
பொதுவாக சூதாட்டத்துக்கு (Gambling addiction) அடிமையாவது ஒன்று. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது (Internet gaming addiction) இன்னொன்று
இளைஞர்களைக் கொடும் வலைப்பின்னலாகச் சூழ்ந்துவருகிறது ஆன்லைன் சூதாட்டம். பெரும் பணத்தை இழந்துவிட்டு மனஅழுத்தம் தாளாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்து தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அரசியல் கட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய வலியுறுத்திவரும் நிலையில் இதுகுறித்து ஆய்வுசெய்ய நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்தக்குழு தனது அறிக்கையை முதல்வரிடம் அளித்துவிட்டது. அதனடிப்படையில் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. திரைமறைவில் சில இடங்களில் நடந்தாலும் அதற்கு அடிமையான சிலர் பயந்து பயந்து சென்று விளையாடுவதுண்டு. ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரை தடையோ, தயக்கமோ இல்லாமல் மொபைல் போனைக் கையில் வைத்திருக்கும் பலரும் அதில் வீழ்ந்துவிடுகிறார்கள். வங்கிப் பரிவர்த்தனைகளும் பெரும்பாலும் மொபைலுக்குள் வந்துவிட்டதால் பணம் வைத்து விளையாடுவது எளிதாகிவிட்டது. தொடக்கத்தில் ரிவார்டுகளையும் சலுகைகளையும் வழங்கி ஆசைகாட்டும் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள், படிப்படியாக உள்ளே இழுத்துப் பணம் பறிக்கத் தொடங்கிவிடுகின்றன. எதிரில் விளையாடுவது பெரும்பாலும் எந்திரங்கள் என்றே தெரியாமல் உணவு, உறக்கம், வேலை மறந்து மொத்தமாக அதில் விழுந்துவிடுகிறார்கள். இறுதியில் எல்லாவற்றையும் இழந்தபிறகு எதார்த்த வாழ்க்கை அவர்களை மிரட்ட, வேறு வழி தெரியாமல் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள்.
‘பணம் பறிபோகிறது, பிரச்னை வரப்போகிறது என்று தெரிந்தாலும் மீண்டும் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர்கள் சிக்குவது ஏன்? ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான வர்களை மீட்பது எப்படி?’
இந்தக் கேள்வியை முன்வைத்து மனநல மருத்துவர் விநாயக் விஜயகுமாரிடம் உரையாடினேன்.
‘‘பொதுவாக சூதாட்டத்துக்கு (Gambling addiction) அடிமையாவது ஒன்று. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது (Internet gaming addiction) இன்னொன்று. ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கியவர்கள் இந்த இரண்டுவித பாதிப்புகளுக்கும் உள்ளாகிறார்கள்.
சூதாட்டம் என்பது விட்ட பணத்தை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்ற வேட்கையில் மீண்டும் மீண்டும் விளையாடி இழப்புக்குள்ளாவது. இது இல்லாமல் அவர்களால் இருக்கமுடியாது. ஆனால் சமூகத்தில் அதற்குக் கட்டுப்பாடு இருக்கிறது. நினைத்த இடத்திலெல்லாம் விளையாட முடியாது. யாராவது பார்த்துவிட்டால் என்ன ஆவது என்கிற தயக்கமும் மனத்தடையும் அவர்களை ஒரு ஒழுங்குக்குள் வைத்திருக்கப் பார்க்கும். ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரை ஒரு இடத்துக்குப் போய்தான் விளையாட வேண்டும் என்றில்லை. போன் கையில் இருப்பதால் 24 மணி நேரமும் விளையாடலாம். இரண்டு தடவை பணம் வந்து, 20 முறை போனாலும் அவர்களுக்கு அது பெரிதாகத் தெரியாது. மீண்டும் மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் வந்துகொண்டேயிருக்கும்.

