ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வினு விமல் வித்யா: மனைவியை விற்ற 17 வயது கணவன்... நாம் எங்கிருக்கிறோம்?

ராஷ்மி ராக்கெட், அஸ்வினி, ஜெய் பீம்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஷ்மி ராக்கெட், அஸ்வினி, ஜெய் பீம்

மகாபலிபுரம் பக்கத்துல குடியிருக்காங்க. ஊசி, பாசி விற்கிறவங்க. அன்னிக்கு பஸ்ஸுக் காக வெயிட் பண்ணிட்டிருந்திருக்காங்க.

தீபாவளி பட்சணங்கள் செய்வதில் பிஸியாக இருந்த வித்யா வீட்டுக்கு வினுவும் விமலும் வந்தார்கள். மகிழ்ச்சி யுடன் வரவேற்ற வித்யா, மைசூர்பாவும் முறுக்கும் கொடுத்தார்.

“நம்ம செய்யுறதை டேஸ்ட் பார்க்க யாரும் இல்லையேன்னு கவலையா இருந்துச்சு. நல்லவேளை வந்தீங்க” என்றார் வித்யா.

“கரும்புத் தின்னக் கூலியா... தீபாவளி வரை இங்கேயே தங்கி, நீங்க செய்யறதையெல்லாம் டேஸ்ட் பார்க்கட்டுமா...” என்று கேட்டாள் வினு.

“தாராளமா தங்கு. நான் செய்யறதை அடுத்தவங்க நல்லாயிருக்குன்னு சொல்ற போது கிடைக்குற சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்ல வினு. பட்சணத்துல பிஸியா இருந்ததால நாட்டுநடப்புகளைக் கவனிக்கல... வெளியில என்ன நடக்குதுப்பா?”

“அஸ்வினிதான் இப்போ டிரெண்டிங்ல இருக்காங்க!” என்றாள் வினு.

“யாரும்மா அஸ்வினி?”

“மகாபலிபுரம் பக்கத்துல குடியிருக்காங்க. ஊசி, பாசி விற்கிறவங்க. அன்னிக்கு பஸ்ஸுக் காக வெயிட் பண்ணிட்டிருந்திருக்காங்க. கையைக் காட்டியும் பஸ் நிக்காம போயிருச்சு. அந்த வருத்தத்தோட பசியும் வந்துருச்சு. கோயில் அன்னதானத்துல சாப்பிடலாம்னு வந்திருக்காங்க. அங்குள்ள சிலர் அவங்களை ஓரமா நிக்கச் சொல்லிட்டு, மீதியிருந்தா சாப் பிடலாம்னு சொல்லியிருக்காங்க. கீழே உட்கார்ந்து சாப்பிட்டுக்கறேன்னு அஸ்வினி சொல்லிருக்காங்க. ஆனா, குச்சியால அடிச்சுத் துரத்திவிட்டுட்டாங்க” என்று வினு சொல்ல வும், “ஆண்டவன் சந்நிதியிலகூட எல்லாரும் சமமில்லையா...” என்று அதிர்ந்தார் வித்யா.

“பஸ்ஸும் நிக்கல, சாப்பாடும் கிடைக்கல. அஸ்வினி தன்னோட ஆதங்கத்தைக் கொட்டி னாங்க. ‘நாங்களும் மனுஷங்கதானே... நாங்க கை காட்டினா ஏன் பஸ் நிக்கல? நாங்க சாப்பிடப் போனா, ஏன் சாப்பாடு கிடைக்கல? நாங்களும் ஓட்டுப் போட்டுதானே ஆட்சியில உட்கார வைக்கிறோம்... மிச்சம்மீதி கொடுக்கறதுக்கு நாங்க என்ன அவங்க வீட்டுக் கல்யாணத்துக்கா போயிருக்கோம்? ஏழைகளுக்கு அரசாங்கம் போடுற அன்னதானம் இது. வசதியானவங்க ஹோட்டல்லகூட சாப்பிட்டுக்குவாங்க. எங் களுக்கு நிரந்தர வருமானம் வராது. ஆனாலும், அன்னிக்குச் சாப்பிடாமலே போயிட்டோம்’னு சொன்னாங்க.”

“அநியாயம் வினு. கடவுள் முன்னால எல்லாரும் சமம்தானே... அன்னதானம்கிறதே இல்லாதவங்களுக்குக் கொடுக்கறதுதானே... இலையில உட்கார்ந்தவங்கள அடிச்சுத் துரத்த இவங்க யார்?” என்றாள் விமல்.

