
- சஹானா
பனகல் பார்க் அருகில் இருக்கும் கேரள ரெஸ்டாரென்ட் ஒன்றில் வினு, விமல், வித்யா ஆகிய மூவரும் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தார்கள்.
“எக் கறி ஒரு பிளேட் சொல்லிட்டியா, வினு? கேரளாவுல அது ரொம்ப ஸ்பெஷல்!”
“உங்களுக்காக முதல் ஐட்டமா சொல்லிட் டேன் வித்யாக்கா. முட்டைன்னு சொன்னதும் நினைவுக்கு வருது... நம்ம நாட்டுல உணவு அவங்கவங்க விருப்பம் சார்ந்தது. எந்த உணவும் உயர்ந்ததும் இல்ல, தாழ்ந்ததும் இல்ல. அடுத்தவங்க உணவு விஷயத்துல தலை யிட யாருக்கும் உரிமை இல்லைங்கிறது புரிய மாட்டேங்குது. இதுல அரசாங்கம், மதம் எல்லாம் தலையிடறதை என்னன்னு சொல்றது?”
“இப்ப என்ன ஆச்சு வினு?”
“கர்நாடகாவுல சில மாவட்டங்கள்ல பள்ளிக்குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறை பாட்டோடு இருக்காங்க. அதுக்காக மதிய உணவுல முட்டை கொடுக்கச் சொல்லியிருக்கு மாநில அரசு. ஆனா, லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த சாமியார்கள் முட்டை கொடுக்கக் கூடாதுன்னு போர்க் கொடி தூக்கினாங்க. இதைப் பார்த்து, பள்ளி மாணவர்கள் கொதிச்சுப் போயிட்டாங்க. சாமியார்களுக்கு எதிரா போராடினாங்க. அந்தப் போராட் டத்துல ஒரு மாணவி, `கடவுளும் குழந்தையும் ஒண்ணுன்னு சொல்றிங்க. இந்தக் கடவுள்கள் எல்லாம் ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு இருக்கோம். எங்களுக்கு முட்டை அவசியம் தேவை. கடவுள்களோட விருப்பத்தை நிறை வேத்துங்க. பள்ளியில முட்டை சாப்பிட அனுமதிக்கலைன்னா, உங்க ஆசிரமத்துல வந்து முட்டை சாப்பிடுவோம்'னு ரொம்பத் தெளிவா, அழகா பேசினாங்க!”
“கிரேட்... உரிமை மறுக்கப்படும்போது அதைப் போராடிப் பெறணும்கிற எண்ணம் இந்த வயசுலேயே வந்திருக்குங்கிறதுதான் முக்கியமான விஷயம்!”
“ஆமா வித்யாக்கா. முட்டை சாப்பிடறவங் களுக்கு முட்டையும், அதைச் சாப்பிடாதவங் களுக்கு வாழைப்பழமும் கொடுக்கறாங்க. அப்புறம் உத்தரகாண்ட் பள்ளியில தலித் பெண் சுனிதா தேவி உணவு சமைச்சதைச் சாப்பிட மாட்டோம்னு சொல்லிருக்காங்க சில மாணவர்கள். சுனிதாவுக்குப் பதிலா வேற ஒருத்தரைச் சமைக்க வச்சிருக் காங்க. அவங்க சமைச்சதை, தலித் மாணவர்கள் சாப்பிட மாட்டோம்னு சொல்லிட் டாங்க. இன்னும் நூறு வருஷம் கழிஞ்ச பின்னால யாவது இந்த சாதி மனப்பான்மை மறை யுமான்னு சுனிதா கேட்க றாங்க. ரொம்ப நியாயமான கேள்வி. பதில்தான் யார் கிட்டேயும் இல்ல” என்று வருத்தத்தோடு சொன்னாள் விமல்.
மூவரும் சிறிது நேரம் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வித்யா மீண்டும் பேச்சை ஆரம்பித்தார். “யூடியூப்ல பார்த்தே என் பக்கத்து வீட்டுப் பொண்ணு விதவிதமா சமைக்கிறா தெரியுமா?”
