
பீச்சில் காதலர்கள் எல்லைமீறுகிறார்கள், பார்க்கில் கட்டியணைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளின் நீட்சிதான் ஓயோ அறைகள் மீதும் வந்திருக்கின்றன.
2019 ஜூன். கோவை, இந்துஸ்தான் அவென்யூ பகுதியில் ‘சில்வர் கீ’ என்ற சர்வீஸ் அப்பார்ட்மென்ட் இயங்கிவருகிறது.
ஓயோ நிறுவனத்துடன் கைகோத்திருக்கும் இதற்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. ‘‘வெல்கம் டு அன்மேரிட் கப்பிள்ஸ்’ என்று விளம்பரப்படுத்தும் இந்த சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில், திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குகின்றனர். இதில் மாணவர்களும் அடக்கம்’ எனக் குடியிருப்பு வாசிகளும் மாதர் சங்கமும் (AIDWA) புகார் எழுப்பவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அந்தக் கட்டடத்துக்கு சீல் வைத்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓயோ வழக்கு தொடர்ந்தது.
2019 டிசம்பர்.
ஓயோ தொடர்ந்த வழக்கில், ‘திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல. அவர்கள் ஒன்றாகத் தங்கக்கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை’ என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அப்பார்ட்மென்ட் இயங்கத் தடையில்லை என்றது.

2020 பிப்ரவரி.
‘2019 டிசம்பர் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும், உலகம் முழுக்க சராசரியாக 7,50,000 பேர் எங்கள் அறைகளைத் தேர்ந்தெடுத்துத் தங்கினார்கள். உலகளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட தங்கும் விடுதி களுக்கான செயலிகளில் ஓயோ 3-வது இடத்தில் உள்ளது’ என்று தன் 2019 ஆண்டறிக்கையை வெளியிட்டது ஓயோ.
சர்வதேச பிசினஸ் முதல் கோயம்புத்தூர் லோக்கல் நியூஸ் பேப்பர்வரை வியாபித்திருக்கும் ஓயோ ரூம்ஸ் (Oyo Rooms), உலகளவில் மூன்றாவது பெரிய ஹோட்டல் புக்கிங் சேவை தரும் நிறுவனம். ஒப்பந்தம் மற்றும் ஃப்ரான்சைஸ் முறையில் இயங்கி வரும் ஹோட்டல்கள், வீடுகள் போன்ற வசிப்பிடங்களை உள்ளடக்கியது. ஆறு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் கொண்டுள்ளது.
தொழில் வளர்ச்சி ஒரு பக்கம் இருக்க, ‘வெல்கம் டு அன்மேரிட் கப்பிள்ஸ்’ என்ற அம்சத்தால், அதை விளம்பரப்படுத்தும் உத்தியால் ஓயோ ரூம்ஸ் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகளும், ஏற்படுத்திவரும் மாற்றங்களும் பல.
‘மாவட்ட நிர்வாகம் ஆய்வுக்குப் போன நாளில் அங்கே ஒரு கல்லூரி மாணவரும் மாணவியும் தங்கியிருந்தாங்க. அவங்க எதிர்காலம் கருதி புத்திமதி சொல்லி அனுப்பிவெச்சாங்க அலுவலர்கள். ‘சட்டப்படி தவறில்லை’ன்னு நீதிமன்றம் சொல்றதும், ‘ஆதார் ஐடி சரிபார்த்துத் தான் ரூம் கொடுக்கிறோம்’னு ஓயோ சொல்றதும் சரிதான். ஆனா, இளைய சமுதாயம் அங்கே ரூம் எடுத்துத் தங்குறது சரியா? இதெல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியலை’ என்று புலம்புகிறார்கள் அந்த ஏரியா மக்கள்.
`` ‘வெல்கம் டு அன்மேரிட் கப்புள்’ என்ற அதன் விளம்பரம் சட்டப்படி சரிதானா?’’ வழக்கறிஞர் ரமேஷிடம் கேட்டேன்.
‘`21 வயதான ஆணும் பெண்ணும், அல்லது, ஆணும் ஆணும், அல்லது, பெண்ணும் பெண்ணும் ஓர் அறையில் தங்குவதைத் தவறு என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை. இரண்டு மேஜர்கள் தங்குவதற்காக அறையை புக் செய்யும்போது, அவர்களைத் திருமணமானவர்களா எனக் கேட்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. பீச், பார்க் போன்ற பொது இடங்களில் இளம் தலைமுறையினர் தங்கள் இணையுடனோ, நண்பனுடனோ சேர்ந்து இருப்பதை மாரல் போலீஸிங் செய்த காவல்துறையினரை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது நினைவிருக்கலாம். அதேபோல, ‘நீங்க ஒரு ரூம்ல தங்காதீங்க’ என்று மாரல் போலீஸிங் செய்வதற்கும் காவல்துறைக்கு அதிகாரமில்லை.
ஓயோ அறைகள் என்பவை ஒருவிதமான பிசினஸ். இங்கு நண்பர்கள் தங்கலாம், குடும்பங்கள் தங்கலாம், திருமணமானவர்கள் தங்கலாம், ஆனால், திருமணம் ஆகாத இருவர் தங்கக்கூடாது என்று ஒரு ஜனநாயக நாட்டில் சொல்ல முடியாது. ஒருவேளை சம்பந்தப்பட் டவர்கள் பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் விதமாக நடந்துகொள்கிறார்கள் என்றால், அதுகுறித்துப் புகார் அளித்தால் நியூசன்ஸ் வழக்கு போடலாம். ஒருவேளை இந்த அறைகளில் பாலியல் தொழில் நடப்பது பற்றிய புகார்கள் வந்தால், காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால், இரு நபர்களின் அந்தரங்கத்தில் யாரும் தலையிட முடியாது.