“இந்த விஷயம் வெளியில வந்துடுச்சு வித்யாக்கா. அஸ்வினி அவ்வளவு தெளிவான சிந்தனையோட பேசறாங்க. அவங்க வீடியோ வைரலாச்சு. அது ஓயறதுக்குள்ள அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவோடு அஸ்வினி உட்கார்ந்து சாப்பிடற வீடியோ வெளி வந்துருச்சு. உரிமைக்குரல் எழுப்பின அஸ்வினிக்கு நியாயம் கிடைச்சிருச்சுனு அந்த வீடியோவும் இப்போ வைரல். இப்போ எங்கே பார்த்தாலும் அஸ்வினி பேட்டி கொடுத்துட்டிருக்காங்க.”

“இதோட நின்னுடக்கூடாது. அவங்க வாழ்க்கை மேம்படணும். அரசாங்கம் கட்டிக் கொடுத்த வீடுகள்ல அவங்க குடியிருந்தாலும் தண்ணி இல்ல, கழிவறை இல்ல. குழந்தைங் களைப் படிக்க வைக்கிறதுலயும் சிக்கல் இருக்குன்னு சொல்றாங்க. ஆனா, ‘படிப்புதான் எங்க நிலையை மாத்தும்’னு உறுதியா நம்புறாங்க. அந்தப் பெண்ணோட தெளிவு என்னை ஆச்சர்யப்படுத்திருச்சு. இங் கிலீஷ், பிரெஞ்சு எல்லாம் பேசுற அஸ்வினியை ‘ஆஹா’ன்னு பார்த்துட்டே இருக்கலாம்” என்றாள் விமல்.

``கிரேட்” என்ற வித்யா, இருவருக்கும் சூடாக காபி கொடுத்தார்.

“ஸ்விகி நிறுவனத்துல வேலை செய்யுற பெண் களுக்கு பீரியட்ஸ் நேரத்துல 2 நாள்கள் லீவு தர்றதா அறிவிச்சிருக்காங்க. ஏற்கெனவே ஸொமேட்டோ வும் இப்படிப் பண்ணிருக்காங்க. 20 பர்சென்ட் பெண்கள் பீரியட்ஸ் நேரத்துல வலியும் வேதனையும் அனுபவிக்கிறாங்க. அதுக்காகவே பலரும் வேலையைத் தொடர முடியாமப் போயிருது. இந்த லீவ் பெண்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். இதை மத்த நிறுவனங்களும் அமல்படுத்தினா, பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பு அதிகமாகும்.”

“கரெக்ட் விமல். அதிர்ச்சி சம்பவம் ஒண்ணு இருக்கு. ஒடிசாவில 17 வயசுப் பையன், கல்யாணம் ஆன ரெண்டு மாசத்துல மனைவியை ராஜஸ்தான்ல ஒருத்தருக்கு வித்துட்டான். பெண் வீட்டுக்காரங்க சந்தேகப் பட்டு புகார் கொடுத்ததுல, அந்தப் பெண்ணை ராஜஸ்தான்லேருந்து மீட்டிருக்கு காவல்துறை. 1.80 லட்சம் ரூபாய்க்கு வித்திருக்கான். மைனர்ங்கிறதால அவனைச் சிறுவர் சீர் திருத்தப்பள்ளியில போட்டிருக்காங்க. இந்தச் சின்ன வயசுல அவனுக்குப் புத்தி எப்படி வேலை செஞ்சிருக்கு? ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. வறுமையும் அறியாமையும் இப்படியெல்லாம் செய்ய வைக்குது” வருத்த மும் கோபமுமாகச் சொன்னார் வித்யா.

“மீட்கப்பட்ட அந்தப் பெண்ணை செங்கல் சூளையிலயும் வீட்டுலயும் கொத்தடிமையா வேலை செய்ய வச்சிருக்காங்க...” கூடுதல் தகவல் சொன்னாள் விமல்.

ராஷ்மி ராக்கெட், அஸ்வினி, ஜெய் பீம்
ராஷ்மி ராக்கெட், அஸ்வினி, ஜெய் பீம்

“எல்லாம் காலக்கொடுமை. அப்புறம், ஜப்பான் இளவரசி மாகோ, தன் நினச்சபடியே தன் காதலனை கைப்பிடிச்சிட்டாங்க தெரியுமா... அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், சாதாரண நபரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னா எத்தனை தடைகளைத் தாண்டி வந்திருக்கணும். நாலு வருஷத்துக்கு முன்னாலேயே நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சு. கல்யாணத்துக்காகப் பொறுமையா காத்திருந் தாங்க. இந்த இடைப்பட்ட காலத்துல காதலன் கொமுரோ சட்டப்படிப்பையும் முடிச்சிட்டார். இதுக்கு நடுவுல கொமுரோ வோட அம்மா மேல நிதி மோசடி வழக் கெல்லாம் போட்டாங்க. இப்படியெல்லாம் பிரச்னைகள் வந்தா, சாதாரணமான வீடுகள்ல கூட கல்யாணம் பண்ணி வைக்க யோசிப் பாங்க. இதனால மாகோவுக்கு ஸ்ட்ரெஸ் வேற வந்துருச்சு. ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டாங்க. ஆனாலும், கல்யாணம் பண்ணிக்கிறதுல உறுதியா இருந்தாங்க. ‘மகிழ்ச்சியோ துன்பமோ ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா இருந்து, வாழ்க்கையை எதிர்கொள்வோம்’னு சொன்னாங்க. இந்தக் கல்யாணத்துக்காக அரச பட்டம், அவங்க கொடுத்த பணம் எல்லாத் தையும் வேணாம்னு சொல்லிட்டாங்க” என்றாள் வினு.

