாக கிறிஸ்டோபர் ஜான், ``கல்குளம் விளவங்கோடு தாலுகா கூட்டுறவு விற்பனை சங்க (Y285) அலுவலகத்தில் 31-10-2022 அன்று இரவு சுமார் 8:15 மணிக்கு கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் பிரிட்டோ, கூட்டுறவு சங்கச் செயலாளர் ஜான் ஜோசப் தேவசகாயம், நியாயவிலைக்கடை விற்பனையாளர் ராபின் டேவிட் உள்ளிட்ட நான்கு பேர் கல்குளம், விளவங்கோடு தாலுகா கூட்டுறவு விற்பனையாளர் சங்க அலுவலகத்தைத் திறந்து அத்து மீறி உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.
சுமார் ஒன்றரை மணி நேரம் அலுவலகத்திலிருந்த அவர்கள், பல்வேறு ஆவணங்களைத் திருத்தியதாகவும், கோப்புகளை அழித்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அவர்கள் கோப்புகளைத் திருடிச் சென்றிருக்கின்றனர். இது சம்பந்தமான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதையும் புகாருடன் இணைத்து அனுப்பியிருக்கிறேன். எனவே, அவர்களை பணியிடை நீக்கம் செய்து அவர்கள்மீது துறைரீதியான விசாரணை நடத்தி, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் மனு அனுப்பியிருக்கிறேன்" என்றார்.

இது பற்றி கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் பிரிட்டோ, கூட்டுறவு சங்கச் செயலாளர் ஜான் ஜோசப் தேவசகாயம் ஆகியோரிடம் பேசினோம். ``ஒரு வழக்கு சம்பந்தமாக மறுநாள் கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்தது. அந்தத் தகவல் லேட்டாகக் கிடைத்ததால், ஆவணங்களை எடுப்பதற்காக கூட்டுறவு சங்க அலுவலகத்துக்குள் சென்றோம்" என்றனர். ஆனால், சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கர் இருக்கும் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்குள் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் இரவு நேரத்தில் செல்வது சட்ட விரோதமானது என கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.