“யூடியூப் பார்த்து சமைக்கலாம், கோலம் போடலாம், தைக்கலாம்... ஆனா, பிரசவம் பார்க்கறது எல்லாம் டூமச் வித்யாக்கா. ராணிப்பேட்டைக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்துல வசிக்கிற லோகநாதன் மரச் செக்கு எண்ணெய் வியாபாரம் பண்ணிட் டிருக்கார். மனைவி கோமதிக்குப் பிரசவவலி வந்தவுடனே தன்னோட அக்காவை உதவிக்கு வச்சுக்கிட்டு, யூடியூப் பார்த்துக் குழந்தையை வெளியில எடுத்திருக்காரு. குழந்தை இறந்துருச்சு. கோமதிக்கும் ரத்தப் போக்கு அதிகமாயிருச்சு. அப்புறம் பயந்து கிட்டு அரசு மருத்துவமனையில சேர்த்திருக்காரு. இந்தக் காலத்துலயும் ஏன் இப்படி இருக்காங்கன்னே புரியல. அடுத்தவங்க உயிர்னா விளையாடிப் பார்க்க ஆசை வருது போல...” என்று கோபப் பட்டாள் வினு.
“மனைவிகளையும் சொல்லணும், முட்டாள்தனமா கணவர்கள் எடுக்கற முடிவுக்கு ஏன் ஒத்துழைக்கிறாங்க? இப்ப ஒரு குழந்தையோட உயிர் போயிருச்சு. இதுக்கு யார் பொறுப்பு?” என்றாள் விமல்.
“இதையெல்லாம் தடுக்க கடுமையான சட்டம் போடணும். நம்ம நாட்டுல இந்த மாதிரி விஷயங்களுக்குப் பஞ்சமே இல்ல... எல்லா விஷயங்களையும் சிலர் நம்பிட்டுதான் இருப்பாங்க. இப்பப் பாரு, அன்னபூரணின்னு ஒரு சாமியார் வந்திருக்காங்க. அவங்க கால்ல விழுந்து புரளும் மக்களும் இருக்காங்க”-ஆதங்கத்துடன் சொன்னார் வித்யா.
“ஆமா, அன்னபூரணிதான் இந்த வாரத் தோட வைரல். அவங்க நடத்தை அப்படி இப்படின்னு எல்லாம் எல்லோரும் எழுதிட்டு இருக்காங்க. இப்ப இருக்கிற சாமியாருங் களோட ஆரம்ப வாழ்க்கை எப்படி இருந்துச் சுன்னு தெரியாது. இந்தம்மா ரீசன்ட்டா டிவியில் வந்ததாலதான் இவ்வளவு எதிர்ப்பு களைச் சம்பாதிச்சிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை போலிச் சாமியார்கள்ல ஆண், பெண் பேதமெல்லாம் பார்க்க மாட்டேன். மக்களை ஏமாத்துறவங்களை பெண்ணுங்கறதுக்காக எல்லாம் ஆதரிக்க முடியாது. அதே நேரம் அவங்களோட கடந்த கால வாழ்க்கையை வச்சு, மோசமாவும் பேசக் கூடாது. என்ன சொல்றீங்க வித்யாக்கா?”
“எனக்குக் கடவுள் நம்பிக்கையிருக்கு வினு. ஆனா, கடவுள்கிட்ட நேரடியாவே என்னால பேச முடியும். இப்படி நடுவுல யாரும் எனக்குத் தேவையில்ல. மக்களோட அறியாமையை, கஷ்டத்தை வச்சு சம்பாதிக்க நினைக்கக் கூடாது.”
“வெரிகுட் வித்யாக்கா. உங்களுக்கு இன்னொரு முட்டைக் கறி சொல்லட்டுமா?”
“போதும் விமல். இந்த வயசுல முட்டை யெல்லாம் லிமிட்டாதான் எடுத்துக்கணும்.”
