
அட்டகத்தி’ படம் மூலம் நமக்கு அறிமுகமான வார்த்தை ‘ரூட்டுதல.’
ஜாலியாகச் சிரித்து ரசித்துக் கடந்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே நடந்த ரூட்டு தல பிரச்னையால் பட்டப்பகலில் சென்னையின் முக்கிய வீதியில் கத்தியுடன் துரத்திக்கொண்டு ஓடிய காணொலிக்காட்சி, ‘ரூட்டு தல’ என்றால் டெரர் என்ற பயத்தை ஏற்படுத்திவிட்டது. சென்னை மாணவர்கள் மத்தியில் மட்டும், அதுவும் பேருந்தில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு மட்டும் பரிச்சயமான ரூட்டுதல - யார், என்ன பின்னணி? பார்க்கலாமா..?
`ரூட்டு தல’ எப்படி உருவாகிறார்
ஒரு பிரச்னைன்னு வந்தா அய்யய்யோ நமக்கு எதுக்குன்னு பலபேர் யோசிச்சி பேக் அடிப்பானுங்க. அப்படி யோசிக்காமல் இருப்பதுதான் ரூட்டு தலைக்கு முதல் தகுதி. வேற காலேஜ் பசங்களோட சண்டைன்னா, நம்ம காலேஜ் பேரைக் காப்பாத்த முன்னாடி வந்து நிக்கணும், போலீஸ் ஸ்டேஷன் போறதுக்குத் தயங்கக்கூடாது. தன் ரூட்டு பசங்களுக்கு க்ளாஸ்ல, கேன்டீன்ல எதுனா பிரச்னைன்னா பிரச்னை பண்ணுனவன் மேல வைக்கிற முதல் காலு அவனோடதா இருக்கணும். இதெல்லாம் காலேஜ்ல சேர்ந்த முதல் வருஷத்துலயே கொஞ்சம் கொஞ்சமா பண்ண ஆரம்பிக்கணும். முதல் இரண்டு வருஷத்தில பையனோட பர்ஃபாமன்ஸ் பார்த்து அவனோட மூணாவது வருஷ ஆரம்பத்தில அவன் ரூட்டு தலையாகப் பதவியேற்பான்.
ரூட்டு தலையின் பொறுப்புகள்
ஒரு காலேஜுக்கு ஒவ்வொரு ஏரியாவுல இருந்து மாணவர்கள் வருவாங்க. ஒவ்வொரு ஏரியா மாணவர்களுக்குன்னு ஒவ்வொரு பஸ் ரூட்டு இருக்கு. அந்த ரூட்ல எல்லோரையும் சேர்க்கணும். காலையில், குறிப்பிட்ட டிப்போக்கு எல்லா மாணவர்களையும் வரச்சொல்லி அவங்களைத் திரட்டி, காலேஜுக்குக் கூட்டிட்டு வரணும். உதாரணத்துக்கு 29E திருவேற்காடு to பெரம்பூர் ரூட்டுன்னா, திருவேற்காடு சுற்று வட்டாரப்பகுதில இருக்கிற பசங்கல்லாம் குறிப்பிட்ட நேரத்துக்கு அங்குள்ள பஸ் டிப்போக்கு வந்துடணும். இந்தப் பயணத்தை ஒருங்கிணைக்கிறதுதான். ரூட்டு தலையின் தலையாயப் பொறுப்பு. ரூட்டு கானா எழுதச் சொல்லி அதை நல்லா இருக்கா இல்லையான்னு அப்ரூவ் பண்ணிப் பாட அனுமதிக்கிறது, அதே போல, காலேஜுல இருந்து வீட்டுக்குப் போகும்போதும் காலேஜுல இருந்து கிளம்புற நேரத்தை ரூட்டுதலைதான் முடிவு எடுப்பாரு. இது தவிர, பஸ் டே கொண்டாட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறது, அதுக்கு நிதி வசூல் செய்றது இதெல்லாம் ரூட்டு தலையோட வழிகாட்டுதலின்படிதான் நடக்கும். ஒரு ரூட்டுல குறைந்தது இருபது பேரிலிருந்து இருநூறு பேர் வரை இருப்பாங்க. இதுல டிரெயின் ரூட்டும் அடக்கம். ரூட்டு தலைங்கிறது அதிகாரமிக்க பதவிங்கிறதால அது கிடைக்கிறது அவ்ளோ ஈஸி கிடையாது.
ரூட்டு சண்டை ஏன் வருகிறது?
வேற வேற ரூட்டு மாணவர்கள் கல்லூரியில பழகும்போது அவங்களுக்குள்ள சின்ன சண்டையா வந்து அப்படியே ரூட்டு சண்டையாக மாறும். உதாரணத்துக்கு, தேர்டு இயர் படிக்கிற `ரூட்டு தல’ இருக்கிறார்னு வெச்சுக்குவோம். அவர்கூடவே எதுக்கும் பயப்படாம ரெண்டு பேர் சுத்துறாங்கன்னு வெச்சுக்குவோம். அந்த `ரூட்டு தல’ தேர்டு இயர் முடிச்சு காலேஜ விட்டுப் போன அப்புறம் அந்த ரூட்டுல துடுக்காக இருக்கிற அந்த ரெண்டு பேருமே `ரூட்டு தல’ பதவிக்குத் தகுதியானவங்களா இருப்பாங்க. எந்த `ரூட்டு தல’ கெத்துன்னு நிரூபிக்க ரெண்டு டீமுக்கும் சின்னச் சின்னதா சண்டை நடந்து அது கேங் வாரா மாறும். அப்படியொரு சண்டைதான் சமீபத்துல நடந்தது.