“வாவ்! சரி... ஏதாவது படம் பார்த்தீங்களா?”

”ஆமா, வித்யாக்கா. டீஸர்லேயே எதிர் பார்ப்பை ஏற்படுத்தின ‘ஜெய் பீம்’ பார்த்தேன். உண்மைச் சம்பவங்களை அடிப்படையா வெச்சு, நேர்த்தியா எடுக்கப்பட்ட படம். பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்துக்காக இடம் பெயர்ந்து வர்றாங்க. வயல்ல எலி பிடிக் கிறாங்க. குடியிருப்புகளுக்குள்ள வரும் பாம்பு களைப் பிடிச்சு காட்டுக்குள்ள விடுறாங்க. செங்கல் சூளை, கூலி வேலைன்னு ஓடா உழைச்சு கிடைக்கிறதை வெச்சு வாழறாங்க. ஆனா, மத்தவங்க செய்யற குற்றங்களையெல் லாம் இவங்க மேல பொய் வழக்கா போட்டு, ஜெயில்ல தள்ளுது இந்த மோசமான சமூக அமைப்பு. அப்படி போலீஸால டார்ச்சருக்கு உள்ளான மூணு பேர் காணாமலே போயிடு றாங்க. கணவனையும் மத்த ரெண்டு பேரையும் காப்பாத்தறதுக்காக அவர் மனைவி, சமூக ஆர்வலர் கல்யாணி (பிரபா கல்விமணி) மூலமா வக்கீல் சந்துருவைத் தேடி வர்றாங்க. வக்கீலா வரும் சூர்யாவோடு சேர்ந்து அதிர்ச்சி யான பல உண்மைகளை எப்படி வெளியே கொண்டு வர்றாங்ன்றதுதான் கதை.

இது நிஜக் கதை... வழக்கறிஞரா இருந்தப்போ, பழங்குடி மக்களுக்காக வாதாடி, அநியாயமா ஜெயில்ல கிடந்த ஏழாயிரம் பேரை வெளியில் கொண்டுவந்தவர் முன்னாள் நீதிபதி சந்துரு. அவரேதான் இந்த உண்மைச் சம்பவத்துலயும் பெரிய அளவுல சட்டப் போராட்டம் நடத்தி பழங்குடி மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்தார். அந்த மக்களுடைய வாழ்க்கையையும் அவங்க எதிர்கொள்ளும் துயரங்களையும் 1995-ம் வருஷ பின்னணியில உணர்ச்சிபூர்வமான திரைவடிவமா ஆக்கியிருக்கார் இயக்குநர் த.செ.ஞானவேல்.”

“நான், டாப்ஸி நடிச்ச ‘ராஷ்மி ராக்கெட்’ இந்தி படம் பார்த்தேன். இந்த சினிமாவும் விளையாட்டு வீராங்கனை டூட்டி சந்தின் வாழ்க்கையை அடிப்படையா வெச்சு எடுக்கப் பட்டிருக்கு. இதுவரை வந்த விளையாட்டுத் தொடர்பான சினிமாக்கள் எல்லாம் எளிய பின்னணியிலேருந்து வந்து, விளையாட்டுல ஜெயிக்கறதைத்தான் காட்டியிருக்கு. ஜெயிச்ச பிறகு நடக்கும் பாலினச் சோதனையில பெண் சந்திக்கும் சவால்களைச் சொல்லுது ராஷ்மி ராக்கெட். நீங்க ரெண்டு பேரும் அவசியம் பாருங்க. சரி... மழை கொஞ்சம் விட்டிருக்கு. கிளம்பலாமா வினு?” என்று கேட்டாள் விமல்.

இருவருக்கும் பட்சணம் கொடுத்து அனுப்பி வைத்தார் வித்யா.

அரட்டை அடிப்போம்...

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்!

வினு, விமல், வித்யா - மூவரும் உங்களுக்காக இந்த இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பி யிருக்கிறார்கள். பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

இந்த இதழ் கேள்வி

`தற்கால இந்தியப் பெண்கள் சிங்கிளாக இருக்கவே ஆர்வம்காட்டுகிறார்கள். அவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை' என்று கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் ஒரு நிகழ்ச்சியில் பேசி யிருக்கிறார். இதுகுறித்து உங்கள் பார்வை என்ன?