ஒழுக்கம் சார்ந்த விஷயங்கள் என்பவை வேறு, சட்டம் சார்ந்த விஷயங்கள் என்பவை வேறு. குடும்பமும் சமுதாயமும் ஒழுக்கமின்மை என்று நினைப்பவற்றை இளைய தலைமுறை செய்யக் கூடாது என்று கண்டிக்கலாம், தடுக்கலாம். நீதிமன்றத்திடமோ, சம்பந்தப்பட்ட நிர்வாகத் திடமோ ‘இதை அனுமதிப்பது தவறில்லையா?’ என்று கேட்க முடியாது’’ என்றார் ரமேஷ்.
சமூக ஆர்வலரும் பேச்சாளருமான பாரதி பாஸ்கர், ‘`இணை அல்லது எதிர்பாலினத்தினருடன் பழகுவதில் தங்களுக்கான எல்லை, சுதந்திரம் பற்றியெல்லாம் சுயவரையறைகளுடன் இருக்கிற 30+ வயதினர் இந்த அறைகளைப் பயன்படுத்து வதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை.
அதன் நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளும் வாழ்பனுபவங்களை அவர்கள் அறிந்திருப்பார்கள். என் பதற்றமெல்லாம், 20+ வயதுகளில் இருக்கிற இளம்பெண்களும் ஆண்களும்தான். குறிப்பாக, சிறிய நகரங்களில் உள்ள பெண்கள்.
காதல் என்று தாங்கள் நம்பும் உறவு கடிவாளம் இன்றிச் செல்ல இதுபோன்ற கலாசாரங்கள் இடமளிக்கும்போது, மீண்டு வர முடியாத வாழ்க்கைச் சுழலில் இளம்பெண்கள் சிக்கிக் கொள்வார்கள் என்பதுதான் பதற்றத்தை அளிக்கிறது.
தான் நம்பும் ஆண் சரியானவனா, தவறான வனா என்று புரிந்துகொள்கிற தெளிவான அறிவை, நம் பெண் பிள்ளைகளுக்கு வீடு, பள்ளிக்கூடம், கல்லூரி, சமூகம், ஊடகம் என அனைத்துத் தரப்பும் கற்றுத்தர வேண்டும். பொள்ளாச்சியில் நடந்ததைப்போல இனியொரு சம்பவம் எங்கும் எந்தப் பெண்ணுக்கும் நடந்துவிடக்கூடாது என்று ஒரு தாயாக, ஒரு சமூக ஆர்வலராக என் நெஞ்சம் பதறுகிறது’’ என்கிறார் பாரதி பாஸ்கர்.
ஆண், பெண் உறவு பற்றிய சரியான புரிந்துணர்வுதான் இதுபோன்ற சிக்கல்களுக்கான தீர்வாக இருக்க முடியுமேயொழிய, விடுதிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் முழுவதுமாக உதவாது. விடுதிகள் இல்லையேல் இன்னோரிடம் என அவை தொடரத்தான் செய்யும். இந்தச் சிக்கல் பற்றிப் பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் கேட்டேன்.
‘`நான் ஓயோ கலாசாரத்தை கவனித்து வருகிறவன் என்ற வகையில், ஒரு பாலியல் மருத்துவராக இதில் சிலவற்றை எச்சரிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது’’ என்று ஆரம்பித்தார்.

‘`ஓர் ஆணும் பெண்ணும் உறவில் இணைய, சட்டம் அனுமதிக்கும் வயது மட்டுமே போதாது. படிப்பு, வேலை என எதிர்காலத்துக்காக ஓட வேண்டிய 20 வயதுகளில் இருக்கும் இளைய சமுதாயத்தினரை இதுபோன்ற கலாசாரங்கள் தேவையற்ற கர்ப்பம், ஆபத்தான கருக்கலைப்பு, பால்வினை நோய்கள் என்று விபரீதங்களுடன் போராட வைத்துவிடும். பிரபல ‘கோரா(Quora)’ தளத்தில், ‘நானும் என் கேர்ள் ஃபிரெண்டும் ஓயோ அறையில் தங்கியபோது வீடியோ எடுத்து மிரட்டுகிறார்கள்’ என்று டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பதிவிட்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. இப்படி, இதில் உள்ள ஆபத்துகள் இன்னும் நீண்டுகொண்டே செல்லக்கூடியவை. மொத்தத்தில் இந்தக் கலாசாரம், சம்பந்தப்பட்டவர்களின் உடல்நலன், மனநலன், வாழ்க்கைத்தரம் என்று அனைத்தையும் பாதிக்கக்கூடியது. இதற்காகத்தான், பாலியல் கல்வியின் தேவையை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறோம். அப்போதுதான், இளவயதில் தாங்கள் செய்கிற விஷயங்கள் பின்னாளில் எப்படி எதிரொலிக்கும் என்பது அவர்களுக்குப் புரியும்; பொறுப்புணர்வு வரும்’’ என்கிறார்.
பீச்சில் காதலர்கள் எல்லைமீறுகிறார்கள், பார்க்கில் கட்டியணைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளின் நீட்சிதான் ஓயோ அறைகள் மீதும் வந்திருக்கின்றன. பிரச்னையின் வேரை விட்டு நாம் கிளைகளை மட்டுமே நறுக்கிக்கொண்டிருப்பது நாகரிகமடைந்த சமூகத்திற்கான அடையாளம் அல்ல. ஓயோ அறைகள் விஷயத்தில் நாம் பேச வேண்டியது அதன் விதிகள் பற்றி அல்ல; அங்கு அறைகள் எடுக்க விரும்பும் இளைய சமுதாயத்தின் மனநிலை பற்றியும் அவர்களின் புரிதலைப் பற்றியுமே.