நடப்பு
Published:Updated:

தீபாவளி பிசினஸ்... தமிழகம் முழுக்க எப்படி இருக்கிறது? - நேரடி ரிப்போர்ட்

தீபாவளி பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபாவளி பிசினஸ்

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தீபாவளி விற்பனை இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது!

கொரோனா பாதிப்பைக் கடந்து தமிழகத்தில் பண்டிகைக் கால வர்த்தகம் எப்படி உள்ளது என்பதைப் பார்க்கக் களத்தில் இறங்கினோம்.

கோவையில்...

கோவையில் மெல்ல மெல்ல தீபாவளிப் பண்டிகைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட கோவை வர்த்தகப் பகுதிகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். கிராஸ்கட் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக் கடைக்கு நேரடி விசிட் அடித்தோம். மாஸ்க் அணிந்தபடி மக்கள் என்ட்ரி கொடுத்தனர். கொரோனா பாதிப்பைக் கடந்து, மக்கள் தீபாவளிப் பண்டிகைக்குத் தயாராகி வருவதை உணர முடிந்தது.

தீபாவளி பிசினஸ்... தமிழகம் முழுக்க எப்படி இருக்கிறது? -  நேரடி ரிப்போர்ட்

சென்னை சில்க்ஸ்ஸின் கிளை மேலாளர் சிங்காரவேலிடம் பேசினோம். “லாக்டெளன் முடிஞ்சு மே மாசம் கடையைத் திறந்தோம். ஆகஸ்ட் வரை டல்தான். இந்த ஒரு வாரமா பிசினஸ் நல்லாவே இம்ப்ரூவ் ஆகிருக்கு. ஐப்பசி சீஸனும் தீபாவளிப் பண்டிகையும் ஒண்ணா வந்துருக்கு. ஐப்பசினால பட்டு விற்பனையும் நல்லாருக்கும். நாங்க ஏற்கெனவே போதுமான அளவுக்கு பர்ச்சேஸ் பண்ணிருந்தோம். தீபாவளிக்கும் நிறைய புது டிசைன்ஸ் இறக்கிருக்கோம். ஆறு மாச பின்னடைவுக்குப் பிறகு, இப்ப ரொம்பவே நல்லா போகுது” என்றார்.

சிங்காரவேல், வெண்ணிலா
சிங்காரவேல், வெண்ணிலா

ஷாப்பிங் செய்ய வந்திருந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் பேசினோம். “கொரோனா பிரச்னையால எப்படி பர்ச்சேஸ் செய்ய முடியுமோன்னு பயந்துகிட்டே வந்தேன். ஆனா, இங்க எல்லா முன்னெச்சரிக்கையும் பண்றாங்க. மக்களும் சோஷியல் டிஸ்டன்ஸ் கடைப்பிடிக்கிறாங்க. அதனால பிளான் பண்ணதைவிட சீக்கிரமாவும் அதிகமாவும் பர்ச்சேஸ் பண்ணியிருக்கேன்’’ என்றார்.

தீபாவளி பிசினஸ்... தமிழகம் முழுக்க எப்படி இருக்கிறது? -  நேரடி ரிப்போர்ட்

மதுரையில்...

மதுரைப் பகுதி மக்கள், தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே பர்ச்சேஸ் செய்யத் தொடங்கிவிடுவார்கள். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன் வியாபாரம் படுபரபரப்பாக நடக்கும். அப்படிப்பட்ட வியாபாரம் இந்த ஆண்டு மிஸ்ஸிங்.

மதுரையின் வர்த்தகம் என்பது 10 மாவட்டங்களை உள்ளடக்கியது. தென் மாவட்ட மக்கள் பொருள் வாங்க மட்டுமல்ல, பொருள்களை விற்கவும் மதுரைக்கு வருவார்கள். ஆனால், கொரோனா காலத்தில் வந்த பல பண்டிகைகள், கோயில் திருவிழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பொருள்கள் வாங்க மதுரையை நாடி மக்கள் வரவில்லை. போக்குவரத்துக் கெடுபிடிகள், கடைகள் திறக்க விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு ஒரு காரணம் என்பதைத் தாண்டி, மக்களிடம் பணம் இல்லை என்பது முக்கியமான காரணமாக இருந்தது. கைத்தறித் துண்டு, சாரதி வேட்டி, சுங்கிடி சேலை, ரெடிமேட் கார்மென்ட்ஸ் என சில்லறை மற்றும் மொத்த ஜவுளி விற்பனை, அப்பளத்தில் தொடங்கி மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், இரும்புப் பொருள்கள், நகைத்தொழில் என முக்கியமான பல தொழில்கள் நசிந்துவிட்டன.

