சினிமா
Published:Updated:

பறிக்கப்படுகிறதா படைப்புச் சுதந்திரம்?

கமல், சூர்யா, வெற்றிமாறன், ரஞ்சித், கார்த்தி, எஸ்.வி.சேகர்
பிரீமியம் ஸ்டோரி
News
கமல், சூர்யா, வெற்றிமாறன், ரஞ்சித், கார்த்தி, எஸ்.வி.சேகர்

‘தணிக்கை செய்யப்பட்ட படத்தை அரசு நினைத்தால் மறுதணிக்கை செய்யலாம், அல்லது, தடை விதிக்கலாம்’ என்னும் அபாயத்தை எதிர்த்துத்தான் திரையுலகில் பலர் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய சினிமா உலகமே ஒன்றுதிரண்டு வந்து ஒரு சட்டத்திருத்தத்துக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. PGI, IFTPC, IMPPA, WIFPA, FICE, IFTDA என ஆறு அமைப்புகள் திரைத்துறை மீதான பேரிடி என இந்த வரைவை எதிர்த்திருக்கின்றன.

“சினிமாவின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆபத்தான போக்கு இது” என எச்சரித்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். “சட்டம் என்பது சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல” எனத் தன் குரலைப் பதிவு செய்திருக்கிறார் சூர்யா. “பைரஸிக்கு எதிரான விஷயங்கள் ஆறுதல் அளித்தாலும், மத்திய அரசு நினைத்தால் ஒரு படத்தைத் தடை செய்யலாம் என்பது பதற்றத்தையே அதிகரிக்கச் செய்யும்” என அழுத்தமாகத் தன் கருத்தை முன்வைத்திருக்கிறார் நடிகர் கார்த்தி. “இந்தச் சட்ட வரைவு கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதோடு, சினிமாத்துறையின் கழுத்தில் கயிற்றை நெரிக்கக் காத்திருக்கிறது. இனி சமூக அவலங்களுக்கு எதிராக, மோசமான அரச வன்முறைக்கு எதிராக யாரும் படைப்புகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என நீண்ட கடிதத்தில் காட்டமாக வலியுறுத்தி யிருக்கிறார் கமல்ஹாசன். “இந்தியாவின் நட்பு நாடுகள் குறித்தோ, இனப்படுகொலை குறித்தோ நாம் இனி எந்த வசனமும் பேச இயலாது” என இந்தச் சட்டத்தின் ஆபத்தான பக்கங்களைப் பட்டியலிடுகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

பறிக்கப்படுகிறதா படைப்புச் சுதந்திரம்?
பறிக்கப்படுகிறதா படைப்புச் சுதந்திரம்?

அப்படி என்னதான் இருக்கிறது இந்த மசோதாவில்?

‘ஒளிப்பதிவு (திருத்த) சட்டத்தின் 2021 வரைவின்படி, தணிக்கைச்சான்றிதழ் அளித்த பின்னரும், அந்தத் திரைப்படத்தில் ஏதாவது விதி மீறல்கள் இருப்பதாகக் கருதினால், மத்திய அரசு அதில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். தேவைப்பட்டால் சான்றிதழையும் மறுபரிசீலனை செய்யலாம். திரைப்படத்துக்குத் தடையும் விதிக்கலாம்.

 இதுவரை U, U/A, A என மூன்று சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. இனி இதனுடன் U/A என்ற சான்றிதழே மூன்றாகப் பிரிக்கப்பட்டு ‘U/A 7+’, ‘U/A 13+’, ‘U/A 16+’ என்று அளிக்கப்படவுள்ளது.

 திரைப்படங்களைத் திருடினால் (பைரஸி) இனி மூன்று மாதம் முதல் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதை இந்தச் சட்டம் முன்மொழிவதோடு, மூன்று லட்சம் முதல் திரைப்படத் தயாரிப்புச் செலவில் ஐந்து சதவிகிதம் வரை அபராதமாக வசூலிக்கப்படும்.