கஞ்சா, ஆல்ஹகால் போன்ற போதைப் பொருள்கள் மூளையில் எப்படி பாதிப்பை உருவாக்கி மீண்டும் மீண்டும் எடுத்துக்கொள்ளத் தூண்டுகிறதோ, அதைப்போலவே இந்த ஆன்லைன் சூதாட்டமும் மூளையில் மாற்றத்தை உருவாக்குகிறது. ஸ்கேனிங் போன்ற ஆராய்ச்சிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. செய்யச் செய்ய ‘அது இல்லாமல் இருக்க முடியாது’ என்ற நிலை (Habit Forming) வந்துவிடும். மற்ற எல்லாவற்றின் மீதான விருப்பங்களும் மறைந்துபோகும்.
ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டங்களில் 20 பேர் ஈடுபடுகிறார்கள் என்றால் 20 பேரும் அடிமையாகிவிட மாட்டார்கள். 4 அல்லது 5 பேர்தான் கட்டுப்பாட்டை மீறிப்போய் மீளமுடியாத அளவுக்குச் சிக்கிக்கொள்வார்கள். 20 பேரில் 4 பேர் மட்டும் இப்படிச் சிக்கிக்கொள்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு குணாதியசங்கள் உள்ளன. சிலர், த்ரில் தரக்கூடிய சின்னச்சின்ன விஷயங்களை விரும்புவார்கள். அதிலிருந்து விலகவே மாட்டார்கள். குடும்பப் பிரச்னைகள், பணியிடப் பிரச்னைகள் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு, அதிலிருந்து விடுபடுவதற்காக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். இவர்களும் ஒரு கட்டத்தில் அதிலேயே மூழ்கிவிடுவார்கள். இன்னொரு முக்கிய காரணம், ஜெனடிக். தாத்தாவோ, அப்பாவோ இதுமாதிரியான விஷயங்களுக்கு அடிமையாக இருந்தால் அடுத்த தலைமுறையின் சுபாவத்தில் அந்த எண்ணம் ஒட்டியிருக்க வாய்ப்புண்டு.
இழப்புகள் ஏற்பட ஏற்பட, அடுத்தடுத்த கட்டங்களுக்கு இவர்கள் சென்று கொண்டேயிருப்பார்கள். சர்வதேச அளவில் International Classification of Diseases (ICD) என்று ஒரு வரையறை உண்டு. அதன்படி ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானவர்கள், எவ்வளவு இழப்புகளைச் சந்தித்தாலும் எப்படியும் அவற்றையெல்லாம் மீட்டுவிட முடியும் என்று மிக ஆழமாக நம்புவார்கள். ‘இல்லை, நீ மேலும் மேலும் இழக்கப்போகிறாய்' என்று எத்தனை பேர் சொன்னாலும் அவர்கள் கேட்கமாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை அவ்வளவு உறுதியாக இருக்கும்.
பணத்தை இழந்து, குடும்பம் பாதித்து, வேலை பாதித்து சொந்தவாழ்க்கையில் இழப்புகளைச் சந்தித்த பிறகுதான் கொஞ்சம் கண் திறந்து இதிலிருந்து விடுபட நினைப்பார்கள். இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட முதல் வழி, ‘நாம் மோசமான ஒரு வலையில் விழுந்திருக்கிறோம். இதிலிருந்து விடுபட்டு வரவேண்டும்' என்று பாதிக்கப்பட்டவர் நினைக்க வேண்டும். அப்படி நினைத்தால் மட்டுமே ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து வெளியே வரமுடியும். மற்றவர்கள் என்ன சொன்னாலும் அவர்கள் காதில் ஏறவே ஏறாது. மாத்திரைகள், கவுன்சலிங் எல்லாம் இருக்கின்றன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர் மனம் திரும்பாவிட்டால் அதனால் எந்தப் பயனும் கிடைக்காது.