தீபாவளி பிசினஸ்... தமிழகம் முழுக்க எப்படி இருக்கிறது? -  நேரடி ரிப்போர்ட்

பேருந்து நிலையங்கள், டவுன்ஹால் ரோடு, சிம்மக்கல், மாசி வீதிகள் என அனைத்துப் பகுதிகளும் களையிழந்த நிலையில் இருந்தன. அக்டோபர் மாதம் முதல்தான் கடை வீதிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோகப்பொருள் விற்கும் கடைகளில் கூட்டம் அதிகம் வந்தாலும் மக்கள் ஜாக்கிரதை உணர்வுடன் பொருள்களை வாங்குகின்றனர்.

மதுரையில் தீபாவளி விற்பனை தொடர்பாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசனிடம் பேசினோம். “இப்பத்தான் வியாபாரிகளின் முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகப் பல கஷ்டங்களை அனுபவித்து வந்தார்கள். மதுரையைப் பொறுத்தவரை, இரண்டு மாதங்களுக்கு முன்பே தீபாவாளி வியாபாரம் தொடங்கி விடும். உள்ளூர் மக்களைவிட வெளிமாவட்ட மக்களால்தான் மதுரையின் வர்த்தகம் அதிகரிக்கும். தீபாவளி வியாபாரத்தில்தான் சிறு வியாபாரி முதல் மொத்த வியாபாரிகள் வரை பலன் அடைவார்கள்.

ஜெகதீசன், எம்.ஆர்.சுப்பிரமணியன்
ஜெகதீசன், எம்.ஆர்.சுப்பிரமணியன்

கொரோனாவுக்குப் பிறகு, ஒருவழியாக இப்போது வியாபாரம் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இது தொடர வேண்டும் என்பது தான் தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் உற்பத்தி யாளர்களின் விருப்பம்’’ என்றார்.

நெல்லையில்...

தீபாவளி நெருங்கிவரும் சூழலில், நெல்லையில் இன்னும் விற்பனை களைகட்டவில்லை என்பது கொஞ்சம் வருத்தம் தரும் விஷயம். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன் கூட்டம் அலைமோதும் ஜவுளிக் கடைகள் இப்போது காற்று வாங்குகின்றன. நெல்லையின் வர்த்தக மையமாக விளங்கும் நெல்லையப்பர் கோயில் ரத வீதிகளில் உள்ள கடைகளில் இன்னும் தீபாவளி வியாபாரம் தொடங்கவில்லை.

தீபாவளி பிசினஸ்... தமிழகம் முழுக்க எப்படி இருக்கிறது? -  நேரடி ரிப்போர்ட்

சாலையோர நடைபாதை வியாபாரிகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை அனைவருமே தீபாவளி வியாபாரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாகக் கொரோனா பாதிப்பு காரணமாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்புவதால், வியாபாரம் அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், நடப்பு நிலைமை அதற்கு ஏற்ற வகையில் இருக்கவில்லை.

இதுபற்றி வணிகர் சங்கங்களின் பேரவையின் தென்மண்டலத் தலைவர் எம்.ஆர்.சுப்பிர மணியனுடன் பேசினோம். “நெல்லையில் வழக்கமாகத் தீபாவளி விற்பனை அமோகமாக இருக்கும். கிராமப் பகுதிகளிலிருந்து ஏராள மானோர் குடும்பத்துடன் வந்து துணிமணி களையும் வீட்டுக்குத் தேவையான பொருள்களையும் வாங்கிச் செல்வார்கள். ஆனால், கொரோனா காரணமாக இப்போது மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. அத்துடன், நெரிசலான இடங்களுக்கு வருவதற்கு அஞ்சுகிறார்கள். அதனால் கடைவீதிகளில் தீபாவளி விற்பனைக்கான கூட்டம் இல்லை. தீபாவளி வியாபாரத்தை நம்பி வியாபாரிகள் பலரும் பொருள்களை வாங்கி வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். அடுத்த வாரத்திலிருந்து வியாபாரம் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

திருச்சியில்...