இந்தப் பிரச்னைகள் குறித்து எழுத்தாளர் கௌதம் சன்னாவிடம் பேசினேன்
“நந்தனம் ஆர்ட்ஸ், பச்சையப்பன்... இரண்டு கல்லூரிகளிலும் படித்தவன் நான். மருத்துவம், பொறியியல் போன்ற புரொஃபஷனல் கோர்ஸ் படிக்கிற மாணவர்களுக்கு அவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கு மென்கிற நம்பிக்கை இருக்கிறது. கலைக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கிற மாணவனுக்கு அந்தப் பட்டப்படிப்பினால் நமக்கு நல்ல வேலை கிடைக்கும் என்றும், நம் வாழ்க்கை மாறும் என்கிற நம்பிக்கையும் பெரிதாக இல்லை.

அந்த ஏமாற்றமும் வெறுமையும் அவனைச் சூழ்கிறது. கல்வியை சீரியஸாக அணுகுகினால் அது அவனுக்கு மன உளைச்சலைத்தான் கொடுக்கும், ஆகவே, அவன் அதை என்ஜாய் பண்ண ஆரம்பித்து விடுகிறான். அந்த மனநிலையின் செயல் வடிவம்தான் பேருந்து, ரயில்களில் கல்லூரி வருகையில் ரூட்டு என்கிற பேரில் ஒன்றாக இணைவது, இன்னபிற செய்கைகளெல்லாம்.
இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது. பஸ் டே என்பதே அவனுடைய நேட்டிவிட்டியைக் கொண்டாடுவதுதான். தமிழகத்திலேயே சென்னையைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள்தான் இதைக் கொண்டாடுவார்கள். காரணம், சென்னை போன்ற நகரத்தில் பல்வேறுவிதமான கலாசாரங்களும் மொழிகளும் இருப்பதால் சென்னைவாசிகளான இவர்கள் தங்களுடைய நேட்டிவிட்டியைப் பாடல்கள் வழியாக, குழுவாக இணைந்து பயணிப்பதன் வழியாக அதில் பதிவு செய்ய நினைக்கிறார்கள். சரி, இது எங்கே வன்முறையாக மாறுகிறது?
சென்னை மாணவர்கள் கத்தியை எடுப்பது ஹீரோயிச மனப்பான்மையிலிருந்து எழுவது. இதற்குப் பின்னால் சாதியோ அரசியல் கட்சிகளோ பெரும்பாலும் இருப்பதில்லை. ஒரு பெண்ணை இம்ப்ரஸ் பண்ண ஒருவன் முயற்சி செய்கிறான். அந்தப் பெண்ணை அணுகுவதற்கு மொழிப்பிரச்னை, சமூகப்பிரச்னை, பொருளாதாரப் பிரச்னை போன்றவை இருக்கின்றன. அதனால், தான் வீரன் என நிரூபிப்பதற்காகப் பேருந்துக் கூரையில் ஏறுவது, கத்தியைத் தூக்குவது ஆகியவற்றைச் செய்கிறார்கள். சினிமா அவனுக்கு இதைத்தான் கற்றுக் கொடுக்கிறது. அவனுடைய ரோல்மாடல்களாக நம் சினிமாக் கதாநாயகர்கள்தான் இருக்கிறார்கள். ‘ரூட்டுதல’ சண்டைகளின் மையப்புள்ளி பெரும்பாலும் பெண்கள் விஷயமாகத்தான் இருக்கும்.
இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும்?
முதலாவது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்துக் கல்லூரிகளும் இருபாலர் கல்லூரியாக மாற்றப்பட வேண்டும். ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கிற சூழலில் ஆண் - பெண் குறித்து இங்கு புனையப்பட்டிருக்கிற கற்பிதங்கள் அவர்களுக்குப் புரியவரும்.

குற்றங்கள் குறைய அது வழிவகுக்கும். சென்னையில் மாணவர்களின் அடாவடித்தனம் மிகுந்த கல்லூரிகள் எனப் பார்த்தால், தியாகராயா, நந்தனம் ஆர்ட்ஸ், பச்சையப்பன் ஆகிய மூன்று கல்லூரிகளைச் சொல்லலாம். ஐந்து வருடங்களுக்கு முன்பு தியாகராயா கல்லூரியை இருபாலரும் படிக்கக்கூடிய கல்லூரியாக மாற்றினார்கள். அதற்குப் பிறகு இந்தப் பிரச்னைகள் குறைந்தன. மேலும், படித்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு அரசாங்கமும் சமூகமும் உருவாக்கித் தர வேண்டும். மேலும், ஒவ்வொரு பாடத்தையும் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதற்கு அதை சுவாரஸ்யமாக்க வேண்டும். கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது போன்ற வழிமுறைகளை மேம்படுத்த வேண்டும். கலைக்கல்லூரி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்க வேண்டும். வெறுமனே மாணவர்களை வன்முறைக்கு எதிரான உறுதிமொழி எடுக்கச் சொல்வதாலோ கடுமையாக தண்டிப்பதால் மட்டுமோ இந்தப் பிரச்னைகள் தீரப்போவதில்லை. இதற்குப் பின்னால் உள்ள சமூக மற்றும் உளவியல் பின்னணிகளையும் சேர்த்து அணுக வேண்டும்” என்று பிரச்னைகளுடன் தீர்வுகளையும் சேர்த்துப் பேசினார்.
ரூட்டை க்ளியர் பண்ணுங்கப்பா!