“வினு, ஆப்கானிஸ்தான் பெண்களோட நிலைமை நாளுக்கு நாள் மோசமாயிட்டே இருக்கு, பார்த்தியா?”
“தாலிபன் ஆட்சியால முதல்ல பாதிக்கப் படறது பெண்கள்தானே விமல். இப்போ என்ன சொல்லிருக்காங்க?”
“பெண்கள் நீண்ட தூரம் போகணும்னா ஆணோட துணையில்லாம போகக் கூடாதாம். 72 கி.மீ வரைக்கும் தனியா போகலாம். அதுக்கு மேல போகக் கூடாதுன்னு தாலிபன் நன்னடத்தை மற்றும் தீமைத் தடுப்பு அமைச்சகம் சொல்லிருக்கு.”
“இதுக்கெல்லாம் ஒரு அமைச்சகமா... அரபு நாடுகள்ல பல வருஷமா போராடி, இப்ப தான் இந்த மாதிரி கட்டுப்பாடுகளை நீக்கிட்டு வர்றாங்க... மறுபடியும் முதல்லயிருந்தா? முடியல விமல்...” என்ற வித்யா, மூவருக்கும் லெமன் ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டுத் தொடர்ந்தார்.
``வங்கதேசத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ரோஜினா பேகம். ரெண்டு குழந்தைங்க. கணவன் இல்ல. பிச்சை யெடுத்து வாழ்க்கையை ஓட்டிட்டு இருந்தாங்க. பிச்சையெடுக்கிறது பிள்ளைகளுக்குச் சங்கடமா இருந்திருக்கு. அதனால ரோஜினா ஒருத்தர்கிட்ட மோட்டார் ரிக்ஷா ஓட்டக் கத்துக் கிட்டாங்க. ஆறு மாசத்துல நல்லா ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க நிலையைப் பார்த்துட்டு, யாரோ ஒருத்தர் ரிக்ஷா ஓட்டுற வேலையைக் கொடுத்திருக்கார். ஆரம்பத்துல இவங்க ரிக்ஷாவுல மக்கள் ஏறலையாம். ஒவ்வொருத்தர்கிட்டேயும் பேசி, சம்மதிக்க வச்சு, ஓட்டிட்டுப் போனாங்களாம். இப்போ ரோஜினாவைத் தேடி வந்து பயணம் செய்யறவங்க அதிகமாயிட்டாங்களாம்.
`இப்போ என்னை யாரும் பிச்சைக் காரியா நினைக்கிறதில்ல. என் உழைப்பு எனக்கு ஒரு மதிப்பையும் வாழறதுக்கு வழியையும் ஏற்படுத்திக் கொடுத் திருக்கு'ன்னு ஹேப்பியா சொல்றாங்க. அவங்க சம்பாதிக்கிறது இருநூறோ என்னவோ தான். ஆனா, சொந்த உழைப்பு தரும் நிம்மதி எதுலயும் இல்லைன்னு சொல்றாங்க.”

“சூப்பர்! கேட்கும்போதே தன்னம்பிக்கை அதிகமாகுது. ஏதாவது படம் பார்த்தீங்களா வித்யாக்கா?”
“என்னோட ஆல் டைம் ஃபேவரைட் ஹீரோ கபில்தேவ். அவரோட பயோபிக் 83 ரிலீஸானதும் பார்த்துட்டேன். அப்படியே அந்தக் காலத்துக்குப் போயிட்டு வந்துட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. படம் பார்க்கிறவரைக்கும் ரன்வீர் சிங்கை கபில்தேவா என்னால நினைக்க முடியல. படம் ஆரம்பிச்ச பிறகு, ரன்வீர் நம்மள ஏத்துக்க வச்சிடறார். இந்தியாவுக்கு ஃபர்ஸ்ட் வேர்ல்டு கப் வாங்கிக் கொடுத்த மேட்ச் காட்சிகள்... செம்ம!”
“வித்யாக்கா, கபில்தேவ் தன்னோட கிரிக்கெட் வாழ்க்கையில `நோ பால்’ போட்டதே இல்லையாம். அதே மாதிரி காயமும் பட்டதில்லையாம்.
கிரேட் கிரிக்கெட்டர். நேர்த்தி, நேர்மை, உழைப்பு, விளையாட்டுல நாகரிகம்னு கபில்தேவ் எல்லாருக்கும் பிடிச்சவர்தான். நானும் விமலும் கூடப் பார்க்கணும்னு சொல்லிட்டிருந்தோம்.”
“சீக்கிரம் பார்த்துடுங்கப்பா.”
“சரி, மறுபடியும் கொரோனா கட்டுப்பாடுகள் ஆரம்பிச்சுடுச்சே. புக் ஃபேர் கேன்சல், பொருட்காட்சி கேன்சல், தியேட்டர் உள்ளிட்ட இடங்கள்ல 50 சதவிகிதம்தான் அனுமதிக்கணும்னு கண்டிஷன்ஸ் தெறிக்குதுதே. இந்த வருஷமும் அவ்வளவுதானாக்கா?''
``அட, நானே சொல்லணும்னு நினைச்சேன். அங்க... இங்கனு அலையாம, பார்த்து பத்திரமா நடந்துக்கோங்க. ஒமிக்ரான், டெல்டா ரெண்டு வகை கொரோனாவுமே பரவ ஆரம்பிச்சிருக்கு. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நினைச்சாலே பயமாத்தான் இருக்கு.”
``ஆமாக்கா... சீனாவுல கூட ஏகப்பட்ட கட்டுப் பாடுகள் விதிச்சிருக்காங்க. மக்கள், உணவுப் பொருள்களுக்காக பல மணி நேரம் க்யூவுல நின்னுகிட்டிருக்கிற காட்சிகளைப் பார்க்கும்போது பரிதாபமாவும் இருக்கு. பதற்றமாவும் இருக்கு!'' என்றால் வினு.
``அந்த நிலை, நமக்கும் வந்துடாம இருக் கணும்னா... எல்லாரும் மாஸ்க், சமூக இடைவெளி எல்லாத்தையும் சரிவர கடைப்பிடிக்கணும். அதேபோல, அந்த நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சினு எல்லாத்துக்கும் போய் நிக்கக்கூடாது. குறிப்பா, துக்கவீடுகள்லதான் ஆபத்தே நிறைஞ்சிருக்குதுனு சொல்றாங்க. ரெண்டாவது அலையிலகூட, துக்க வீடுகளுக்குப் போனவங்க மூலமாத்தான் கொத்துக் கொத்தா கொரோனா பரவுச்சு. எனக்குத் தெரிஞ்சே, ஒரே குடும்பத்துல அண்ணன், அப்பா, தம்பி, அக்கானு பறிகொடுத்த சில பேர் இருக்காங்க. சம்பவம் நடந்த அந்த நாள்கள்ல இருந்து, இப்ப வரைக்கும் அவங்களால அதுல இருந்து மீள முடியல. அதுமாதிரியான மீளாத்துயரத்தை நாம, நம்ம குடும்பங்களுக்குக் கொடுக்காம இருக்கிறது தான் இப்ப முக்கியம்.''
“சரியாச் சொன்னீங்க வித்யாக்கா'' என்று விமல் ஆமோதிக்க.
``ரொம்ப லேட் ஆயிருச்சு. அடுத்த மீட் நேர்லயா... ஆன்லைன்யானு பிறகு முடிவு பண்ணுவோம்” என்று வினு சொல்ல... மூவரும் புறப்பட்டார்கள்.
- அரட்டை அடிப்போம்...
****
விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!
வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக இந்த இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பி யிருக்கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.
இந்த இதழ் கேள்வி
உங்களுக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா... `ஆமாம்’ என்றால் எப்படிப்பட்ட புத்தகத்தை விரும்பிப் படிப்பீர்கள்?
எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:
வினு விமல் வித்யா, அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com
கடைசி தேதி: 10.1.2022
சென்ற இதழ் கேள்வி...
`குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம் உங்களுக்கு உண்டா? `ஆம்’ என்றால் கதைகளை அப்படியே கதைகளாகச் சொல்வீர்களா? அவற்றை உண்மை என்பதுபோல மாற்றிச் சொல்வீர்களா? எது சரி என்று நினைக்கிறீர்கள்? உங்கள் எண்ணங் களை எழுதுங்களேன்' என்று கேட்டதற்கு வாசகி களின் பதில்கள்...
ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது
என் பேத்தியும் பேரனும் கதை கேட்காமல் ஒரு நாள்கூட தூங்கியது கிடையாது. கதை கேட்டு முடித்ததும் கதையில் வந்த பாத்திரங்களின் சோகமோ, மகிழ்ச்சியோ, துக்கமோ அவர்களைப் பாதித்ததே இல்லை. இன்றைய கதையில் நான்கு ரோபோ வர வேண்டும்... அவற்றில் இரண்டு ரோபோ, மக்களுக்கு நல்லதும் இரண்டு கெட்டதும் செய்யும் என்பது போல வர வேண்டும் என்று சொல்வதோடு எப்படி அந்தக் கதையை முடிக்க வேண்டும் என்பது வரை இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துவிட்டுத்தான் கதை கேட்கவே ஆரம்பிப்பார்கள். இந்தக் காலக் குழந்தைகளின் ஐ.க்யூ ரொம்பவே அதிகரித்துவிட்டது. எனவே, நாம் எப்படிக் கதை சொன்னாலும் அதைக் கதை என்று தெரிந்தேதான் கேட்கிறார்கள்.
- பா.நிவ்யா, மன்னார்குடி
ஒன்பது வயது பேரன் அமெரிக்காவில் இருக்கிறான். தினமும் அவன், என்னை வாட்ஸ் அப்பில் அழைத்து கதை கேட்டுவிட்டுத்தான் தூங்குவான். அவனுக்கு பஞ்ச தந்திர கதைகள், நீதிக்கதைகள், தெனாலிராமன், பீர்பால், பரமார்த்த குரு, முல்லா கதைகளை, இன்றைய வாழ்க்கையோடு ஒட்டி வருவதுபோல் மாற்றிச் சொல்வேன். குழந்தைகள் இந்த வயதில் கேட்கும் கருத்துகள் அவர்கள் மனதில் நன்கு பதியும் என்பதால் அன்பு, பாசம், பெரியவர்களுக்குக் கீழ்ப்படிதல், அனுசரித்துப் போதல் போன்ற நிகழ்ச்சிகள் வருமாறு சொல்வேன். குழந்தை களுக்கு தன்னம்பிக்கை, தைரியம், துணிவு, சந்திக்கும் சூழ்நிலைக்கேற்ப தன்னை தயார் படுத்திக் கொள்ளுதல் போன்ற கருத்துகள் வருமாறு சொல்லி, அவர்களை இந்த வயதில் நெறிப்படுத்துவது பெரியவர்களின் கடமை. பாட்டியாகி நான் அவனுக்குத் தினமும் கதை கூறுவதால் எனக்கும் என் பேரனுக்கும் உள்ள இடைவெளி குறைந்து நெருக்கம் உண்டாகிறது.
எஸ்.சரஸ்வதி, திருச்சி - 2
வினுவின் வித்தியாசமான தகவல்!
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே (1914-ம் ஆண்டில்), ஃப்ளோரன்ஸ் பார்பார்ட் என்ற பெண்மணி, நவீன மின்சார குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடித்துவிட்டார். அவர்தான் 1900-ம் ஆண்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட, தெருக்களைச் சுத்தம் செய்யும் இயந்திரத்துக்கான காப்புரிமையையும் பெற்றவர். அவர் அந்த இயந்திரத்தை அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி விற்றார்.