நடுத்தர வருமானப் பிரிவினர் அதிகம் கொண்ட திருச்சியில் தீபாவளி பிசினஸ் டல்லாகத்தான் இருக்கிறது. பலரது வருமானம் குறைந்திருப்பது, பலருக்கும் வேலை கிடைக்காமல் இருப்பதால் வருமானம் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் இந்தத் தீபாவளிக்குப் பெரிதாக செலவு செய்ய வேண்டாம் என்ற மனநிலையில் மக்கள் இருப்பதுபோலத் தெரிகிறது. இது தொடர்பாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவர் ஸ்ரீதரிடம் பேசினோம்.

தீபாவளி பிசினஸ்... தமிழகம் முழுக்க எப்படி இருக்கிறது? -  நேரடி ரிப்போர்ட்

‘‘மக்கள் இப்பதான் கடைவீதிகளுக்கு வரத் தொடங்கியிருக்காங்க. வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குப் போயிட்டதால, வேலைக்கு ஆள் இல்லை. வழக்கமா ரெண்டு மாசத்துக்கு முன்னாலயே தீபாவளிக்கான உற்பத்தியும் விற்பனையும் தொடங்கிடும். ஆனா, போன வருஷத்தை ஒப்பிட்டா 30% பிசினஸ்கூட இப்ப நடக்கல. மணப்பாறைக்கு அருகே புத்தாநத்தத்தில்தான் திருப்பூருக்கு அடுத்து ரெடிமேட் ஆடைகள் அதிகம் தயாரிக்கும் கம்பெனிகள் இருக்கு. வழக்கமாகத் தீபாவளி நேரத்துல பரபரப்பாக இயங்குற இந்த ஊர் இப்ப வெறிச்சோடிக் கிடக்குது. இந்த முறை பிசினஸுல நஷ்டத்திலிருந்து தப்பிச்சா போதும்னு பலரும் ஸ்டாக் எடுப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

ஸ்ரீதர்,  வருண் ரமேஷ்
ஸ்ரீதர், வருண் ரமேஷ்

சென்னையில்....

தமிழகத்தின் பிற நகரங்களைப் போலவே, சென்னையிலும் தற்போதுதான் தீபாவளி விற்பனை தொடங்கியிருக்கிறது. தி.நகரில் பல்வேறு கடைகளில் மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. பெரிய நிறுவனங்கள் சென்னையில் பல இடங்களில் கிளைகளைத் திறந்துவிட்டதால், நகரின் மையப்பகுதியில் இருக்கும் கடைகளில் கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை எப்படி என்று போத்தீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் வருண் ரமேஷிடம் கேட்டோம். ‘‘சென்னையைப் பொறுத்தவரை, இப்போது வியாபாரம் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் நடந்த வியாபாரத்தில் 60 - 70% நடக்கத் தொடங்கி யிருக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார் அவர்.

நவம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் தீபாவளி வியாபாரம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்!

தீபாவளி பிசினஸ்... தமிழகம் முழுக்க எப்படி இருக்கிறது? -  நேரடி ரிப்போர்ட்

புதுச்சேரியில்...

புதுச்சேரியிலும் வியாபாரம் மிகக் காலதாமதமாகவே ஆரம்பித்திருக்கிறது. “அனைவருக்கும் இது மோசமான தீபாவளிதான். கொரோனாவால் மக்களிடம் பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. வியாபாரமும் சுத்தமாகக் குறைந்துவிட்டதால், நொடித்து போயிருக்கின்றனர் வணிகர்கள். இந்த தீபாவளிக்கு அனைத்து வியாபாரிகளும் 30-40% மட்டும்தான் சரக்குகளை வாங்கியிருக்கிறோம். அது விற்றாலே பெரிய விஷயம்தான்.

தீபாவளி பிசினஸ்... தமிழகம் முழுக்க எப்படி இருக்கிறது? -  நேரடி ரிப்போர்ட்

முன்பெல்லாம் தீபாவளி வியாபாரம் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே ஆரம்பித்துவிடும். ஆனால், இப்போது புது சினிமா ரிலீஸ் போல ஒரே வாரம்தான். சம்பளம் கிடைத்தவுடன் தீபாவளி வியாபாரம் சூடுபிடிக்கும்.

கேரளாவில் ஓணம் திருவிழாவுக்குப் பிறகு, கொரோனா தாக்கம் இருமடங்காக அதிகரித்துவிட்டது. அதேபோல இங்கும் ஆகி, மீண்டும் ஊரடங்கு வந்தால் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரின் நிலைமையும் மோசமாகி விடும்” என்றார் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாலு.