
சஹானா
காலிங் பெல் சத்தம் கேட்டு, கதவைத் திறந்த வித்யாவுக்கு ஆச்சர்யம்.
“என்ன ரெண்டு பேரும் சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க... உள்ளே வாங்க” என்று அழைத்துச் சென்றார்.
“ஹேப்பி வெடிங் ஆனிவர்சரி வித்யாக்கா” என்று வினு ஸ்வீட் பாக்ஸையும் விமல் புடவையையும் கொடுத்தனர்.
“தேங்க்யூ ஸோ மச். இன்னிக்கு டின்னர் சாப்பிட்டுதான் போகணும். என்ன வேணும்னு சொல்லுங்க.”
“அரட்டையடிக்கதான் வந்தோம். டின்னர் ஆர்டர் பண்ணிக்கலாம், உட்காருங்க” என்றவர்களுக்கு பால்கோவா, முந்திரி பக்கோடா, ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தார் வித்யா.
“ஸாரா ரூதர்ஃபோர்டு நினைவிருக்கா விமல்?” என்று கேட்டபடியே பால்கோவா வைச் சுவைத்தாள் வினு.
“கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு பொண்ணு தனியா உலகத்தைச் சுத்தப் போறாங்கன்னு சொல்லிட்டிருந்தியே... அவங்களா?”
“கரெக்ட் விமல். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவங்க. பிரிட்டன்ல வசிக்கிறாங்க. ஆகஸ்ட் மாசம் உலகத்தைத் தனியா சுத்தி வர்றதுக்காகக் கிளம்பினாங்க. ரெண்டு சீட் மட்டுமே உள்ள சின்ன ஃப்ளைட்ல 51,000 கிலோமீட்டர் தூரம் பயணிச்சிருக்காங்க. அஞ்சு கண்டங்கள்ல 60-க்கும் மேலான இடங்கள்ல தங்கியிருக்காங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே இவங்க பயணம் முடிஞ்சிருக்க வேண்டியது. அலாஸ்காவிலயும் ரஷ்யாவிலயும் மோசமான வானிலை இருந்ததால அங்கிருந்து கிளம்ப முடியல. லேட்டா வந்தாலும் 19 வயசுல தனியா உலகைச் சுத்தி வந்த பொண்ணுங்கிற சாதனை யைப் படைச்சிட்டாங்க. ஸாராவோட அப்பாவும் அம்மாவும்கூட விமானிகளாம்!”
“வாவ்... கங்க்ராட்ஸ் ஸாரா! நாமளும் இப்படி. வேர்ல்டு டூர் பிளான் பண்ணலாம்ல...”
“இந்த பேண்டெமிக்ல நாம பக்கத்து ஊருக்கே இன்னும் போகல... இதுல வேர்ல்டு டூரா! போங்க வித்யா அக்கா” என்று சிரித்தாள் வினு.
“போற காலம் சீக்கிரமே வரும் வினு. ரெண்டு வருஷமா போகாததை எல்லாம் சேர்த்து வச்சு என்ஜாய் பண்ணுவோம். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தன்னோட மேரேஜை தள்ளி வச்சிட்டாங்க தெரியுமா...” என்றாள் விமல்.
“என்ன விமல் சொல்றே? ஜெசிந்தாவுக்குக் குழந்தையே இருக்கே...”
“ஆமா வித்யாக்கா. க்ளார்க் கேஃபோர்டு கூட இணைஞ்சு வாழ்ந்து, குழந்தை பெத்துக் கிட்டாங்க. ஆனா, மேரேஜ் நடக்கல. இப்ப கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்தாங்க. நியூசிலாந்துல ஒன்பது பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டதால, கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. இவ்வளவுக்கும் நியூசி லாந்துல தொற்று பாதிப்பும் உயிரிழப்பும் குறைவாதான் இருக்கு. ஆனாலும், நாட்டு நலன்தான் முக்கியம்னு இந்த முடிவு எடுத்து, எல்லாத்துலயும் சிக்ஸர் அடிச்சிடறாங்க ஜெசிந்தா’’
“ஆமா விமல், கலக்கறாங்க.”