இவைதான் முக்கியமான அம்சங்கள். ‘தணிக்கை செய்யப்பட்ட படத்தை அரசு நினைத்தால் மறுதணிக்கை செய்யலாம், அல்லது, தடை விதிக்கலாம்’ என்னும் அபாயத்தை எதிர்த்துத்தான் திரையுலகில் பலர் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். ஒளிப்பதிவுச் சட்டம் 1952-ன் பிரிவு 5B (1)-ல், ‘ஒரு படம் நாட்டின் பாதுகாப்புக்கோ, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கோ, மற்ற நாடுகளுடனான நட்புறவுக்கோ, சட்ட ஒழுங்கிற்கோ, ஒழுக்கம் அல்லது அறநெறிக்கோ ஊறுவிளைவிப்பதாக இருந்தால் அதற்குச் சான்றிதழோ பொதுவெளியில் திரையிடப் படுவதற்கான அனுமதியோ மறுக்கப்படும். இது அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது இதுபோன்ற எந்தவொரு குற்றத்திற்கும் பொருந்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிக்கப்படுகிறதா படைப்புச் சுதந்திரம்?
பறிக்கப்படுகிறதா படைப்புச் சுதந்திரம்?

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தணிக்கைமுறை குறித்தே பல விமர்சனங்கள் உள்ளன. அரசுக்கோ ஆளும்வர்க்கத்துக்கு எதிராகவோ ஒரு சினிமா பேசினால் ஏகப்பட்ட வெட்டுகள், சமயத்தில் படத்துக்கே தடை விதிக்கப்படும் அபாயம் இருந்தது. இப்படி சென்சாரில் பிரச்னைகள் எழும்போது, அதை மேல்முறையீடு செய்து விசாரிக்க தேசிய திரைப்படத் தணிக்கைத் தீர்ப்பாயம் செயல்பட்டது. அதையும் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி கலைத்துவிட்டது மத்திய அரசு. இனி தணிக்கையில் பிரச்னை என்றால், படைப்பாளிகள் நீதிமன்றங் களை மட்டுமே நாட முடியும் என்ற நிலை. அந்தத் தீர்ப்பாய ரத்துக்கே பல்வேறு அமைப்பினர், தங்கள் எதிர்ப் புகளைப் பதிவு செய்துவந்த நிலையில், இந்த மசோதா மூலம் படைப்புச்சுதந்திரத்துக்கு இன்னும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கொந்தளிக்கின்றனர் கலைத் துறையினர்.

பத்மாவத், உட்தா பஞ்சாப் போன்ற படங்கள் வந்தபோது வட இந்தியா முழுக்க பிரச்னைகள் எழுந்தன. தமிழகத்திலும், முறைப்படி தணிக்கை செய்யப்பட்ட படங்களான டேம் 999, தி டாவின்சி கோடு, மெட்ராஸ் கஃபே போன்ற படங்களைத் தமிழக அரசு தடை செய்த வரலாறும் உண்டு. ஒரு குழு நினைத்தால் எந்தப்படத்தையும் முடக்கிவிட முடியும் என்னும் சூழல் உருவானபோதே, ‘தணிக்கைக்குப் பிறகும் தணிக்கையா?’ என்ற அதிருப்திக்குரல்கள் எழுந்தன. ஒரு படம் தவறான கருத்துகளை முன்வைத்தால் அதற்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கலாம்; படத்தைப் பார்க்காமல் புறக்கணிக்கலாம்; தங்கள் தரப்புக் கருத்துகளை முன்வைத்துப் படங்களை உருவாக்கலாம். ஆனால் படங்களுக்குத் தடைவிதிக்கக் கோருவது தவறானது என்பதே படைப்புச்சுதந்திரத்தை வலியுறுத்துபவர்களின் வாதம். இப்போதோ படைப்புச்சுதந்திரத்தைப் பறிப்பதில் மாநில அரசு, சிறுகுழுக்கள் ஆகியவற்றுடன் மத்திய அரசும் இணைந்துள்ளது.