இப்படி அடிமையானவர்களை மீட்க குடும்பத்தின் ஒத்துழைப்பு ரொம்பவே முக்கியம். வீட்டில் ஒருவர் இதில் விழுந்துவிட்டார் என்றால் அவரிடம் மனம் திறந்து பேசவேண்டும். பாதிப்புகளைப் புரிய வைக்கவேண்டும். ‘உங்கள் உடல்நிலை, மனநிலை, வேலை, குடும்பம் எல்லாமே சீரழிந்துவிடும்’ என்பதை எடுத்துச் சொல்லவேண்டும். எளிதில் அவர்கள் காதுகளில் ஏறாது. திரும்பத் திரும்பப் பேசி அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். இப்படி வருபவர்களுக்கு, ‘இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட வேண்டும்' என்ற எண்ணத்தை உருவாக்குவதுதான் முதல் சிகிச்சை.

ரொம்பவும் கவலைதரும் விஷயம் என்னவென்றால், இன்று மொபைலும் இன்டர்நெட்டும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கின்றன. வளரிளம் பருவத்தில் இருக்கும் ஒரு பிள்ளை ஆன்லைன் சூதாட்டத்தில் இறங்கினால் அந்தக் குழந்தையின் எதிர்காலமே பாதிக்கப்படும். நாளாக நாளாகத் தீவிரமாகிவிடும். அப்படி பாதிக்கப்படும் நிறைய பிள்ளைகளை நான் சந்திக்கிறேன். ஐ.பி.எல் நடந்த நேரத்தில் ஆன்லைன் சூதாட்ட ஆப்களில் பணத்தைக் கட்டி இழந்த 25-35 வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள் என்னிடம் சிகிச்சைக்காக வந்தார்கள்.
குழந்தைகளோ, பெரியவர்களோ யாராக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் மொபைலைப் பயன்படுத்தினால் வீட்டிலிருக்கும் மற்றவர்கள் கண்காணிக்க வேண்டும். கேள்வி எழுப்ப வேண்டும். வீடுகளில் உரையாடலே குறைந்துவிட்டது. வெளிப்படைத் தன்மையோடு உரையாடும் சூழலை உருவாக்கவேண்டும்.
பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள், ஆன்லைன் கேமிங், சூதாட்டம் போன்ற பிரச்னைகளை நோய்கள் என்றே வரையறுக்கின்றன. அதில் சிக்கிக்கொள்பவர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களின் இயல்பும் மாறுகிறது. போதைக்கு அடிமையானவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்வதைப் போலவே இவர்களும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மிகவும் மோசமான வலைப்பின்னல் இது. இணையம், மொபைல் என தொழில்நுட்பத்தை நம்மால் தவிர்க்க முடியாது. ‘போனைத் தொடாதே', ‘இன்டர்நெட் பயன்படுத்தாதே' என்று சொன்னால் பிள்ளைகளுக்குக் கோபம்தான் வரும். உங்களுக்குத் தெரியாமல் பயன்படுத்துவார்கள். அவற்றையெல்லாம் எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். நண்பர்களோடு கலந்து பழகி வெளியில் போய் விளையாடச் செய்யவேண்டும். பெரியவர்கள் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தலாம். குடும்பத்தோடு அதிகநேரம் செலவு செய்யலாம். எல்லாவற்றுக்கும் சமமாக நேரம் ஒதுக்கிவிட்டு, வெறும் பொழுதுபோக்காக ஆபத்தில்லாத ஆன்லைன் விளையாட்டுகளை ஆடுவது பிரச்னையில்லை. மன அழுத்தம் இருக்கும் நேரத்தில் இதுபோன்ற சூதாட்டங்களில் சிக்கினால், அதுமட்டுமே தீர்வு என்ற மனநிலை வந்துவிடும்’’ என்கிறார் விநாயக் விஜயகுமார்.
சூதாட்டங்களிலிருந்து மீள்வோம்... வாழ்வோம்!