“பழமொழி சொன்னதுக்காக ஒரு பெண் பத்திரிகையாளர் ஜெயிலுக்குள்ள இருக்காங்க, தெரியுமா...” என்று கேட்டார் வித்யா.
“பழமொழிக்கெல்லாம் ஜெயிலுக்குப் போவாங்களா...” என்றாள் வினு
“போயிருக்காங்களே வினு... துருக்கியில. செடஃப் கபாஸ் பத்திரிகையாளரா இருக்காங்க. எதிர்க்கட்சி சார்புள்ள ஒரு தொலைக்காட்சியில, ‘முடி சூடிய தலை அறிவுள்ளதாக மாறிவிடுகிறதுன்னு ஒரு பழமொழி இருக்கு. ஆனா, அது உண்மை இல்லங்கிறதைப் பார்த்துட்டு வர்றோம்’னு சொல்லியிருந்தாங்களாம். இது துருக்கி அதிபர் ரிசெஃப் தாயிபை அவமதிக்கிறதா இருக்காம். அதனால விசாரணைக்கு முன்னாடியே செடஃப் கபாஸை ஜெயில்ல போடச் சொல்லியிருக்கு நீதிமன்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டா ஒரு வருஷத்துலேருந்து நாலு வருஷங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்னு சொல்றாங்க.”
“ஐயோ... கொடுமையே... இது பத்திரிகையாளர்களை மிரட்டற மாதிரி இருக்கே... அநியாயம் வித்யாக்கா....” என்றாள் விமல்.

“சொன்னா நம்பக்கூட மாட்டே... 2020-ம் வருஷத்துல மட்டும் அதிபர் ரிசெஃப் தாயிபை அவமதிச்சதா 31,000 வழக்கு விசாரணைகள் நடந்திருக்காம். இதுக்கே ஓர் அமைச்சகத்தை ஒதுக்கியிருப்பாங்களோ...” என்று வித்யா கேட்கவும் வினுவும் விமலும் சிரித்தனர்.
“நம்ம சானியா மிர்சா 35 வயசுல ஓய்வை அறிவிச்சிருக்காங்களே... அப்போ இனிமே அவங்களோட டென்னிஸ் ஆட்டத்தைப் பார்க்க முடியாதா?” என்று கேட்டாள் வினு.
“ரொம்ப போல்டானவங்க. ரெட்டையர் போட்டிகள்ல நம்பர் ஒன்னா இருக்கக் கூடியவங்களோட சேர்ந்து விளையாடினாலும் ரொம்பவும் தன்னம்பிக்கையோட இருப் பாங்க.”
“விளையாட்டுல மட்டுமில்ல விமல்... அவங்க விளையாடும்போது போடுற டிரஸ்ஸுக்காகவும் விமர்சனங்கள் வந்துச்சு. நான் என்ன டிரஸ் போடணும்கிறதை நான் முடிவு செஞ்சுப்பேன். யாரும் தலையிட முடியாதுன்னு துணிச்சலா சொன்னாங்க” என்றாள் வினு.
“அவங்க கல்யாணம்கூட ரொம்ப போல் டான முடிவுதான். பாகிஸ்தான் கிரிக்கெட் பிளேயர் ஷோயிப் மாலிக்கை கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க.”
“ஆமா வித்யாக்கா... அதுக்கு முன்னால அவங்க இன்னொரு போல்டான முடிவை எடுத்திருக்காங்க. தன்னை டென்னிஸ் விளையாடக் கூடாதுன்னு சொன்ன காதலரைக் கைவிட்டிருக்காங்க. பெண்கள் விளையாட்டுத் துறைக்கு வர்றதே அரிதுதான். அதுலயும் நம்பர் ஒன்னாகிறது ரொம்ப கஷ்டம். அந்த வகையில சானியா சிறந்த விளையாட்டு வீராங்கனை. அவங்க பயிற்சி கொடுத்தா, இன்னும் நிறைய பெண்கள் டென்னிஸுக்கு வர வாய்ப்பிருக்கு” - விருப்பம் சொன்னாள் விமல்.
‘`வித்யாக்கா... முந்திரி பக்கோடா சூப்பர். பேசிக்கிட்டே சாப்பிட்டதுல எவ்வளவு உள்ளே போச்சுன்னே தெரி யலை...’’ என்றபடி தொடர்ந்தாள் வினு.
