Published:Updated:

`ரோடு இல்ல சார்' - மாற்றுத்திறன் மாணவி கோரிக்கை... வீட்டுவாசல் வரை சாலை அமைத்துத் தந்த ஆட்சியர்

மாணவியிடம் குறைகேட்கும் ஆட்சியர் செந்தில்ராஜ்
News
மாணவியிடம் குறைகேட்கும் ஆட்சியர் செந்தில்ராஜ்

சாலை அமைத்துத் தரக்கோரிய மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவியின் கோரிக்கை மனுவை ஏற்று, ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைத்துக் கொடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்க்கு, அம்மாணவி நன்றி தெரிவித்துள்ளார்.

Published:Updated:

`ரோடு இல்ல சார்' - மாற்றுத்திறன் மாணவி கோரிக்கை... வீட்டுவாசல் வரை சாலை அமைத்துத் தந்த ஆட்சியர்

சாலை அமைத்துத் தரக்கோரிய மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவியின் கோரிக்கை மனுவை ஏற்று, ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைத்துக் கொடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்க்கு, அம்மாணவி நன்றி தெரிவித்துள்ளார்.

மாணவியிடம் குறைகேட்கும் ஆட்சியர் செந்தில்ராஜ்
News
மாணவியிடம் குறைகேட்கும் ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர், வி.பி.சித்தன்நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரின் மாற்றுத்திறனாளி மகளான தங்க மாரியம்மாள், திருநெல்வேலியில் உள்ள அரசுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ ஆங்கில இலக்கியம் பயின்று வருகிறார்.

தங்க மாரியம்மாளின் வீட்டில் இருந்து அந்த ஊரின் முக்கிய சாலைக்குச் செல்லும் வழியில் தரமான சாலை இல்லாத காரணத்தால், இரண்டு சக்கர சைக்கிளில் செல்ல முடியாமல் சிரமப்பட்டு சென்று வந்ததார். கடந்த ஜூன் 27-ம் தேதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், தனது தெருவில் சாலை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை மனுவை, மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ்ஜிடம் கொடுத்தார் மாரியம்மாள்.

புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை
புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை

அம்மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், சாலையை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது மட்டுமல்லாமல், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் அலுவலர்களை அழைத்து அந்த மாணவி குறிப்பிட்டுள்ள பகுதியில் உள்ள சாலையின் நிலை குறித்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டார்.

இதையடுத்து வி.பி.சித்தன்நகரில் உள்ள அந்த மாணவியின் வீட்டில் இருந்து, அப்பகுதியில் உள்ள முக்கிய சாலை இணைப்பு வரை ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 150 மீட்டர் தொலைவில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது.

சரியான சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த தங்கமாரியம்மாள் மற்றும் அவரின் குடும்பத்தினர், இப்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மாணவி தங்கமாரியம்மாளிடம் பேசினோம்.

``எங்க தெருவுல சரியான ரோடு வசதி கிடையாது. குண்டும் குழியுமான மண் ரோடுதான் இருக்கு. அந்த மண் ரோட்டுல என்னால வீல் சேர்ல போக முடியல. இதனால, வீட்ல இருந்து மெயின் ரோடு வரைக்கும் அப்பா என்னைத் தூக்கிட்டுப்போயி ஆட்டோவுல ஏத்திவிட்டு, காலேஜுக்கு அனுப்புவாங்க. எனக்கு ரொம்ப சிரமமா இருந்துச்சு.

இது சம்பந்தமா கலெக்டர் சாருக்கிட்ட போன மாசம் மனு கொடுக்கப் போயிருந்தேன். கலெக்டர் ஆபிஸ்ல நான் வீல் சேர்ல உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் கலெக்டர் சாரே எழுந்து வந்து எங்கிட்ட மனுவை வாங்கினாங்க. `என்னம்மா பிரச்னை?’ன்னு கேட்டாங்க.

மாணவியின் வீட்டு வாசலில் இருந்து அமைக்கப்பட்ட சாலை
மாணவியின் வீட்டு வாசலில் இருந்து அமைக்கப்பட்ட சாலை

ரோடு பிரச்னையைச் சொன்னேன். `ரோடு போட நடவடிக்கை எடுக்குறேன்மா’ன்னு சொன்னாங்க. சார் சொன்னபடியே அதிகாரிங்க ஆய்வு செஞ்சாங்க. ஒரு மாசத்துக்குள்ள பேவர் பிளாக் ரோடு போட்டுக் கொடுத்துட்டாங்க. இப்போ சிரமம் இல்லாமே நானே என்னோட வீல் சேர்ல வீட்ல இருந்து ஈஸியா மெயின் ரோடு வரைக்கும் போயிட்டு வர முடியுது. எங்க தெருவுல உள்ள வயசானவங்களும் தடுமாற்றம் இல்லாம நடந்து போக முடியுது. கலெக்டர் சாருக்கு நன்றி” என்றார் மகிழ்ச்சியுடன்.

தனி ஒரு மாற்றுத்திறன் பெண்ணுக்காக அமைக்கப்பட்ட அந்தச் சாலை, அரசு இயந்திரம் மீதான ஒரு நம்பிக்கை நடுகல்!