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 16.11.2021

சென்ற இதழ் கேள்வி...

`தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பல பெண்கள் வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள். இவர்கள் சுயமாகச் செயல்படுவார்களா அல்லது அவர்கள் வீட்டிலுள்ள ஆண்களே பின்னணியில் அதிகாரம் செலுத்துவார்களா? உங்கள் பகுதியில் நிலைமை எப்படி இருக்கிறது?' - கேள்விக்கு வாசகிகளின் பதில்கள்...

ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

கோயில் யாத்திரைக்குச் சென்றபோது நிறைய நகைகள், பட்டுப்புடவை, களையான சிரித்த முகத் துடனிருந்த பெண்ணை அவரருகில் இருந்த மூதாட்டி, `என் மருமக பெரசிடென்ட்டு’ என்று சொன்னதால் ஆர்வமாகப் பேசினேன்.

“எப்படி வீட்டு வேலையையும் ஊர் வேலைகளையும் சமாளிப்பீங்க?”என்றேன்.

“விண்ணப்பம் தர தேர்தல் அலுவலகம் செல்வது, ஓட்டு எண்ணும் இடத்தில் இருப்பது, வெற்றி பெற்ற சர்டிஃபிகேட் வாங்குவது இதோடு என் பிரசிடென்ட் வேலை முடிஞ்சுடுங்க. மற்ற எல்லா பொறுப்பும் வீட்டுக் காரருதுதான். ஊர்க்காரங்களும் அவரைத்தான் பிரசிடென்ட் ஐயான்னு கூப்பிடறாங்க. கட்சி மீட்டிங்குக்கு போவது, கட்சிக்காரங்களுக்கு டாஸ்மாக் வாங்கித்தருவது, ஊர் வேலைகள் செய்வது, வரவு செலவு எல்லாமும் அவர் பொறுப்பு, பெண்கள்தான் தேர்தல்ல நிற்கணும் கிறதால என் பெயர், மத்தபடி எல்லாம் அவங்கதான். நான் வழக்கம்போல சமையல் செய்யுறேன் பாத்திரம் தேய்க்கிறேன்” என்றார்.

அந்தப் பெண்ணிடம் துளியும் வருத்தமோ, தன் பணிக்கான உரிமையைப் பெற வேண்டும் என்னும் துடிப்போ இல்லை. பேசும்போது கழுத்து அட்டிகையையும் பட்டுப்புடவை ஜரிகையையும் நீவிவிட்டுக் கொண்டிருந்தார். பி.ஏ படித்தவராம். படித்த இவர் கதியே இதுவென்றால் படிக்காதவர்கள் நிலை எப்படி இருக்கும்?

நகை, புடவை, சமையல் தவிரவும் வாழ்க்கை இருக்கிறது என்ற விழிப்புணர்வு பெண்களுக்கு வந்தால் ஒழிய இதற்கெல்லாம் விடியலே இருக்காது.

- வித்யா வாசன், சென்னை-78

உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் வெற்றி பெற்றது பாராட்டுக்குரிய விஷயம் என்றாலும், அவர்களை தேர்தலில் நிறுத்தியது, தேர்தல் பணிகளில் பக்கபலமாக இருந்தது எல்லாமே அவர்கள் வீட்டு ஆண்களைச் சார்ந்தது. பெண் வெற்றியாளர்கள் ஆண்களிடம் ஆலோசனை கேட்பது தவிர்க்க முடியாதது என்றாலும் அவர்கள் அதிகாரம் செலுத்தாமல், ஆரோக்கிய ஆளுமை செலுத்துவது சிறப்பு. ஒரு பெண் அதிரடியாக சமூக பிரச்னைக்குத் தீர்வு காணும்போது, பல மறைமுக எதிரிகளைச் சந்திக்க நேரிடலாம். அப்போது நிச்சயம் ஆண் துணை அவசியம். 1996-ல் திமுக வெற்றிபெற்ற பின் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது. மதுரை வில்லாபுரம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு லீலாவதியை நிறுத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். அவர் ரேஷன் பொருள்கள் கடத்தல், அரசு குடி தண்ணீரை விலைக்கு விற்பது, ரௌடியிசம் போன்றவற்றைத் தட்டிக் கேட்டதால், பட்டப்பகலில் ரவுடிகளால் நடு ரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற சரித்திரத்தை காலத்துக்கேற்ப ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறான் என்று சொல்வதில் தவறில்லை.

- சாந்தினி நடராஜன், மதுரை-9

வினுவின் வித்தியாசமான தகவல்!

1900-ம் ஆண்டுதான் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.