நீதிமன்றங்களின் நத்தை நகர்வுகளைத் தோலுரித்தது மராத்தியப் படமான ‘கோர்ட்’. காவல்துறையின் கோர முகத்தைப் பட்டியலிட்டது ‘விசாரணை.’ விவசாயிகளின் வேதனைகளை உலகுக்குச் சொன்னது ‘பீப்ளி லைவ்.’ அரசின் விமான ஊழலை இளைஞர்களை முன்னிறுத்திச் சாடியது ‘ரங் தே பசந்தி.’ இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் துயரத்தைப் பேசியது ‘ஹேராம்.’ ஆஸ்கர் போன்ற உலக விருதுகளுக்கு இந்தியா சார்பாகத் தேர்வு பெறும் படங்கள்கூட சர்ச்சையானவைதான். ஆஸ்கருக்குத் தேர்வான படங்கள் மட்டுமல்ல, இந்திய அரசியலைக் கேள்வி கேட்டு கவனம் ஈர்த்த படங்களும் நிறைய உண்டு. காஷ்மீர்ப் பிரச்னையைக் கையிலெடுத்த ‘ஹைதர்’ ஓர் உதாரணம். இந்தியாவுக்கான உலக முகம் என்பது இத்தகைய துணிச்சலான படங்கள்தான். ஆனால் இனிமேல் இத்தகைய படங்கள் வெளிவருமா என்ற கேள்வியை இந்த மசோதா உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து சென்சார் கமிட்டியில் இருந்த எஸ்.வி.சேகரிடம் பேசியபோது, “U சர்ட்டிபிகேட் படங்களுக்கு மானியம் தருகிறோம் எனத் தமிழக அரசு அறிவித்தது. அதனால் படம் முழுக்க A சான்றிதழுக்கான காட்சிகளை வைத்துவிட்டு U சர்ட்டிபிகேட் வேண்டும் என அடம்பிடிப்பவர்களே இங்கு அதிகம். அதே போல், சினிமாத்துறை சாராத கட்சி சார்புடையவர்களை தொடர்ச்சியாகத் தமிழக அரசுகள் தணிக்கைக்குழுவில் அனுமதித்தன. சில படங்களுக்கு இப்படித் தவறாக சென்சார் வழங்கப்பட்டதால் அதையே முன்னுதாரணமாக வைத்து அடுத்தடுத்த படங்களுக்கும் சான்றிதழ்கள் வாங்க ஆரம்பித்தனர். ‘மெர்சல்’ மாதிரியான படங்களில் உண்மைக்குப் புறம்பான வசனங்கள் பல உண்டு. ஆனால் எப்படியோ சரிக்கட்டி தணிக்கைச் சான்றிதழ் வாங்கிப் படத்தை வெளியிட்டனர். இப்படியான சூழலில்தான் மத்திய அரசு இதில் தலையிட விரும்புகிறது. நமக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ இலங்கை நமக்கு நட்பு நாடு. அதற்கு எதிராகப் படம் எடுக்கக்கூடாது என மத்திய அரசு சொன்னால், அது நியாயம்தானே? இறையாண்மை என்றால் அது இந்திய இறையாண்மைதான். தமிழக இறையாண்மை, கன்னட இறையாண்மை என்றெல்லாம் கிடையாது.

இங்கு இருக்கும் தணிக்கை அமைப்பு என்பது இந்திய அரசுக்குக் கட்டுப்பட்டது. அதைப் பின்பற்றியே படங்கள் எடுக்கவேண்டும். ‘கபாலி’ படத்துக்கு இந்தியாவில் U சர்ட்டிபிகேட் வாங்க முடிகிறது. அதே சமயம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற தேசங்களில் அந்தப் படம் A சர்ட்டிபிகேட்தான் வாங்கியது. அதிகாரிகள் விலைபோவதால் ஏற்படும் தவறுகள் இவை.

பறிக்கப்படுகிறதா படைப்புச் சுதந்திரம்?
பறிக்கப்படுகிறதா படைப்புச் சுதந்திரம்?

தணிக்கைக்குழுவில் நேர்மையான அதிகாரிகள், சினிமா தெரிந்த நபர்கள் வருவதுதானே தீர்வாக இருக்க முடியும் என நீங்கள் கேட்கலாம். ஆனால், அப்படியான சூழ்நிலையை எல்லாம் தணிக்கைத் துறை தாண்டிவிட்டது. அதனால்தான் தற்போது மத்திய அரசு இதில் தலையிட விரும்புகிறது. சினிமாத்துறையில் இருக்கும் 99% நபர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. வெளிநாட்டு நிதிகளில் படம் எடுப்பவர்கள், ஒருகுறிப்பிட்ட கருத்தைத் திணிக்க நினைப்பவர்கள் போன்றவர்களுக்குத்தான் இந்த மசோதா ஆபத்தானது” என்கிறார்.

எஸ்.வி.சேகரின் குரல் இப்படியானதாக இருந்தாலும் ‘இந்த மசோதா படைப்புச்சுதந்திரத்தின் பாதையை மறைக்கவும் தனக்கேற்றவாறு சினிமாக்களை உருவாக்கவும் செய்யும் மத்திய அரசின் தந்திரமே’ என்ற குரல்கள் பலமாக எழுகின்றன. இந்த மசோதா குறித்துப் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் ஜூலை 2-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. இனி இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் என்ன செய்யப்போகிறார்கள், இந்த மசோதா இனிவரும் சினிமாக்களில் எப்படிப் பிரதிபலிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.