சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

5 டிரில்லியன் டாலர்... நிறைவேறும் கனவா, நிராசையா?

பொருளாதார வளர்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
பொருளாதார வளர்ச்சி

‘2024-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே இந்தியாவின் முதன்மை இலக்கு’ - பிரதமர் மோடியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மீண்டும் மீண்டும் சொல்லும் வார்த்தைகள் இவை.

ரு டிரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி. அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு என்ன என்பதையும் 5 டிரில்லியன் டாலருக்கு எத்தனை பூஜ்யம் என்பதையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது. பல நிறுவனங்கள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேலையிழப்பு அதிகரித்திருக்கிறது. ஆட்டோமொபைல் துறை அடிவாங்கியிருக்கிறது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு சம்பளம் போட வழியில்லை. விருப்ப ஓய்வுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியப்பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்டும் என்பது நனவாகும் கனவா, வெறும் பகல்கனவுதானா?

modi
modi

இன்றைய நிலையில் இந்தியா உலக அளவில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கிறது. கடந்த 2018-ன் இறுதியில்தான், ஆறாவது இடத்தில் இருந்த பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தை 2.59 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் இந்தியா கைப்பற்றியது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 3 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார நாடாக இந்தியா உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குறுகியகால இலக்கை நாம் வெற்றிகரமாக அடைந்துவிட்டால், ஐந்தாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தையும் தாண்டிச் சென்று உலக அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துவிடுவோம் என்பது மத்திய அரசின் வாதம். ஆனால், இதைச் சாதிக்க, அடுத்த 5 ஆண்டுகளில், மத்திய அரசாங்கம் சந்திக்க வேண்டிய சவால்களும், முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஏராளம்.

“உலகின் முன்னேறிய நாடுகள், 3 டிரில்லியன் டாலருக்குக் கீழ் இருந்து 5 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார நாடாக மாறுவதற்கு எடுத்துக்கொண்ட காலகட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாகத் திகழும் அமெரிக்கா இந்நிலையை அடைவதற்கு 9 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. ஆனால் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சீனாவோ நான்கே ஆண்டுகளில் 2.75 டிரில்லியன் டாலரிலிருந்து 5.11 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துக்கு முன்னேறியது. எனவே, அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் நிலையை இந்தியா எட்டிவிடும் என்கிறார்கள் சிலர். மேலும், இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதார நாடாக உயர்வதற்கு சுமார் 55 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நமது பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. எனவே, அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியமே.

நடப்பு 2019-20-ம் நிதி ஆண்டில் 7 சதவிகித அளவுக்கு மட்டுமே ஜி.டி.பி வளர்ச்சி உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். என்றாலும், இந்த ஆண்டில் நமது பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக உயரும் என்று சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். ஆனால், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற நிலையினை அடைய இந்த வளர்ச்சி வேகம் நிச்சயம் போதாது. அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் சராசரியாக 12 சதவிகிதம் ஜி.டி.பி வளர்ச்சி இருந்தால் மட்டுமே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற கனவு நனவாகும்” என்கிறார் ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜூ.

ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்தியாவின் ஜி.டி.பி-யானது கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே இரட்டை இலக்கத்தில் வளர்ந்திருக்கிறது. அதாவது, கடந்த 2010-ல் 11 சதவிகிதத்துக்குச் சற்று அதிகமாக வளர்ச்சி கண்டிருக்கிறது. அதன்பிறகு 2011-ல் 10 சதவிகிதம் என்கிற இலக்கினைத் தொட்டது. அதன்பிறகு இரட்டை இலக்கத்தைத் தொடவே இல்லை. இப்படியிருக்கும் போது அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 12 சதவிகித வளர்ச்சியை நமது பொருளாதாரம் காணுமா என்கிற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.

5 டிரில்லியன் டாலர்... நிறைவேறும் கனவா, நிராசையா?

இந்தியப் பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்வதில் தமிழகத்தின் பங்கு மிக அதிகம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு பெருமளவு. மராட்டிய மாநிலத்தை அடுத்து அந்நிய முதலீட்டை அதிகம் பெறும் மாநிலம் தமிழகம்தான். மேலும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், மென்பொருள் உற்பத்தி, பி.பி.ஓ போன்ற துறைகளில் மிளிர்கிறது தமிழகம். இந்த வளர்ச்சியினால் தமிழகத்தின் வேலைவாய்ப்பு நிலவரம் முன்னேறி, படித்த இளைஞர்களிடம் வேலையில்லாத் தட்டுப்பாடு குறைக்கப்பட்டுவிட்டது.

5 டிரில்லியன் பொருளாதாரம் சாத்தியமானால், அதில் தமிழகத்தின் பங்கு பெருமளவு இருக்கும் என்பதே பல பொருளாதார நிபுணர்களின் கருத்து.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறைத் தலைவர் க.ஜோதி சிவஞானம், “பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அறிமுகம் போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி சரிந்திருக்கிறது. உலகளவில் பொருளாதாரத்தை அளவிட இரு மதிப்பீடுகள் முக்கியம். ஒன்று ஜி.டி.பி வளர்ச்சி விகிதம். மற்றொன்று நிதிப்பற்றாக்குறை. இந்தியாவில் இந்த இரண்டுமே இன்று கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த நிலையில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக 2024-ல் இந்தியாவை வளர்த்தெடுப்போம் என்கிறார்கள். முன்பு ‘அச்சே தின்’ வரும் (நல்ல காலம் பிறக்கப்போகிறது) என்று சொன்னதைப் போலத்தான் இது” என்கிறார்.

“கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதம். கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டின் வளர்ச்சி விகிதம் 5.8 சதவிகிதம். ஆனால், இந்த வளர்ச்சி விகிதம் எல்லாமே, திருத்தப்பட்ட முறையின் கீழ் காட்டப்பட்ட வளர்ச்சி விகிதம்” என்கிறார் மூத்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான அரவிந்த் சுப்பிரமணியம். “அதாவது, 2014-ம் ஆண்டில் இந்த அரசு பொறுப்பேற்ற உடனே பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடும் முறையையே மாற்றி அமைத்தார்கள். கணக்கிடும் முறையை மாற்றிய உடனேயே எதுவுமே நடக்காமல் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவிகிதம் அதிகரித்தது. இந்த விவகாரம் கடுமையாகப் பொதுவெளியில் விவாதிக்கவும்பட்டது. அப்படிப் பார்க்கும் போது பழைய கணக்கிடும் முறையின்படி, கடந்த காலாண்டின் அடிப்படையில் வளர்ச்சிவிகிதம் வெறும் 3.3 சதவிகிதம்தான். முழு ஆண்டுக்கும் எடுத்துப் பார்த்தால்கூட, 4.3 சதவிகிதம்தான் வளர்ச்சி. மோடி சொல்வதுபோல, இப்போது உள்ள 5.8 சதவிகித வளர்ச்சியிலிருந்து 8 சதவிகித வளர்ச்சியை அடைய முடியுமா என்பதே சந்தேகம். அப்படியே 8 சதவிகித வளர்ச்சி அடைந்தால்கூட 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக ஆக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

ஏனெனில், அண்மைக்காலமாகவே ஒரு துறை விடாமல் எல்லாத் துறையும் மிகுந்த நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. புள்ளியியல்துறை அமைச்சகத்தின் தேசிய மாதிரி சர்வே அலுவலக (NSSO) மதிப்பீட்டின்படி, வேலைவாய்ப்பின்மையின் உயர் விகிதம் 6.1 சதவிகிதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வேலையின்மை. 2019 ஜூன் மாத நிலவரப்படி வேலையின்மையின் விகிதம் மேலும் கடுமையாகி 7.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

வளர்ச்சியின் முக்கிய அங்கம் முதலீடு. முதலீடு இல்லாமல் வளர்ச்சியை அடையவே முடியாது. ஆனால், இந்தியத் தொழில்துறைக்கான முதலீடு கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் 34 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

சரிந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தைச் சீர்செய்ய, ஒட்டுமொத்தப் பொதுமக்களின் தேவை மற்றும் தனியார் முதலீட்டை அதிகப்படுத்துவது முக்கியம்தான். அந்த நோக்கில் ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தைக் குறைத்துக் கொண்டே இருக்கிறது. ஓராண்டில் 1.1 சதவிகிதம் வட்டிவிகிதத்தைக் குறைத்தபின்னரும், இது வரும்காலங்களிலும் தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ஆனால் வங்கிக்கடன் வாங்கியிருக்கும் தனிநபர்கள்கூட இதன்மூலம் எந்தவொரு பலனையும் அனுபவிக்கவில்லை. அதனால்தான் மீண்டும் ரிசர்வ் வங்கி தலையிட்டு, அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்திருக்கிறது. சொல்லப் போனால் தனியார் முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் மேலும் தொடர்ந்து சரிந்து கொண்டேதான் வருகின்றன.

தற்போதைய நிதிநிலை அறிக்கையின்படி பார்த்தால் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாய் 2019-20ஆம் ஆண்டில் 19,62,000 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தச் செலவு 27,86,000 கோடி ரூபாய். இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கடனாக வாங்கப் போகிறார்கள். அதாவது, கிட்டத்தட்ட 7 முதல் 8 லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்கப்படவுள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3.3 சதவிகிதம். இதில் கவலை தரக்கூடிய அம்சம், கடனாக வாங்கக்கூடிய தொகையிலிருந்து 6.6 லட்சம் கோடி ரூபாயை ஏற்கெனவே வாங்கிய கடன்களுக்கு வட்டியாகச் செலுத்த வேண்டும் என்பதுதான்.

இதுதவிர மாநில அரசுகளின் பற்றாக்குறை இருக்கிறது. இப்படியாக 9-10 சதவிகிதம் அளவுக்கு நிதிப்பற்றாக்குறை இருப்பது, நாடு அன்றாடச் செலவுகளையே சமாளிக்க முடியாத நிலையில் இருப்பதைத்தான் காட்டுகிறது. உள்நாட்டுப் பிரச்னைகளுக்கான தீர்வினைக் கண்டுபிடித்து அதைச் செயல்படுத்தாமல், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவதில் என்ன பயன்?” என்ற கேள்வியோடு முடிக்கிறார்.

அரவிந்த் சுப்பிரமணியம் கேள்வியில் உள்ள யதார்த்தம் கசக்கும் என்றாலும் உண்மையான யதார்த்தம். ‘கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் காட்டப்போகிறார்களாம்’ என்கிற பழமொழிதான், மத்திய அரசின் ‘5 டிரில்லியன் டாலர்’ பேச்சுகளைப் பார்க்கும்போது நினைவுக்குவருகிறது.

5 டிரில்லியன் டாலருக்கு எத்தனை பூஜ்யம் என்று கணக்கிட்டுவிட்டீர்களா? தகுந்த திட்டமிடல்கள் இல்லையென்றால் பூஜ்யங்கள் மட்டுமே மிஞ்சும் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.