அரசியல்
அலசல்
Published:Updated:

‘ஃபேக்ட் செக்கிங்’ என்ற பெயரில் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் முயற்சி!

ஃபேக்ட் செக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபேக்ட் செக்கிங்

‘‘ஒரு செய்தியை, ‘பொய்யானது’ அல்லது ‘தவறானது’ என்று பி.ஐ.பி-யின் ஃபேக்ட் செக்கிங் பிரிவு சொல்லிவிட்டால், அந்தச் செய்தியை முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நீக்கிவிட வேண்டும்.

டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையைப் பரிசோதிக்கும் (Fact Checking) அதிகாரத்தை மத்திய அரசின் ‘பத்திரிகை தகவல் பிரிவு’க்கு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. “இது ஊடகங்களின் குரல்வளையை நசுக்கும் முயற்சி” என ‘எடிட்டர்ஸ் கில்டு’ உள்ளிட்ட பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருக்கின்றன.

 ‘ஃபேக்ட் செக்கிங்’ என்ற பெயரில் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் முயற்சி!

சோஷியல் மீடியாக்களின் வளர்ச்சி பெருவாரியான மக்களைச் சென்றடையத் தொடங்கியதிலிருந்து ‘ஃபேக் நியூஸ்’ என்ற வார்த்தை பிரபலமானது. தகவல்கள் எங்கிருந்து வருகின்றன, யாரிடமிருந்து வருகின்றன என்பதே தெரியாத ‘அநாமதேய பொய்ச் செய்திகள்’ அதிகரித்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை அரசியல் பின்னணிகொண்டவையாக இருக்கின்றன என்ற கூற்றையும் மறுப்பதற்கில்லை. தற்போது, டிஜிட்டல் தளத்திலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிய மத்திய அரசு களத்தில் இறங்குகிறது. அதற்கான அதிகாரத்தை, பி.ஐ.பி (Press Information Bureau) எனப்படும் மத்திய அரசின் ‘பத்திரிகை தகவல் பிரிவு’க்கு வழங்க முயற்சிகள் நடக்கின்றன.

மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் வரைவில், ‘‘ஒரு செய்தியை, ‘பொய்யானது’ அல்லது ‘தவறானது’ என்று பி.ஐ.பி-யின் ஃபேக்ட் செக்கிங் பிரிவு சொல்லிவிட்டால், அந்தச் செய்தியை முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால், சம்பந்தப்பட்ட ஊடகங்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்’’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 ‘ஃபேக்ட் செக்கிங்’ என்ற பெயரில் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் முயற்சி!

இது தொடர்பாக, இந்திய அளவில் செயல்பட்டுவரும் ‘எடிட்டர்ஸ் கில்டு’ எனப்படும் பத்திரிகை ஆசிரியர்களுக்கான அமைப்பின் தலைவர் சீமா முஸ்தபா, பொதுச்செயலாளர் ஆனந்த் நாத், பொருளாளர் ஸ்ரீராம் பவார் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், “செய்திகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் அதிகாரம் பி.ஐ.பி-க்கு வழங்கப்படுவது மிகவும் கவலைக்குரியது. பொய்ச் செய்தி எது என்பதை முடிவுசெய்வதற்கான அதிகாரத்தை அரசின் கையில் கொடுத்துவிட முடியாது. தவறான தகவல்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டால், அதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப் பல சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், தற்போது கொண்டுவரப்படும் திருத்தங்கள், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கிவிடும்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மத்திய அரசின் திட்டங்கள், சாதனைகளை பறைசாற்றும் செய்திகளை ஊடகங்களுக்கு வழங்குகிற ஓர் அமைப்புக்கு ‘ஃபேக்ட் செக்கிங்’ செய்யும் அதிகாரம் வழங்கப்படுவதென்பது மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களை இருட்டடிப்பு செய்யவே உதவும்!