“கேரளாவுல பிஷப் பிராங்கோ முலக்கல் பாலியல் வன்கொடுமை செஞ்சதா வழக்குப் பதிவு செஞ் சாங்களே... செஷன்ஸ் நீதிமன்றம் அவரைக் குற்றமற்றவர்னு சொல்லி விடுதலை செஞ்சிருக்கு. வன்கொடு மைக்கு ஆளான அருட்சகோதரிக்கு ஆதரவா அஞ்சு அருட்சகோதரிகள் போராட்டத்துல இறங்கியிருக்காங்க. அவங்களுக்கு சோஷியல் மீடியாவுல ஆதரவு பெருகிட்டு வருது. பார்வதி,
கீது மோகன்தாஸ் உட்பட நடிகைகள் பலரும் கடிதம் எழுதி சோஷியல் மீடியால வெளியிட்டு அவங்களுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க.”
“கேரள நடிகைகள் இவங்களுக்கு மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட ஒரு நடிகைக்காகவும் குரல் கொடுத்தாங்க. ‘நடிக்கறது எங்க தொழில். அதே சமயம், சமூகத்துல ஒருத்தியா அநியாயங்களுக்கு எதிரா குரல் கொடுக்கத் தயங்க மாட்டோம்’னு கேரள நடிகைகள் எப்பவுமே செம தில்லுதான்’’ என்று பெருமிதப்பட்டாள் விமல்.
“ஆமா விமல். யாருப்பா `ஷ்யாம் சிங்கா ராய்' படம் பார்த்தது?”
“நான் பார்த்தேன் வித்யாக்கா. தேவதாசியை மையமா வெச்சு சொல்லப்பட்ட கதையா இருந் தாலும் சாதி, சமூகத்துல நிலவுற ஏற்றத் தாழ்வு களையும் கேள்வி கேட்குது இந்தப் படம்.
தமிழ்நாட்டுல நூறு வருஷங்களுக்கு முன்னாடியே தேவதாசி முறையை எதிர்க்க ஆரம்பிச்சிட்டாங்க. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் ராமாமிர்தத்துக்கும் தேவதாசி முறையை ஒழிக்கப் போராடினதுல முக்கியப் பங்கு இருக்கு. அவங்களுக்கு முன்னாடியே தேவதாசி முறையை ஒழிக்கணும்னு முற்போக்கு ஆண்கள் சிலரும் முயற்சி செஞ்சிருக்காங்க. தமிழ்நாட்டுல தேவதாசி தடைச் சட்டம் வந்து அறுபது வருஷங்களாச்சு. ஆனா, மற்ற மாநிலங்கள்ல இருபது வருஷங்களுக்கு முன்னாடி வரை தேவதாசிகள் இருந்திருக்காங்க.
என்னைப் பொறுத்தவரை இது முக்கியமான படம்னு சொல்வேன். மறுஜென்மம் மாதிரியெல்லாம் காட்டாம அப்படியே சொல்லியிருக்கலாம். வசனங்கள் ரொம்ப ஷார்ப்பா இருக்கு. நானியும் சாய் பல்லவியும் நல்லா நடிச்சிருக்காங்க. எல்லோருமே பார்க்க வேண்டிய படம் இது” என்றாள் வினு.
“பார்த்துடுவோம். ஏம்மா, சாய் பல்லவியை உருவகேலி செஞ்சதா கேள்விப்பட்டேன்...”
“ஆமா வித்யாக்கா. இதெல்லாம் நாகரிகமே இல்லாத விஷயம். அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிடணும். கிளம்பலாமா விமல்?”
“டின்னர் முடிச்சிட்டுப் போகலாம்” என்றார் வித்யா.
“இல்ல வித்யாக்கா, அவசர வேலை. நீங்க என்ஜாய் பண்ணுங்க” என்று வினு சொல்ல, மீண்டும் ஒருமுறை வாழ்த்து சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.
- அரட்டை அடிப்போம்...
****
வினுவின் வித்தியாசமான தகவல்!
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மியாமியை நிறுவியவர் ஒரு பெண். அவரது பெயர் ஜூலியா டட்டில். ’மியாமியின் தாய்’ என்ற பாராட்டுப் பெயரும் இவருக்கு உண்டு,
விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!
வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக இந்த இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.
இந்த இதழ் கேள்வி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்து என்ன? இதனால் சமூக, அரசியல் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?
எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:
வினு விமல் வித்யா, அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி:
avalvikatan@vikatan.com
கடைசி தேதி: 8.2.2022
சென்ற இதழ் கேள்வி...
மூன்றாவது (பூஸ்டர்) டோஸ் தடுப் பூசிக்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. நீங்கள் தயாரா? உங்கள் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் என்ன?
ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது
பகவான் கூட ‘விநாசாய சதுஷ்க்ருதாம்’ என தீயவர்களை மட்டுமே அழிக்கிறார். இந்த கொரோனாவால், பெற்றவர்களை இழந்து அநாதையான பிள்ளைகள் எத்தனை பேர்? நிர்மூலமான குடும்பங்கள் எத்தனை? என் தோழி, குழந்தைக்கு புண்யாவாசனம் செய்த ஆறாம் மாதம் திடகாத்திர கணவர் போய்விட்டார். மனித வாழ்க்கையில் மரணம் தவிர்க்க முடியாததுதான் எனினும் இப்படி ஊரையடித்து உலைவாயில் போட்டுக்கொள்ளும் நோயை இப்போது தான் பார்க்கிறோம். நம் நல்ல நேரம், தடுப்பூசி கண்டுபிடித்தாகி விட்டது. வீட்டு வாசலுக்கே ஊசியைக் கொண்டு வந்துவிட்டார்கள். முகக்கவசம், சானிடைசர், சமூக இடைவெளி போன்றவற்றோடு பூஸ்டரையும் செலுத்திக்கொண்டு கொரோனாவுக்கெதிரான போரில் வெல்வோம்.
- கீதா பாலு, ஹைதராபாத்
பூஸ்டர் டோஸுக்குத் தயாரா என்பதற்கு பதில் சொல்வது இருக்கட்டும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனாவின் வெவ்வேறு வகையான திரிபுகள் வராது என யாராலும் சொல்ல முடியுமா? இப்படியே ஒவ்வோர் அலையாக வந்துகொண்டே இருந்தால் இதற்கு என்னதான் முடிவு? மக்கள் ஆயுசு முழுவதற்கும் வீட்டிலேயே முடங்கியிருக்க முடியுமா? இதற்கு நிலையானதொரு தீர்மானத்தை மருத்துவ உலகம் கண்டுபிடித்து மக்களை நிம்மதியாக வாழச் செய்யுமா?
- நிர்மலா ராவ், சென்னை-73
தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வருகிறது என்றால் தடுப்பூசி தரமானதாக இல்லை. அவசரகதியில் கொண்டுவரப்பட்டது என்ற தோற்றம் ஏற்படுகிறது. இருந்தாலும் ஓரளவு செயல்புரிகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆர்வத்தில் இருந்த வேகம் ஊசியின் தரத்தை உயர்த்தும் ஆராய்ச்சியில் இல்லை என்பதே உண்மை. ஆராய்ச்சி நிறுவனங்கள் ஊசி மருந்தின் தரத்தை உயர்த்தும் செயலில் ஈடுபட வேண்டும்.
- ச.மதுஷன்மதி, திருநாகேஸ்வரம்
பூஸ்டர் டோஸுக்கு தயாராகவே இருக் கிறேன். ஆனாலும் அலோபதி ஊசிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் பாரம்பர்ய சித்த, ஆயுர்வேத மருத்துவத்துக்குக் கொடுக் காதது ஏன் என்ற வருத்தம் எனக்குண்டு. ஹைதராபாத்திலும் மதுரையிலும் கண்டு பிடித்த கொரோனாவுக்கான லேகிய மருந்தை அரசு ஊக்கப்படுத்தாதது ஏன்? தற்காப்பு அலோபதி மருந்தைக் கொடுக்கிற அரசு, பக்க விளைவுகள் இல்லாத சித்த, ஆயுர்வேத மருந்துகளையும் ஆதரிக்க வேண்டும்.
- மல்லிகா அன்பழகன், சென்னை-78